தாய் - சேய் நலங்கள் பற்றியும், உரியகாலத்தில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் பற்றியும் பரவலாகப் பேசப்படுவதற்கான காரணம், எதிர்காலச் சந்ததியினரைத் திடகாத்திரமானவர்களாகவும், ஆரோக்கியம் உள்ளவர்களாகவும் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய பொறுப்பு மகளிர் குலத்தையே சார்ந்திருக்கின்றமையே! தாயின் தேகாரோக்கியமானது, குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுவதே இவ்விரு சாராரினதும் இணைந்த தொடர்பிற்குக் காரணமாகின்றது எனலாம்.
குழந்தைகளோ தனித்துவமான உள்ளார்ந்த ஆற்றல்கள் கொண்டவர்கள். அவர்களின் தேவைகளும் தனியானவை. அவை உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். இது சமுதாயத்தின் நிரந்தர - நிம்மதியான வாழ்விற்கு இன்றியமையாதது.
குழந்தைகள் முதல் மூன்று வயதில்தான் துரித வளா;ச்சியடைகின்றார்கள். இவ்வளர்ச்சிக் காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கின்ற ஊட்டச்சத்தானது, அவர்களின் நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்குப் பெரிதும் துணை செய்யக் கூடியது.
குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்குத் துணைபுரியவும்- அவா;களின் அறிவு - ஒழுக்க வளர்ச்சியைச் சிறப்பாக்கவும் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் உட்கொள்கின்ற உணவிலிருந்தும் வேறுபட்ட - தனிவகையான - உணவு குழந்தைகளுக்கு இன்றியமையாததாகும். அந்த உணவானது அவர்கள் எளிதில் ஜீரணிக்கும் விதத்தில் அமைந்திருந்தல் வேண்டும். அதிலே அவர்களின் உடல் வளர்ச்சிக்கான விட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும். உணவில் உரிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்ளாத குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படவும், சிலவேளைகளில் மிகவும் இளமையிலேயே மரணத்தைத் தழுவிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
சிறந்த ஊட்டச்சத்துடன் உணவருந்தும் குழந்தையானது சிறந்த உடற்கட்டுடனும், சகல உறுப்புக்களும் அழகுள்ளதாகவும் - ஏற்ற அளவில் அமையப் பெற்றதாகவும் இருக்கும். இவ்வாறான குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும் - காது - கண் போன்ற உறுப்புக்கள் சரியாக இயங்கக்கூடிய முறையிலும் காணப்படும்.
ஊட்டச்சத்துக் குறைவினால் வயிற்றுப்போக்கு- சுவாசக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான குழந்தைகளை மலரியா, அம்மை போன்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். இந்நோய் கண்ட குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கும் உணவைத் தக்கமுறையில் தங்கள் உடம்பிலே சேரக்கூடிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. உணவில் விட்டமின்-ஏ குறைவினால் அதிகமான குழந்தைகள் கண்பார்வை இழக்கின்றார்கள். அயோடின் குறைவினால் உடலுறுப்புக்கள் திரிபடைதல், உடல் வளர்ச்சி குன்றுதல் போன்றவை நேர்கின்றன.
தாய்மார்கள் பெரும்பாலும் உணவுப் பற்றாக்குறையினால் வாடுவதாலும், குழந்தைகளைப் பால் மறக்கச் செய்வதற்குத் தகுந்த 18 - 24 மாதங்களுக்கு முன்னதாகவே பால் மறக்கச் செய்வதாலும், குழந்தைகள் நோய்களை எளிதில் பற்றிக்கொள்கின்றன என்பதாக "யுனெஸ்கோ" சஞ்சிகை கருத்து வெளியிட்டுள்ளது.
தாய்மார்கள் தங்கள் கா;ப்ப காலத்தில் குறைந்தளவு கலோரிச் சத்துக்கொண்ட உணவைச் சாப்பிடுவதால் - அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைவான எடையுடன் பிறக்கின்றன. இதனாலேயே குழந்தைகள் நோய்வாய்ப்புப் பெறுகின்றன.
தாய்மார்களிடமிருந்து தனியே பிரிந்துவிட நேர்கின்ற பொழுதும் - குழப்பம் - வேதனை ஏற்படுகின்ற பொழுதும் அழுகின்ற குழந்தையானது, அமைதியாக இருக்கின்ற குழந்தையைக் காட்டிலும் இரு மடங்கு கலோரிச்சத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
எனவே, தன் குழந்தையைப் பிரிந்து தினமும் அலுவலகம் செல்கின்ற தாய்மார்கள் தமது குழந்தைகளின் ஊட்டச்சத்து விடயத்தில் மேலதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. வளர்ந்துவரும் நாடுகளில் 20 வீதமான இளங்குழந்தைகள் புரத - கலோரி ஊட்டச்சத்துக் குறைவினால் வாடுகின்றார்கள் எனக்கூறப்படுகின்றது. இதற்குக் காரணமாக அந்நாடுகளில் அதிகமான தாய்மார்கள் தொழில்துறைகளில் ஈடுபட்டு வருவதைக் குறிப்பிடலாம்.
ஒருநாடு குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களைக் கவனமாகக் கண்காணித்து, அவர்களின் உடல் நலத்தைப் பேணி- அவர்களின் தேவைகளை உரிய முறையில் நிறைவு செய்து வருமானால்- அந்நாடானது என்றென்றும் மேம்பாடடைந்த ஒரு சந்ததியையே தோற்றுவித்துக் கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி!


0 Comments