தெருவோரம் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தின் நிழலில் தான் முதன்முதலாக அவர்கள் சந்தித்தார்கள்.

சந்திரன், ஏழை வீட்டுப் பிள்ளை.

தினேஸ் . பணக்கார வீட்டுப் பிள்ளை.

ஆனால் அந்தச் சந்திப்பு நேரடியாக நிகழவில்லை.

சந்திரன் வழக்கம்போல் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். கல்வியே தனது எதிர்காலத்தை மாற்றும் ஆயுதம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவன் அவன்.

அன்று அவன் முக்கியமான பாடமொன்றில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, "சரார்..." என்ற ஓசையுடன் ஒரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

தலையை நிமிர்ந்து ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கினான்.

பைக்கில் இருந்த இளைஞன் இறங்கவே இல்லை. கைப்பேசியில் யாரோடோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான். அவனது குரலில் பதற்றமும் வேதனையும் கலந்திருந்தது.

சந்திரன் கவனித்தான்.

திடீரென்று அந்த இளைஞன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்.

சந்திரன் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை.

புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடினான்.

அருகில் வந்த ஆட்டோவை நிறுத்தி, அந்த இளைஞனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.

அங்கே சேர்த்த பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது.

அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை.

உறவினர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அவன் சட்டைப் பையில் இருந்த ஒரு உறையை எடுத்துப் பார்த்தான்.

அதைப் படித்ததும் அவனது கைகள் நடுங்கின.

அது ஒரு காதல் கடிதம்.
"தினேஸ்...

நம் காதலை என் பெற்றோரிடம் இனி எடுத்துரைக்க முடியாது.

குடும்ப கௌரவத்திற்காக நம் காதலைத் தீயிட்டு எரிக்க முடிவு செய்து விட்டார்கள்.

இனி நமக்குள் சந்திப்பு இருக்காது.

மேலோகமோ, எமலோகமோ எனக்குத் தெரியாது...

ஆனால் நாம் சந்திப்போம்.

நிச்சயம் சந்திப்போம்.

உன் நினைவோடு பயணிக்கிறேன்.

பாதையில் அல்ல... பாடையிலே...

இப்படிக்கு,
உன்னை நேசித்து பிரியும்
பிரியதர்ஷினி."

கடிதத்தை வாசித்து முடித்த சந்திரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அப்போதுதான் பைக்கில் ஏதேனும் தகவல் இருக்கலாம் என்று நினைத்து விரைந்தான்.

அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஆவணங்களிலிருந்து உறவினர்களின் எண்ணைக் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் தினேஸின் பெற்றோர் பதறியபடி மருத்துவமனைக்கு வந்தனர்.

"என் மகனுக்கு இதயப் பலவீனம் இருக்கிறது. அதிர்ச்சி தாங்க மாட்டான் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்கள். என்ன நடந்தது?" என்று தாய் கதறினார்.

சந்திரன் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்தான்.

உண்மையைச் சொல்லலாமா?மறைக்கலாமா?கொடுக்கலாமா?வேண்டாமா?
என்று குழம்பினான்.

தினேஸின் தந்தை பல மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

முகத்தில் நம்பிக்கையும் பயமும் மாறி மாறி தோன்றின.

இறுதியில் மருத்துவர் வெளியே வந்தார்.
"மன்னிக்கவும்... அவரைக் காப்பாற்ற முடியவில்லை..."
என்ற ஒரே வாக்கியம் அந்தக் குடும்பத்தை சிதறடித்தது.

தாயின் கதறல் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது.

சந்திரனின் கண்களும் கலங்கின.

தினேஸின் பொருட்களை ஒப்படைக்கும் போது கூட அந்தக் கடிதத்தை மட்டும் கொடுக்கவில்லை.

ஏதோ ஒரு காரணத்தால் அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

அந்த இரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

பிரியதர்ஷினி யார்?

அவள் உண்மையிலேயே ஏதாவது விபரீத முடிவு எடுத்தாளா?

தினேஸுக்குத் தெரியவந்ததால்தான் இப்படி நடந்ததா?
என்று எண்ணங்கள் துரத்தின.

மறுநாள் காலையில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றான்.

தினேஸின் உடலைப் பெற நண்பர்களும் உறவினர்களும் காத்திருந்தனர்.

சந்திரனும் ஓரமாக நின்றான்.

அப்போது அருகில் இருந்து ஒரு வயதான பெண்மணியின் அழுகுரல் கேட்டது.
"என் பேத்தியைக் காட்டுங்க... கடைசியாக அவள் முகத்தைப் பார்க்கணும்..."

தாதியர் அவரை சமாதானப்படுத்தி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

சந்திரனும் அறியாமல் அந்தப் பக்கம் பார்த்தான்.

சிறிது நேரத்தில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம் திறக்கப்பட்டது.
"மகளே... பிரியதர்ஷினி... ஏன்டி இப்படி செய்தாய்?" என்று பாட்டி கதறித் துடித்தார்.

"பிரியதர்ஷினி..."

அந்தப் பெயர் சந்திரனின் காதுகளில் இடியென விழுந்தது.

அவன் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்.

அதே நேரத்தில் அருகில் இருந்த தினேஸின் முகத்தை மூடியிருந்த துணியும் சற்றே விலகியது.

இரு முகங்களும் அவன் பார்வையில் ஒரே நேரத்தில் தென்பட்டன.

ஒருவர் காதலுக்காக உயிரை விட்டவள்.

மற்றொருவர் அந்தச் செய்தியைத் தாங்க முடியாமல் உயிர் பிரிந்தவன்.

அப்போது தான் கடிதத்தின் கடைசி வரி சந்திரனின் மனதில் மீண்டும் ஒலித்தது.

"மேலோகமோ... எமலோகமோ...
ஆனால் நாம் சந்திப்போம்..."

சந்திரன் மெதுவாகக் கண்களை மூடினான்.

"ஓ... இதுதானா அந்தச் சந்திப்பு..." என்று மனதிற்குள் உரைத்தான்.

சிறிது நேரத்தில் இரண்டு உடல்களும் வெவ்வேறு திசைகளில் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆனால் அவர்கள் காதல் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

தன் சட்டைப் பையில் இருந்த கடிதத்தை எடுத்தான் சந்திரன்.

ஒரு முறை பார்த்தான்.

பிறகு அதை மெதுவாகக் கசக்கி அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டான்.

ஏனெனில்...

சந்தித்த பின்னே, அந்தக் காகிதத்திற்கு என்ன அவசியம்?

(முற்றும் )

தளவாய் இ.சாந்தா