சிஓபி26 பருவநிலை மாநாட்டில் உறுதிப்பாடுகள் அளிக்கப்பட்டபோதும், உலக வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இலக்குகளை உலகம் இன்னும் நெருங்கவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
1.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை கட்டுப்பாட்டுக்கு நாடுகள் திட்டமிட்டபோதும் உலகம் 2.4 பாகை செயல்சியஸ் வெப்பநிலையை நோக்கி செல்வதாக இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவில் இடம்பெறும் மாநாடு காலநிலையை கட்டுப்படுத்துவதில் தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது.
சிஓபி26 பருவநிலை மாநாடு இந்த வாரம் முடிவுக்கு வரவுள்ளது. சிஓபி26 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் நாடுகள் 2030 இல் பசுமையில்ல வாயு உமிழ்வை நிறுத்த உறுதி அளித்தபோதும் 2100 இல் 1.5 செல்சியஸ் இலக்கை கொண்ட ஐக்கிய நாடுகளின் திட்டத்திற்கு அப்பால் பூமி சூடாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று காலநிலை நடவடிக்கை தடம் அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்பன் உமிழ்வு அளவில் நிகர பூஜ்ஜிய நிலையை அடைய அமெரிக்கா மற்றும் சீனாவின் புதிய வாக்குறுதிகள், வெப்பநிலை உயர்வு குறித்த தனது மதிப்பீடுகளை சற்று மேம்படுத்தியுள்ளன என்று கூறுகிறது அவ்வமைப்பு.
ஆனால் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான அரசாங்கங்கள் தீட்டியுள்ள திட்டங்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் 140 க்கும் மேற்பட்ட நாடுகள் நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதாக உறுதியளித்துள்ளன, இது உலகின் மொத்த உமிழ்வுகளில் 90 வீதத்தை உள்ளடக்கியது.
உலக வெப்பமாதலை 1.5 பாகை செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவது காலநிலை மாற்றத்தின் அபாயகரமான தாக்கங்களை தவிர்ப்பதற்கு அவசியம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


0 Comments