Ticker

6/recent/ticker-posts

கம்பளை வழிவந்த ஃபாரா ரூமி, இலங்கை வம்சாவளி முதல் சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரானார்!


கம்பளை வழிவந்த ஃபாரா ரூமி மொஹிதீன் என்ற சுவிட்சர்லாந்து அரசியல் ஆளுமை, சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளமை இலங்கைக்குப் புகழ் சேர்க்கும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகின்றது!

1991டிசம்பர் 28ம் திகதி இலங்கை மேல் மாகாணத்திலுள்ள கொழும்புவில் பிறந்துள்ள இவர், அங்கு வாழ்ந்த கணினித்துறை நிபுணரான முகமது ரூமி மொஹிதீன் மற்றும் இஸ்ஃபியா ரூமி ஆகியோரின் மகளாவார்; 

இவருடன் கூடப் பிறந்தவர்கள்  சகோதரி ஒருவரும் சகோதரருமாவார். 

கம்பளை - கஹட்டபிட்டிய தேவராஜ மாவத்தை அஜீஸ் என்பவரின் கொள்ளுப் பேத்தியான இவர் JNW LankaTours தலைவர் ஆமி ஃபரீத்  அவர்களின் பேத்தியாக இருப்பதால் கம்பளை வழிவந்தவராகக் கருதப்படுகின்றார்.

கொழும்பிலுள்ள தனியார் ஆங்கிலிகன் மற்றும் உறைவிடப் பாடசாலையான பிஷப் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள ஃபாரா ரூமி, 1998ம் ஆண்டு தனது ஆறாவது வயதில், குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து, அங்கு கிரெஞ்சனிலுள்ள பொதுப் பள்ளியில் பயின்றுள்ளார்.

ஃபாரா, தனது கட்டாயப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தாதியர் பயிற்சிப் படிப்பை முடித்துவிட்டு, அதே துறையில் உயர் கல்வி டிப்ளோமாக்களையும் பெற்றுள்ளார்.

தொழில்முறை வாழ்க்கை:

ஃபாரா ரூமி, இருதய வடிகுழாய் ஆய்வகத்தில் தாதியர் துறைசார் நிபுணராகவும், இருதயவியல் நிபுணராகவும் பணியாற்றி வருபவர். 

தற்போதும் கூட, தொழிற்கல்விப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஃபாரா, ஆர்காவ்-சோலோதர்ன் பிராந்தியத்திலுள்ள தாதி ஊழியர்களுக்கான தொழிலாளர் சங்கத்தின் இணைத் தலைவருமாவார்.

அரசியல் வாழ்க்கை:

2021ம் ஆண்டு சோலோதர்ன் மாகாணத்தின் சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக கன்டோனல் கவுன்சிலின் உறுப்பினராகத் தனது 30வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஃபாரா ரூமி, கன்டோனல் கவுன்சிலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, ஏற்கனவே தொழில்முறை மற்றும் தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக, 2020ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்துகொள்ள முடிந்தது. 

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தாதியர் துறையில் அவருக்கிருந்த அனுபவமும், அர்ப்பணிப்புடன் அவர் சுகாதாரத்துறைக்கு ஆற்றிய பணியுமே  தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளில் அவரை ஈடுபட வைத்தது எனலாம்.

2023ம் ஆண்டு,  சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்சிஸ்கா ரோத் மீண்டும் தேசிய கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு, மாநில கவுன்சில் தேர்தலின் இரண்டாவது சுற்றில் ஓர் இடத்தை வென்ற பிறகு, முதல் மாற்றாக தேசிய கவுன்சிலுக்குச் சென்று பிரான்சிஸ்கா ரோத்தின் இடத்தைப் பிடித்தவர் ஃபாரா ரூமியாவார். 

இதனால் ஃபாரா ரூமி, 2023ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் சோலோதர்ன் கன்டோனல் நாடாளுமன்றத்திலிருந்து ராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று தொடக்கம் ஃபாரா ரூமி,  சுவிஸ் கூட்டாட்சி சட்டமன்றத்தின் சமூக ஜனநாயக நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்துவரும் நிலையில், வெளியுறவுக் குழுவில் சோசலிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றார்.

அத்துடன் தேசிய கவுன்சிலின் நோய் எதிர்ப்பு சக்தி குழுவின் மாற்று உறுப்பினராகவும் பணியாற்றிவரும் நிலையில், பாராளுமன்றத்தில் அவரது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் சுகாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை மற்றும் சம வாய்ப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன.

தாதியர் தொழிற்சங்கமான ஆர்காவ்-சோலோதர்ன் பிரிவின் இணைத் தலைவராகவுள்ள இவர் குறிப்பாக தாதியர் மற்றும் சுகாதார அமைப்பின் நிலைமையை மேம்படுத்துவதற்காகப் பாடுபட்டு வருகின்றார்.

இவரது வெளியுறவுக் கொள்கையில், அமைதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சட்டமன்ற முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் இவர் அவ்வப்போது சமர்ப்பித்து வருகின்றார்.

அத்துடன் 2021ம் ஆண்டு முதல் இவர்,  கிரென்சென் நகரத்திற்கான நகராட்சி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். 

இவர் இயற்கைமயமாக்கல் ஆணையத்தின் உறுப்பினராகவும், ஸ்பைடெக்ஸ் கிரென்சென் வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

இதற்கு மேலாக இவர், குறைபாடுகள் உள்ளவர்களை ஆதரிக்கும் ரோடானியா அறக்கட்டளையின் அறக்கட்டளை வாரிய உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.

சோலோதர்ன் மாகாணத்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் குடியேறிகள் சங்கத்தின் இணைத் தலைவராக இருந்து வரும் ஃபாரா ரூமி,  சுவிஸ் கூட்டாட்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கைப் பாரம்பரியப் பெண் என்பதுடன், 2023ம் ஆண்டு முதல் சமூக ஜனநாயகக் கட்சிக்கான சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சிலில் பணியாற்றியும் வருகின்றார்.

அரசியல்வாதி, செவிலியர், மருத்துவ நிபுணர் மற்றும் ஆசிரியரான ஃபாரா ரூமி சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் துறை தொடர்பானவற்றுக்கு ஆதரவளிப்பவராகவும் இருந்து வருகிறார்.

சமூக ஜனநாயக பாராளுமன்றக் குழு 2025 டிசம்பரில் தொடங்கவுள்ள தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவர் பதவிக்கு இவரைப் பரிந்துரைக்கலாம் என நம்பப்படுகின்றது!

அவரது அரசியல் வாழ்க்கை சுவிட்சர்லாந்தில் நீண்டு நிலைக்க எமது நல்லாசிகள்!

செம்மைத்துளியான்.

 


Post a Comment

0 Comments