
ஐயோ.. தேவகி. உன் மௌனம் தான் என்னை உன்னை விட்டு விலகி இருக்கச் சொன்னது. உன் அருகாமையை வெறுப்பவன் அல்ல நான். எவனோ ஒருவனுடன் மனம் விட்டுப் பேசியதை என்னுடன் பேசாமல் போனாயே” என்று அவன் மனம் ஓலமிட்டது.
வாழ்க்கை என்பது, பள்ளிப் பருவம், இளமை, திருமணம், குழந்தை என்பதுடன் முடிவதல்ல, அதன் பின்னும், தாம்பத்தியம், அன்பின் பரிமாறல்கள் என்றெல்லாம் உண்டு என்பதை அவனுக்குப் புரிய வைத்தது அவளின் பிரிவு.
தாய், தந்தையின் அருகாமையின்றி, உறவினர் என்று எவருமின்றி இருந்ததால் தான், தனக்கு வாழ்க்கையின் இலக்கணம் என்ன என்று புரியாமல் போனதோ என்றும் குழம்பினான் சிவா. எல்லாவற்றையும் விட, தம்பதியினர் இடையே, கலந்துரையாடல், புரிதல் வேண்டும் என்பதையெல்லாம் அவன் அறிந்து கொள்ளும் போது காலம் கடந்திருந்தது. அவளின் சந்தோசத்திற்காக அவள் எடுத்த முடிவு சரியா, தவறா என்று கூட பதில் சொல்லத் தோன்றாமல், காவல் நிலையம் சென்று புகார் தராமல் மௌனம் காத்தான் சிவா.
‘அவள் எங்கே’ என்று கேட்க உறவினர்கள் என்று எவரும் இல்லை. அதைப் பற்றி மேலதிகமாய் பேச பணியாட்களும் தயாராய் இல்லை. ஆதரவாய் துணை நின்றவன் ஆறுமுகம் மட்டுமே.
வீட்டுக்கே செல்லலாம் என்ற எண்ணம் வந்த போதும், தன் கைப்பட இளக்காரமாக எழுதிவைத்த மடலின் காரணமாக வீட்டுக்கு செல்லும் எண்ணத்தை தவிர்த்தாள் தேவகி.
கண்ணனின் நினைவும், அவனின் செல்லச் சிணுங்கல்களும், மழலை வார்த்தைகளும் ஏங்க வைத்து. எல்லாவற்றையும் விட அவமானத்துடன் சிவா முன் நிற்க அவள் மன கூசியது. என்றாலும் வழிகேட்டில் இழுக்கும் சாத்தானோ, கொஞ்சம் நப்பாசையுடன், கைபேசியில் மீண்டும், மீண்டும் வெற்றியைத் தேட தூண்டியது.
தரிப்பிடம் வந்ததும் அனைவரும் பஸ்ஸினை விட்டு இறங்க, தள்ளாட்ட நடையுடனும், பசியுடனும் தேவகியும் இறங்கினாள். பயணிகள் களைப்பாறும் அறையைத் தேடி உட்கார்ந்தவளுக்கு, பசி மயக்கமும், களைப்பும் கண்களை சொக்க வைத்தது. தூரத்தில் இருந்தே அவளை கவனித்த ஒரு நடுத்தர வயதுப் பெண், தேவகியை நோக்கி வந்தாள். சாப்பிடாமலே அவள் பக்கத்தில் இருந்த, காலையில் கடைக் காரர் கொடுத்த உணவுப் பொட்டலத்தை எடுத்து, “என்னம்மா? பசியா இருக்கியா? சாப்பிடு!” என்று பரிவுடன் பொட்டலத்தை பிரித்துக் கொடுத்தாள். மௌனமாய் தேவகி இருக்கவே, அவளே உணவை விண்டு அவளின் வாயில் திணித்தாள்.
(தொடரும்)
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com


0 Comments