கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-3

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-3


சனகனின்பணயம்
சிவதனுசு வில்லை வளைப்பவர்க்கே சீதை!
அரசன் அறிவிப்(பு)  இது.

மன்னர்கள்கைவிதிர்த்தல்
எண்ணற்ற மன்னர்கள் தோற்றனர்!  சோர்ந்தனர்!
இங்கெவர்தான் நாணேற்று வார்?

முனிவன்குறிப்பு
முனிவன் குறிப்பறிந்த ராமனோ வில்லை
துணிவுடன் பார்த்தான் விழைந்து.

நாணேற்றஎழுதல்
வேள்வித்தீ பொங்கியெழும் கோலம்போல் ராமனங்கே
தோள்நிமிர்த் தெழுந்துநின்றான் பார்.

வில்லொடித்தஒலி
எடுத்தது கண்டார் ! முறிந்தது கேட்டார்!
நொடிப்பொழுதில் வெற்றிக் கனி

நீலமாலைஇராமன்வில்இறுத்தவிதம்கூறுதல்
இமைப்பொழுதில்  காகுத்தன் வில்லொடித்த பாங்கை
மனங்கவரச் சொன்னாள் உவந்து.

சீதையின்சந்தேகம்தீர்தல்
கண்கவர்ந்த ராமனும் வில்லொடித்த ராமனும்  
ஒன்றா? தவித்தாள் நினைந்து!
நீலமாலை சொன்னதும் நாணத்தால் புன்னகைத்தாள்
கோலராமன் என்னவனே என்று.

மிதிலைப்பயணம்
மிதிலைச் சனகன் அனுப்பிய செய்தி
படித்தான் தசரதன் பார்த்து.
சிலைராமன் வில்லொடித்த செய்தி படித்து
மலைபோல் நிமிர்ந்தான் மகிழ்ந்து.
மிதிலையை நோக்கிப் பயணம் புரிய
விதித்தான்ஆணை விரைந்து.

பயணக்காட்சி
அரசிகள் மக்கள் அனைவரும் வெள்ளம்
திரண்டதுபோல் சென்றார் சேர்ந்து
சிற்றரசர் கூடவர மன்னன் தசரதன்
பொற்றேரில் சென்றான் மிதந்து.

தசரதன்மிதிலைநகரைஅடைதல்
சனகன் தசரதன் மாநகர்க்குள் வந்தார்!
மனமகிழ்ச்சி ஆரவாரந் தான்.

தந்தையைக் காண இராமன் இலக்குவன்
அன்புடன் வந்தனர் பார்த்து.

சீதையின்சந்தேகம்தீர்ந்தது!
கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா? சீதை தவிப்பு!

வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தறிந்தாள் மாது.

திருமணநாள்என்று?
கோசிகனை நோக்கி தசரதன் சீதையின்
நேசமண நாளென்றோ? கூறு.

பாசமுடன் கேட்டான்! "தசரதனே!நாளைதான்"
ஆசிபொங்க சொன்னான் முனி.

சீதைமனதுடன்பேசுதல்
மனமேநீ! நான்தவிக்க ராமனிடம் சென்றாய்!
உனைப்போல் குணங்கொண்டோர் யார்?

இராமன்மனத்துடன்பேசுதல்
சீதையுடன் சென்ற மனமே! திரும்பிவா!
வேதனையில் வாடுகின்றேன் நான்.

இராமன்சீதைகடிமணம்
மணங்கமழும் சீதை கரங்களை ராமன்
தனக்குள் பிணைத்தான் களித்து.

அம்மி மிதித்தே அருந்ததி பார்த்தனர்!
கண்குளிர ஏற்றான் மணந்து.

மூவரின்திருமணம்
பரதன் இலக்குவன் சத்ருக் கனனும்
திருமணம் செய்தனர் அங்கு.

பரதன்கேகயநாடுசெல்லுதல்
உன்பாட்டன் உன்னைத்தான் பார்க்க விரும்புகின்றான்
என்றான் தசரதன் உவந்து.

பரதனும் கேகயநாடு நோக்கித்தான் சென்றான்!
இராமனை விட்டகன்றான் அன்று.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post