Ticker

6/recent/ticker-posts

இளம் மருத்துவர் திடீர் மரணம்.. 6 மாதங்களுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!


கர்நாடகாவில் இளம் மருத்துவர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக 6 மாதங்களுக்குப் பின் அவரது கணவரே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி. 31 வயதான இருவருக்கும், 28 வயதான கிருத்திகா என்பவருக்கு இடையே கடந்த 2024 மே மாதம் திருமணம் நடைபெற்றது. மருத்துவர்களான இருவரும் மாரத்தஹள்ளியில் தங்கி, விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். டாக்டர் தம்பதி தங்களது இல்லற வாழ்க்கையை இனிமையாக தொடங்கிய நிலையில்,கிருத்திகாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவரான மகேந்திராவே சிகிச்சை அளித்தபோதும், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிருத்திகாவுக்கு உடல் நலக்குறைவு உள்ளதை மூடி மறைத்தாக கூறி, அவரின் பெற்றோர் மீது மகேந்திரா கடும் கோபம் கொண்டுள்ளார்.

முதலாம் ஆண்டு திருணமான நாளை எதிர்பார்த்து காத்திருந்தபோது, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கிருத்திகா திடீரென மயக்கம் அடைந்து, சுயநினைவை இழந்துள்ளார். உடனே, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், உடலை உடற்கூராய்வு செய்வதற்கு மகேந்திர ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது மாமனார் முனி ரெட்டியையும் கட்டாயப்படுத்தி எதிர்ப்பு தெரிவிக்க வைத்துள்ளார். ஆனால், கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவர் என்பதால், அவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கையில் இறப்புக்கான காரணம் குறித்த கோடிட்ட இடம் நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருத்திகாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஊசிகளை கைப்பற்றி தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தடயவியல் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், அதிக மயக்க மருந்து கொடுத்து கிருத்திகா கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் தந்தை முனி, போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகேந்திர ரெட்டியை போலிசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அறுவை சிகிச்சை அரங்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் மயக்க மருந்தான புரோபோஃபோலை, கிருத்திகா உடம்பில் செலுத்தியது தெரியவந்தது. நரம்பு வழியாக அதிக அளவில் மருந்து செலுத்தப்பட்டதால், சுவாச பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்ததும் அம்பலமாகியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரான மகேந்திர ரெட்டி, தான் கற்ற மருத்துவ அறிவை, தவறாக பயன்படுத்தி தனது மனைவியையே கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போன்று நாடகமாடியதும் வெட்ட வெளிச்சமானது. பின்னர், இயற்கைக்கு மாறான வழக்கு என்பதை மாற்றி, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், தனது மகளிடம் தனியார் மருத்துவமனை அமைத்துக் கொடுக்க கூறி மகேந்திர ரெட்டி, நெருக்கடி கொடுத்ததாக கிருந்திகாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.  அத்துடன், வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமண பந்தந்தை மீறிய உறவு இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், உடல் நலக்குறைவை காரணம் காட்டி, முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்த கிருத்திகாவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கிருத்திகாவை, மகேந்திர ரெட்டி மட்டுமே திட்டமிட்டு கொலை செய்தாரா? அல்லது யாரேனும் தூண்டுதலின்பேரில் கொலைபாதக செயலில் ஈடுபட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு அதிக மயக்க மருந்து செலுத்தி கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் என நாடகமாடிய டாக்டர் கணவர், 6 மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் கதிகலங்க வைத்துள்ளது.

news18

 


Post a Comment

0 Comments