Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமிய சிந்தனைகள்


"நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாக தங்கள் இரண்டு முன் கைகளையும் கழுவுவார்கள்.பின்னர் தொழுகைக்கு வுழு செய்வது போல் வுழு செய்வார்கள்.பின்னர் விரல்களை தண்ணீரில் மூழ்க செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப் பாகத்தை கோதுவார்கள்.பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள்.பின்னர் தங்கள் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்."என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

(புஹாரி:-248)

நபி(ஸல்) அவர்களிடம் "மனிதர்களில் சிறந்தவர் யார்?" என வினவப்பட்டது.அதற்கு நபி(ஸல்) அவர்கள் "தனது உள்ளத்தில் இருப்பவற்றினை அகற்றுபவனும்,உண்மை பேசுபவனும் ஆவன்"என்று கூறினார்கள்.அதற்கு நபித் தோழர்கள் "உண்மை பேசுபவனை நாம் அறிவோம்.ஆனால்,உள்ளத்தில் இருப்பவற்றினை அகற்றுபவன் என்றால் யார்?"என வினவினார்கள்.அதற்கு நபி(ஸல்) அவர்கள் "உள்ளத்தில் இருப்பவற்றினை அகற்றுபவன் என்றால் இறை அச்சமுடையவன்,பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்.அவனிடம் எந்த பாவமும்,கோபமும்,குரோதமும் இருக்காது"என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது:தொழுகைக்கு அறிவிப்பு செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பான அதான் கேட்காமல் இருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் வெகு தூரத்திற்கு பின் வாங்கி ஓடுகிறான்.அதான் முடிந்ததும் பள்ளிவாசலினுள் மீண்டும் வருகிறான்.பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் பின் வாங்கி ஓடுகிறான்.இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் பள்ளிவாசலினுள் வந்து தொழுது கொண்டு இருக்கும் மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தை போடுகிறான்.அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் நினைத்து பறக்கும் படி கூறுகிறான்.இறுதியில், அந்த மனிதருக்கு தான் எத்தனை ரக்காதுகள் தொழுதோம் என்பது கூட தெரியாமல் போய் விடும்.இதை அபூ ஹூரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்:-636)

 இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என் சமுதாயத்துக்கு சிரமம் ஏற்படும் என்று நான் கருதாமல் விட்டு இருந்தால் எல்லா தொழுகைகளுக்கும் முன்பும் மிஸ்வாக் செய்யும் படி (பல் துலக்கும் படி) மக்ககளுக்கு நான் கட்டளை இட்டு இருப்பேன்"என அபூ ஹூரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புஹாரி:-7240)

 ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதல் முஹஜிரின்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸும் பின்த் உக்பா பின் அபி முஜத்(ரழி) அவர்கள் கூறினார்கள்:-"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பரஸ்பரம்,பிணக்கு இரு தரப்பாரிடம் நல்லதை புனைந்து கூறி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர்.அவர் நல்லதயே சொல்கிறார்.நன்மையையே எடுத்துரைக்கிரார்."என கூறுவதை நான் கேட்டேன்.மேலும் இப்னு ஸிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) அறிவிக்கிறார்கள்,மக்கள் பொய் என கூறும் எதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை.மூன்று விடயங்களை தவிர,

1-போர் தந்திரங்களுக்காக சொல்லப்படும் பொய்.

2-மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த சொல்லப்படும் பொய்.

3-குடும்ப ஒற்றுமைக்காக கணவன் மனைவியிடமும்,மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

(முஸ்லிம்:-5079)

 

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"ஜும்மா நாளில் ஒருவர் குளித்து இயன்றவரை தூய்மையாகி பின்னர் எண்ணை தேய்த்து நறுமணம் பூசி ஜும்மாவுக்கு புறப்பட்டு வந்து,அமர்ந்து கொண்டு இருக்கும் இருவரை பிரிக்காமல் அவருக்கு விதிக்கப்பட்ட தொழுகையை தொழுது,பின்னர் இமாம் வந்ததும் மௌனமாக இருந்து ஜும்மாவை காது தாழ்த்தி கேட்டால் அந்த ஜும்மாவுக்கும்,அதற்கு அடுத்த ஜும்மாவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்"என ஸல்மான் அல் ஃபாரிஸி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புஹாரி:-910)

 

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கிறேன்:ஒரு மனிதருக்கு மரணம் வந்தது.அவருக்கு வாழ்வைப் பற்றிய நிராசை ஏற்பட்டவுடன் தம் குடும்பத்தாருக்கு இறுதி உபதேசம் செய்தார்."நான் இறந்தால் எனக்காக நிறைய விறகுகளை சேகரித்து,அதில் நெருப்பை மூட்டி விடுங்கள்.நெருப்பு என் இறைச்சியை தின்று எலும்பு வரை சென்றுவிடும் போது நான் கருகிப் போவேன்.உடனே,என் கருகிய எலும்புகளை எடுத்து தூளாக்கி,பிறகு காற்று அதிகம் வீசும் ஒரு நாளை எதிர்பார்த்து அந்நாள் வந்ததும் கடலில் அதை எறிந்து விடுங்கள்"என்று கூறினார்.அவர் இறந்தவுடன் அவர் மக்கள் அவ்வாறே செய்தனர்.அவரின் எலும்புத் துகள்களை அல்லாஹ் ஒன்று திரட்டி உயிர்ப்பித்து "ஏன் அப்படி செய்தாய்?"என்று அவரிடம் கேட்டான்.அதற்கு அவர்(அப்படி செய்தால் நீ என்னை உயிர்ப்பிக்க மாட்டாய்,எனவே தண்டனையில் இருந்து தப்பலாம் என்று நினைத்தேன்) உன் அச்சம் காரணமாகவே அப்படி செய்தேன் என்று கூறினார்.எனவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.இதை ஹுதைஃபா(ரழி) சொல்லி முடித்ததும்,அவர்களிடம் உக்பா இப்னு உமர் l(ரழி)"நானும் இதை நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்குறேன்.அந்த மனிதர் மண்ணறைகளில் கபன் புடவைகளை திருடும் திருடனாக இருந்தார்"எனக் கூறினார்கள்.

(புஹாரி:-3452)

 

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:துன்பத்தின் காரணமாக கன்னத்தில் அறைந்து கொள்பவனும், ஆடைகளை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் காலத்து சொற்களை பயன்படுத்துபவனும்.,என்னை சார்ந்தவன் அல்ல. இதை அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புஹாரி :-1297)

 

புரைதா(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த வுழுவால் பல நேர தொழுகைகளை தொழுதார்கள்.அப்போது கால்களை கழுவாமல் ஈரக் கையால் கால் உறைகளுக்கு மேலால் தடவி மஸஹு செய்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள், முன் எப்போதும் செய்யாத ஒன்றை தாங்கள் இப்போது செய்கிறிர்? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் செய்ய வேண்டும் என்றுதான் செய்தேன் உமரே! என்று கூறினார்கள்.

(முஸ்லிம்:-466)

 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எல்லா மனிதர்களும் பாவம் செய்பவர்கள்தான். அதில் சிறந்தவர்கள் யார் எனில் பாவ மன்னிப்புக் கோருபவர்கள் ஆவர்.

(திர்மிதி:-2499)


 உஸ்மான் (ரழி) அவர்களுடைய முன்னால் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : உஸ்மான் பின் அஃபான் (ரழி) அவர்கள் வுழு செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் அங்கத் தூய்மை செய்தார்கள். முதலில் இரு முன் கைகளையும் மூன்று முறை கழுவினார்கள், பின்னர் வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கை சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம் வலக் கரத்தை முழங்கை மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்து அதே போன்று இடக்கரத்தையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவி மஸ்ஹூ செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக் கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதே போன்று மூன்று முறை கழுவினார்கள். பின்னர் நான் செய்த இந்த அங்க தூய்மை போன்றே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அங்க தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்க தூய்மையான வுழுவைப் போன்று அங்க தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த கெட்ட எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்காதுகள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த சிறிய பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள்.

(புஹாரி:-383)

 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3971

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!'

என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1896


தொகுப்பு;சுபைதா

கொழும்பு

Post a Comment

0 Comments