சிறுபிள்ளைகளுக்கு தடுப்பு ஊசிகளைக் கொடுக்க வேண்டாம் எனவும் இவ்ஊசிகளைக் கொடுப்பது இஸ்லாத்திற்கு முரணானது எனவும் பயான் ஒன்றில் மெளலவி ஒருவர் குறிப்பிட்டார். இது எங்களுக்கு ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே இக்கூற்று சரியா? எனவும் இவ்ஊசிகளில் ஏதும் ஹராமானவைகள் உண்டா ? எனவும் அறியத் தரவும்.
கௌம், கொழும்பு 14.
பதில்: மனிதனைப் படைத்த இறைவன் உலகில் மனிதன் வாழும் போது சுகதேகியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்குரிய பல ஏற்பாடுகளை செய்துள்ளான். சுகதேகியாக வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நோய்வாய்ப்பட்டால் அதற்குரிய பரிகாரத்தையும் இயற்கைப் பொருட்களில் அல்லது இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவைகளிலும் வைத்துள்ளான்.
இறைவனை வணங்கவும், ஏனைய இறைவனுக்குப் பொருத்தமானதும் மானிட சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக செயற்படுவதற்கும் தேக ஆரோக்கியமும் உடல் வலிமையும் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். உதாரணமாக ஒரு பிள்ளைக்கு போலியோ நோய் சிறுவயதிலேயே ஏற்பட்டு விட்டால் அச்சிறுவனது கல்வி, தொழில், சமூக உறவு, மனநலம் உட்பட சகல விடயங்களும் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இத்துர்ப்பாக்கிய நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான தடுப்பு முறைகளை மேற்கொள்வதை எந்தவொரு மார்க்கமும் தடைசெய்யாது.
எம்மைச் சூழ பல தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இருப்பதைப்பற்றி நாம் அறிவோம், இதில் காசநோய், போலியோ நோய், ஏற்புவலி, மஞ்சள் காமாலை போன்ற நோய்க்கிருமிகள் உடம்பில் தொற்றினால் உடம்பில் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் அறிவோம். இதனால்தான் எமது உடம்பில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்திக்குப் புறம்பாக மேலதிகமாக நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக கொடுக்கக்கூடிய மருந்துகள்தான் தடுப்பு ஊசிகள் மூலம் கொடுக்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பொலிஸ், இராணுவம் வான் படை கடற்படை போன்றவைகள் இருந்தால் நாட்டிற்கு ஏற்படுகின்ற சாதாரண பாதுகாப்புச் சவால்களை வெற்றி கொள்ளலாம். ஆனால் நெருக்கடியான நிலைமைகள் வந்தால் சமாளிப்பதற்காக விஷேட அதிரடிப் படையினரை அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இப்படை நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாகக் களமிறங்கி நிலைமையைச் சமாளிக்குமல்லவா? இதேபோன்றுதான் எமது உடம்பில் இயற்கையாகக் காணப்படக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி சாதாரண தொற்றுதல்களைச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் கூட நான் மேற்குறிப்பிட்டுள்ள பயங்கர நோய்களைத் தாக்குப்பிடிக்கக் கூடிய நிலை ஒரு சில கட்டங்களில் உடம்புக்கு இல்லாமல் இருக்கலாம். எனவே தடுப்பு ஊசிகள் என்பதும் நாட்டின் விசேட அதிரடிப்படை போன்றதே.
இதன் மூலம் எமது சிறார்கள் எதிர் காலத்தில் மேற்குறிப்பிட்டுள்ள நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக எதிர்கொள்ளக்கூடிய ஊனமுற்ற முறையான வாழ்க்கையை அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையைத் தவிர்ப்பதே இந்த தடுப்பு ஊசி போடும் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக அரசாங்கம் பல கோடி ரூபாய்கள் செலவு செய்கின்றது என்பது ஒரு முக்கியமான விடயமாகும்.
BCG எனப்படும் தடுப்பு ஊசி காசநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே கொடுக்கப்படுகிறது. மேலும் காசநோய் சனநெருக்கடி கூடிய வறிய குடும்பங்களிலும், குறைந்த சமூகப் பொருளாதார மட்டத்திலிருப்பவர்களையும் கூடுதலாகத் தாக்குகின்றன. ஒரு வீட்டில் ஒருவருக்குக் காச நோய் ஏற்பட்டால் இது ஏனையோர்களையும் பாதிக்கலாம். எனவே இந்நோய் வராமல் தடுப்பு ஊசி போடுவதை இஸ்லாம் உட்பட எந்த சமயமும் தடைசெய்யவில்லை .
அண்மையில் என்னிடமும் ஒருவர் வந்து தடுப்பூசி போடுவது இஸ்லாத்திற்கு முரணானது என ஒரு மெளலவி கூறியதாகவும் இது பற்றிய எனது கருத்தையும் கேட்டார். நான் அவரிடம் சுருக்கமாகக் கூறிய பதில் தான் இது அக்குறிப்பிட்ட மெளலவி உங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பு ஊசி போடாமல் இருப்பதனால் ஏற்படக்கூடிய நோய்கள் வராமல் இருப்பதற்கு உத்தரவாதம் தரும்படியோ அல்லது தடுப்பு ஊசிகளுக்கும் பதிலாக வேறு ஏதாவது மாற்றுக் சிகிச்சையொன்றினைக் கூறும்படியோ கேட்குமாறு ஆலோசனை வழங்கினேன்.
அத்துடன் இதுவிடயமாக இலங்கையில் பிரசித்தி பெற்ற ஒரு சில உலமாக்களிடம் கேட்டபோது இஸ்லாத்தில் தடுப்பு ஊசி போடுவதற்கு எந்தத் தடையுமில்லை எனக் கூறினார்கள்.
எனவே இக்கேள்வியில் குறிப்பிட்டிருக்கும் கூற்று இஸ்லாத்தை நன்கு புரிந்த மௌலவிமார்களின் கூற்று அல்ல எனவும், இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிந்தனையுள்ளவர்களின் நிலைப்பாடாகும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
மேலும் தடுப்பு ஊசி போடுவதற்கு நோயுடைய சிலருக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. இது விடயமாக நீங்கள் உங்களது குடும்ப வைத்தியர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம்.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இவ்வாறான ஆதாரமற்ற தகவல்களை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புபவர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது நீங்கள் இது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களை மக்களிடம் கூற முன் முஸ்லிம் வைத்தியர்களிடமும், மார்க்க அறிஞர்களின் உயர்பீடமான ஜம்இய்யத்துல் உலமா சபையினதும் தெளிவைப் பெறும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments