Ticker

6/recent/ticker-posts

நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -11


நபி  சுஐப் (அலை) அவர்களும் ஐயூப் (அலை) அவர்களும்
நபி யாகூப் (அலை) அவர்களின் மூன்றாவது மகன் லாபியிக்கு  இரண்டு பிள்ளைகள். ஒருவர் யஷ்கார்.  மற்றவர் ஆஷிர். யஷ்காரின் மகனே  நபி சுஐப் (அலை). யாகூப் நபியின் இன்னொரு மகன் அல்-ஆயிஷ் ஆவார்.

  அல்-ஆயிஷின் மகன் ராஷீஹ். ராஷீஹின் மகன் மாஊஸ். மாஊஸின் மகனே நபி ஐயூப் (அலை) அவர்களாவர்.  நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பிலிடப்படும்போது, நபி ஐயூபின் தந்தையான மாஊஸ் பார்த்ததாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர்.  

நபி ஐயூப் (அலை) அவர்கள் டமஸ்கஸில்  பிறந்தார்கள். திடகாத்திரமான உடம்போடும் சுகதேகியாகவும், பெரும் செல்வந்தராகவும் வாழ்ந்த அன்னார், லாயா என்பவரை மணந்து பதினான்கு பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார்கள்.  

அல்லாஹ் அன்னாரைச் சோதிக்க நாடி, பெரும் நோயொன்றை அன்னாருக்குக் கொடுத்தான். செல்வங்களை இல்லாமலாக்கினான். பிள்ளைகளை மரணிக்கச்செய்தான். அன்னாரது மனைவி லாயாவைக் கூலித்தொழில் செய்ய வைத்தான். இறுதியில் தனது மனைவி அவளது கேசத்தை விற்றுத் தனது கணவரான ஐயூப் நபியவர்களுக்கு உண்ணக்கொடுக்கும் நிலைமையை ஏற்படுத்தினான்.

இவ்வாறு பதினெட்டு வருடங்களாக அன்னார் பொறுமைகாத்தார்கள். இறுதியாக அல்லாஹ்விடம் “யா அர்ஹமுர் ராஹிமீன்” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் அன்னாரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்!

அல்லாஹ்வின் கட்டளைப்படி தரையில் கால்களை அடித்தபோது, பீறிட்டு வந்த ஊற்று நீரில் ஸ்நானம் செய்து தனது  நோயை இல்லாமலாக்கி, திரும்பவும் இளமையையும் திடகாத்திரத்தையும்  பெற்றுக் கொண்டதோடு, அன்னாரது மனைவியையும் அல்லாஹ் இளமைக்குத் திருப்பினான்.

அதன் பிறகு அன்னாருக்கு 26 பிள்ளைகள் கிடைத்தனர். தங்கம், வெள்ளித் தோட்டங்களைக் கொடுத்து அல்லாஹ் அன்னாரைப் பெரும் செல்வந்தராக்கினான். 96 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து மறைந்த அன்னார் பற்றி அல்லாஹ் திருக்குர்னில் நான்கு இடங்களில் கிலாகித்துப் பேசுகின்றான்.
(தொடரும்) 

Post a Comment

0 Comments