
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அப்போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய வீரர்கள் கை கொடுக்காமல் சென்றது சர்ச்சையை உண்டாக்கியது.
சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு அப்போதே இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடிக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை.
அத்துடன் போட்டி முடிந்த பின் இந்திய அணிக்கு கை கொடுப்பதற்காக பாகிஸ்தான் அணியினர் ஜென்டில்மேன்களாக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கேப்டன் சூரியகுமார் – சிவம் துபே உள்ளிட்ட இந்திய வீரர்கள் கை கொடுக்காமல் சென்றனர். அதனால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் கை கொடுக்காமல் விளையாட்டுணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட இந்தியா மீது பாகிஸ்தான் அணி புகார் செய்தது.
இந்நிலையில் அப்போட்டியில் டாஸ் வீசுவதற்கு முன்பாக இரு கேப்டன்களும் கை கொடுத்துக்கொள்ள வேண்டாம் என்று போட்டியின் நடுவர் ஆண்டி ஃபைக்ராப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. அதன் அடிப்படையில் போட்டி நடுவர் பைகிராஃப்ட் 2.1.1 ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாகவும் பாகிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே ஃபைகிராப்ட் அவர்களை எஞ்சியப் போட்டிகளில் நடுவராக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. “ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் ஸ்பிரிட் தொடர்பான எம்சிசி விதிமுறைகளைப் போட்டி நடுவர் மீறியது தொடர்பாக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது”
“எனவே ஆசியக் கோப்பையிலிருந்து நடுவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது” என்று கூறியுள்ளார். ஒருவேளை ஐசிசி தங்களுடைய கோரிக்கையை ஏற்காவிட்டால் ஆசியக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஐசிசி என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments