ஒற்றை முழுமையான சார்ஜில் 700 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் காரை பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அதி சிறப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய கூடுதல் சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 700 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை மின்சார காரை மூன்று முன்னணி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூவாய் (Huawei), சங்கன் ஆட்டோமொபைல்ஸ் (Changen Automobiles) மற்றும் சிஏடிஎல் (CATL) ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்தே இந்த அதிக தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றன. அவாட்ர் இ11 (AVATR E11) எனும் பெயரிலேயே மின்சார கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும், அதிகம் ரேஞ்ஜ் வழங்கும் மின்சார கார்களுக்கு எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் மூன்று ஜாம்பவான் நிறுவனங்கள் இணைந்து இந்த மிக அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்திருக்கின்றன.
அவாட்ர் இ11 ஓர் எஸ்யூவி ரக பேட்டரி கார் ஆகும். இது மிக அதிக ரேஞ்ஜை தரும் எலெக்ட்ரிக் காராக மட்டும் உருவாகவில்லை. மிக அதிக வேகத்தில் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வெறும் நான்கே வினாடிகளில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு நூறு கிலோமீட்டர் எனும் வேகத்தில் செல்லும் திறனை இக்கார் கொண்டிருக்கின்றது.
இதனை அவாட்ர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த பசுமை இயக்கம் வசதிக் கொண்ட உயர்நிலை வாகனம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாகனம் கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதிக ரேஞ்ஜ், சூப்பர் ஃபாஸ்ட் திறன் ஆகியவற்றைப் போலவே எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும் பல மடங்கு கவர்ச்சியானதாக இருக்கின்றது. மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றம், எல்இடி மின் விளக்குகள், டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களோப் போன்ற மிகவும் ஸ்மூத்தான தோற்றம், மெல்லிய இழை போன்ற வால் பகுதி மின் விளக்கு, ஸ்மார்ட் கைபிடிகள், பெரிய ஸ்போர்ட்டி அலாய் வீல்க்ள் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.
அவாட்ர் இ11 எலெக்ட்ரிக் எஸ்யூவி நல்ல இட வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.8 மீட்டர் நீளம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற சிறப்பு வசதிகளை தயாரிப்பு நிறுவனங்கள் மூன்றும் இணைந்து வழங்கியிருக்கின்றன. ஆகையால், இதன் விலையும் சற்று அதிகமாக காட்சியளிக்கின்றது.
தற்போது எலெக்ட்ரிக் கார் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு அந்நாட்டு மதிப்பில் 3,00,000 யுவான்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 35 லட்சம் ஆகும். ஆடம்பர வசதிகளைக் கொண்ட வாகனம் என்பதால் இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்டதாக அவாட்ர் இ11 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவாட்ர் இ11 மின்சார காரை வெவ்வேறு விதமான உடல் தோற்றத்தில் வரும் காலத்தில் உருவாக்க இருப்பதாக கூட்டு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய உருவ அமைப்புகளின் கீழே அவை தயாரிக்கப்பட இருக்கின்றது. அனைத்தும் முதலில் சீன சந்தையிலேயே களமிறக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் சீன அறிமுகம் இந்தியர்களை ஏங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில், தற்போதே இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மிக மிக அதிக ரேஞ்ஜ் மற்றும் திறன்களை வெளியேற்றும் மின் வாகனங்களின் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


0 Comments