
சீனாவின் அதிவேக ரயிலில் பயணம் செய்த இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவர் ஒருவர், சீன ரயிலின் வேகமும் வசதியும் தன்னை ஈர்த்ததாகப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சீனாவின் அதிவேக ரயிலில் பயணம் செய்த டெல்லியைச் சேர்ந்த தொழில்முனைவரான ஆகாஷ் பன்சால் என்பவர், அதன் வேகம், வசதி, எளிமையான அனுபவம் என அனைத்துமே தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 1,600 கி.மீ பயணம்
ஸ்கைவிக்கின் இணை நிறுவனரான ஆகாஷ் பன்சால், சீனாவில் தனது தொழில்முறை பயணத்துக்காக ஒரு நாளில் 1,600 கி.மீ பயணம் செய்ததாகவும், தனது மீட்டிங்கை முடித்துவிட்டு இரவு தான் வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மூன்று மணி நேர சந்திப்புக்காக ஒரு நாளில் 1,600 கி.மீ பயணம் செய்தேன். காலையில் 800 கி.மீ. பயணம், பின்னர் தொழில்முறை மீட்டிங், பிறகு மீண்டும் 800 கி.மீ. பயணம் செய்து வீடு திரும்பினேன். இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்தது. சீனாவில் வாழ்க்கை எவ்வளவு வசதியாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் நிலையங்களில் கிடைத்த அனுபவம்
ஆகாஷ் பன்சால் தனது தொடர்ச்சியான பதிவுகளில், சீன ரயில் நிலையங்களின் பரப்பளவையும், அங்கு பின்பற்றப்படும் அமைப்பையும் அவர் பாராட்டியுள்ளார். “சீனாவில் ரயில் நிலையங்கள் மிகப்பெரியவை. ரயில் ஏறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் நடைமேடைக்கு சென்றால் போதும். தேசிய ஐடி கார்டு அல்லது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் கதவு தானாகத் திறக்கும். ஒருவேளை நாம் முன்பே வந்தால் டிக்கெட்டை விரைவாக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் மிகவும் எளிமையானதே.” மேலும் அவர், ஆயிரக்கணக்கான இருக்கைகள், அதில் 30% மசாஜ் நாற்காலிகள் என்று குறிப்பிட்ட அவர், “100 ரூபாய்க்கு ஒரு மசாஜ் நாற்காலியில் அமரலாம். அங்கு எல்லாமே முறையாக, எந்தவித குழப்பமும் இன்றி திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்
கேட்காமல் கிடைத்த சேவை - இதுவரையில் எங்கும் பார்த்ததில்லை!
சீன ரயில் நிலையங்களின் சேவை வசதி குறித்து பேசிய ஆகாஷ் பன்சால், நான் ரயில் நிலையத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தேன். அந்த நேரத்தில், அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து, என் டிக்கெட்டை பார்த்து, வேகமாக புறப்படும் மற்றொரு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளச் சொல்லி என்னை கவுண்டருக்கு அழைத்துச் சென்றார். “நான் அவரிடம் எதுவுமே கேட்கவில்லை. அவர் தானாகவே தேவையான உதவியைச் செய்தார். நினைத்திருந்தால், அவர் என்னைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.”
ஆகாஷ் பன்சாலின் பயண அனுபவம் பலரையும் கவர்ந்தது. சீனாவின் ரயில்வே வசதிகள் குறித்த பாராட்டுகள் குவிந்ததுடன், சிலர் நகைச்சுவையான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். பயனர் ஒருவர் “ஜூமில் மீட்டிங் நடத்தலாமே?” என்று கேள்வி எழுப்ப, பன்சால், “இது ஹார்ட்வேர் தொடர்பான சந்திப்பு. அதை ஆன்லைனில் நடத்த இயலாது” என்று அவர் பதிலளித்தார்.
மற்றொரு பயனர், “சீனாவின் அதிவேக ரயில்கள் வியக்க வைக்கும் வகையில் உள்ளன. வேகம், நம்பகத்தன்மை, பொருளாதாரம் அனைத்தும் சேர்ந்த ஒரு சிறந்த முறை அங்கு பின்பற்றப்படுகிறது. இந்தியாவும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.” என்றார். மேலும், “இது வெறும் வசதி மட்டுமல்ல, தொழில்முனைவோர்களுக்கான நேரத்தைச் சேமிக்கும் முக்கியமான உள்கட்டமைப்பாகும்” என்று குறிப்பிட மற்றொருவர், “இதுபோன்ற ரயில்கள் இந்தியாவிற்கு தேவையில்லை, விமான நிலைய வசதியே போதுமானவை” என்று தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments