Ticker

6/recent/ticker-posts

50 வருட தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதிய இந்திய சிங்கப்பெண்கள்.. மகளிர் உ.கோ வென்று புதிய சரித்திரம்


ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் இரண்டாம் தேதி நவி மும்பையில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் போராடி 298/7 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 3 ரன்கள் அடித்து அசத்தினார்கள். தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக அயபோங்கா காகா 3 எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் லாரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். 

அவருடன் இணைந்து 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டஸ்மின் பிரிட்ஸ் 23 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இந்தியா அபாரம்: அடுத்து வந்த அனக்கே போஸ்க் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் மறுபுறம் அசத்திய லாரா அரை சதத்தை அடித்தார். அவருடன் இணைந்து சுனே லஸ் நிதானமாக விளையாட முயற்சித்த போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் பகுதி நேர பவுலரான ஷபாலி வர்மாவை பந்து வீச அழைத்தார். ஆச்சரியப்படும் வகையில் அப்போது லஸை 25 ரன்னில் காலி செய்த ஷபாலி வர்மா அடுத்து வந்த மாரிசான் காப்பையும் 4 ரன்னில் அவுட்டாக்கி பெரிய திருப்பு முனையை உண்டாக்கினார். ஆனாலும் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய லாரா சதத்தை அடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும் மறுபுறம் பினாலோ ஜாப்டா 16, அனேரி டெர்க்சன் 35 ரன்களில் தீப்தி சர்மா சுழலில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். மறுபுறம் தொடர்ந்து போராடிய லாராவும் கடைசியில் 101 ரன்களில் தீப்தி சர்மா சுழலில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் நடினே டீ கிளார்க் 18 ரன்கள் எடுத்தும் 45.3 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் மகளிர் கிரிக்கெட்டின் புதிய உலகச் சாம்பியனாக இந்தியா சாதனை படைத்தது. அத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

1973 முதல் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பையில் 1978 முதல் விளையாடும் இந்தியா தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தது. குறிப்பாக 2005, 2017இல் ஃபைனல் வரை சென்ற இந்தியா கோப்பையை கோட்டை விட்டது. ஆனால் இன்று அந்த 50 வருட சோகத்தை மாற்றி எழுதியுள்ள இந்திய சிங்கப்பெண்கள் அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, சபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

crictamil

 


Post a Comment

0 Comments