Ticker

6/recent/ticker-posts

பூட்டிட்டு விட்டேன்...!


விட்டுக்கொடுத்தலில்
எல்லை மீறியதற்கும்
அன்பு செய்வதை
அதீதமாய்ப் பண்ணியதற்கும்
செய்ந்நன்றி இப்போது
மிகைத்துக் கிடைத்து விட்டது
வெறுப்பெனும் விரக்தியாக

சத்தியத்தின் வாக்கு இது
தூயதாக என்றுமிருந்தது என்னன்பு
கலப்படம் பண்ணி
காயப்படுத்தும் வழக்கம்
என்னிடம் இல்லை

இதயம் கனத்துக்கிடக்கிறது
சொல்லும் செயலும்
உதாசீனமும் அலட்சியமும்
ஒட்டுமொத்த உறவையும்
சிதைத்துக் கொன்று விட்டது

கண்ணாடி போலும் இதயம்
அதிர்ந்து முடியவில்லை
உடைந்து சிதிலமானது
உணர்வுகளைக் குத்திக்கிழிக்கிறது
ஒவ்வொரு நொடியும் 
மௌனக்குரலில் ஓங்காரித்து
மரணம் சுவைக்கிறது

காற்றில் துடிதுடித்துக் கொண்டு
அநாதையாகி அழுகின்றன
நாம் பேசிய வார்த்தைகள்
ஆழமான நேசத்தின் புன்னகைகள் 
நொடித்து சூன்யமாகி வீதியெங்கும்
விழுந்து கிடக்கின்றன

இறந்தகால பிம்பங்களில் எழுந்த 
நேசத்தை நெஞ்சக்கூட்டுக்குள்
பொத்திவைத்து பூட்டிட்டு விட்டேன்
அதுவாவது பொய்யின்றிய 
உண்மையாக இருக்கட்டும்

கதைபேசிய காலங்களும்
ஓய்வு கொண்ட மரங்களும்
ஒன்றாக சுவைத்து அருந்திய
கடைவீதிகளும் இன்னும்
அப்படியேதான் இருக்கின்றன
ஆயினும்....நீங்களோ 
மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்
முகத்தை திருப்பிக்கொண்டே 
பதிலுரைக்கிறீர்கள்.

அன்பிற்கினிய உறவை 
அறுத்துப் பகிர்ந்தீர்கள்
ஜீரணிக்க முடியாத 
ரணத்தீயில் வீசியெறிந்தீர்கள்
அதுவுமன்றி....
நீயேன் மாறினாயெனக் 
கேட்கும் கேள்வியில்
மீந்திருந்த சொட்டு நேசமும் தீர்ந்து
காய்ந்துலர்ந்து போய்விட்டது.

உங்களால் நானும்
என்னால் நீங்களும்
இதுவரையில் வாழ்வின் வீதியில்
கண்டபலன்தான் என்ன?
பலமாக நினைத்த ஒன்று 
பலவீனம் தந்து ஆட்டம் தருவதென்ன?

இதுவரைக்கும் இனித்தவை
எல்லாமறிவோம்
ஏதுமின்றி ஏதிலியாய்க் 
காரணம் தேடி அலைவதுமேனோ?
அறிவின் சாமான்ய நிலை
அனைவருக்கும் உண்டு
அவ்வாறிருக்க என்னிடம் மட்டும்
ஏன் வினாக்கள்?
ஏவித்துளைத்து சல்லடை செய்து
துவம்சம் செய்வது உங்களின் 
வாடிக்கையான ஒன்றா?

மீதமான சொற்கள்
மிஞ்சிய உறவு
மீள்பார்வை
யாவும் முன்னரான 
பாசம்போலில்லை
அதுதான் உண்மை
போலியான நேர்மையற்ற
உறவு நிரந்தரமில்லை
நிலைப்பதுமில்லை
இதுவே இன்றைய 
வாழ்வியலின் நிலைப்பாடு

சில தருணங்களில்
சந்திக்க நேரிடுகையில் 
நிச்சயம் கைலாகு தருவேன்...
எதையும் கருத்தில் கொள்ளாமல்
கொண்டாடுவது மட்டும்தான்
என் வழக்கம்..
அதை நீங்களும் அறிவீர்கள்.

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை


 



Post a Comment

0 Comments