Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை!-4


அத்தியாயம் -4
நபி நூஹ் (அலை)

நபி இத்ரீஸ் (அலை) அவர்களுக்குப் பின்  மக்கள் நேர்மை மறந்த நிலையில்  அல்லாஹ்வைப் புறக்கணித்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆதம் (அலை) அவர்களின்  காலத்துக்கும் நபி நூஹ் (அலை)  அவர்களின் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஸுவாக், யகூஸ், யஊக், நாஸர் போன்ற பெரியார்களின் உருவங்களைச் செய்து மக்கள் வழிபட்டு வந்தனர்.

அம்மக்களை நேர்வழிப்படுத்தவே அல்லாஹ்,  நபி நூஹ் (அலை) அவர்களை அனுப்பி வைத்தான். (அல்குரான்: 7:59-62 10: 71-72)
நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்  நான்காவது  சந்ததியில் வந்த, நபி நூஹ் (அலை) அவர்களை   நோவா (Nova) என்று கிறிஸ்தவர்கள் அழைப்பர்.

ஆதம் (அலை) அவர்கள் இப்பூமியில் இறங்கி  1642 வருடம் கழித்து இவர்கள் அவதரித்து, ஈராக் தேசத்தில் வாழ்ந்து  வந்தார்கள்.  நபி நூஹ் (அலை)  அவர்களின் இயற்பெயர் “ஸாகுப்” அல்லது “ஸகுன்” என்று கூறப்படுகின்றது.   அவர்களின் தந்தை  லாமக் ஆவார்.  தாயின் பெயர் புஸுஷ்  ஆகும்.  அரபியில் ‘நூஹா’ என்றால் ‘அழுபவர்’ என்று பொருள். ஷுர்யாணி பாஷையில் ‘நூஹ்’  என்பதற்கு “அமைதி பெறுபவர் “என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

நேர்வழிப்படாத மக்களை பெரும் பிரளயத்தின் மூலம் மூழ்கடித்து, நபி நூஹ் (அலை) அவர்கள் கட்டிய கப்பல் மூலம்  நேர்வழிகொண்ட மக்கள் காப்பாற்றப்பட்டனர். பிரளயத்தில் வம்பர்கள் அழிந்து, நபியவர்கள் ‘அமைதி பெற்றதால்’ இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.  நபிமார்களில் இவர்கள்தான் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள், அதனால் ‘ஷைக்குல் முர்ஸலீன்’ என்ற பெயரும்,  ‘கபீருல் அன்பியா’ என்ற சிறப்புப் பெயரும் இவர்களுக்குண்டு.
 
நபி நூஹ் (அலை) அவர்களின்  கப்பல் துருக்கியுள்ள "அராரத்"  என்ற இடத்தில் 17,000 அடிகள் உயரமான பனிமலையில் புதைந்துள்ளதாக அண்மைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பிரளய நிகழ்வு கி. மு. 2349 நவம்பர் 23ம் திகதி வெள்ளிக் கிழமை நிகழ்ந்ததாக “விட்ஸன்” என்ற விஞ்ஞானி கணிப்பிட்டுள்ளார். அதாவது ஈஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு 2349 முன் இப்பிரளயம் நிகல்துள்ளது.
 
முஹம்மத் இப்னு அஹ்மத் இயாஸுல் ஹனபீ அவர்கள் தனது “பதாஉஸ் ஸுஹுர்” எனும் நூலில் நபி ஆதம் (அலை) பூமிக்கு வந்து 2242

வருடங்களுக்குப்பின் இப்பிரளயம் ஏற்பட்டதாகவும், பிரளயம் ஏற்பட்ட காலத்திற்கும், பெருமானார் (ஸல்) அவர்களின் ஹிஜ்ராவுக்குமிடையே 3774 ஆண்டுகள் கழிந்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

கி. பி. 2021ன் இஸ்லாமியப் புதுவருடம் 1443 ஆகும்.  இதிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் இற்றைக்கு 7459 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இறங்கினார்கள் எனக்கணக்கிட முடிகின்றது.

இலங்கையில் அவர்களது கால் பதிந்த இடம் "பாவா ஆதமலை" என்று அழைக்கப்படுகின்றது!

நபி நூஹ் (அலை) அவர்கள் இறக்கும்போது அவரது மகன் ஸாமுக்கு வயது 448 என்றும், இவர் 500 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், நபி நூஹ் (அலை) அவர்களின் இன்னொரு மகன் ‘கன்ஆன்’ இறை நிராகரிப்பாளனாகி, ஆணவம் கொண்டு கப்பலில் ஏறாது, வெள்ளத்தில் மாய்ந்ததாகவும் கூறப்படுகின்றது.  கன்ஆனின் மகனே ‘நும்ரூத்’ ஆவான்!

நபி நூஹ் (அலை) அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். இவர்களில் சாம், யாபித் என்பவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சந்ததிகள் இல்லை. பிரளயத்திற்குப் பின்னர் நபி நூஹ் (அலை) அவர்கள் உலகை மூன்றாகப் பிரித்து தமது மூன்று மக்களான ஷாம், ஹாம். யாபித்  ஆகியோருக்குக் கொடுத்தார். ஷாமுவுக்கு சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளும்,  ஹாமுவுக்கு ஆபிரிக்க நாடுகளும், யாபிதுவுக்கு சீனா, துருக்கிய போன்ற நாடுகளும் வழங்கப்பட்டன.
(தொடரும்)




Post a Comment

0 Comments