ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான மற்றும் விறுவிறுப்பான ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நேற்று மே 2 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஐபிஎல் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் இந்த மோதலில், மும்பையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

மும்பையின் தடுமாற்றம்

சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆரம்பம் முதலே சென்னை பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசி மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் நமன் தீர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் குவித்தார், இதுவே அந்த அணி ஒரு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது.

சென்னை சூப்பர் கிங்ஸின் அபாரமான பேட்டிங்

160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சாம்சன் 11 ரன்களுக்கும், உர்வில் படேல் 24 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் விளாசினர். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 67* ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

வெற்றி இலக்கை எட்டிய சிஎஸ்கே

மிகவும் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 18.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட்டின் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் மும்பைக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

இந்த த்ரில் வெற்றி சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த தோல்வி புள்ளிப் பட்டியலில் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது.

zeenews