Ticker

6/recent/ticker-posts

கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!


மதுரையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரும், இவரது ஆண் நண்பரும் இரவு நேரத்தில் காருக்குள் தனியாக இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை அடித்து உடைத்து, அந்த இளைஞரை அரிவாளால் தாக்கி, அந்த பெண்ணை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து மயக்கம் தெளிந்த பிறகு, அதிகாலை நேரத்தில் அந்த இளைஞர், தனது மொபைல் போனில் இருந்து 100 காவல் உதவி எண்ணை அழைத்த பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை தேடி வந்த போலீசார், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் முள்புதர் பகுதியில் அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த இருசக்கர வாகனத்தை வைத்து காவல் துணை ஆணையர் தேவநாதன், உதவி ஆணையர் வேல்முருகன் மற்றும் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, தொடர்புடைய நபர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் சிவகங்கையை சேர்ந்த குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் என்ற குற்றப்பின்னணியுடைய 3 பேர் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார், அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் துடியலூர் அருகே பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், அவர்களை பிடிக்க சென்றபோது, போலீசார் ஒருவரின் கையில் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதனால், போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காயங்களுடன் அவர்கள் மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

kalaignarseithigal

 


Post a Comment

0 Comments