Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-38

 
குறள் எண் 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

ஏல மாப்ளை... நம்மூர்ல எச்சிக் கையால காக்கா வெரட்டாத பயலுவொ நெறைய பேரு இருக்கானுவொ தெரியுமில்லா. அவனுவள்ளாம் ஒருநாள் தாங்கிட்ட இருக்கதை மொத்தமா தொலைச்சிட்டு, நடுத் தெருல நிப்பானுவொ. 

நம்மகிட்ட இருக்க பொருளை மத்தவொளுக்கு கொடுத்து உதவும் போது,  நமக்கும், உதவி பெறுபவர்களுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி பத்தியில்லாம் அவனுவொளுக்குத் தெரியாது மாப்ள.

குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

மாப்ள.. ஏழை பாழைகளுக்கு கொடுத்து ஒதவணும். நல்ல கெத்தாப்பா வாழணும். நல்ல வாழ்க்கைக்கு, இதை விட பெரிசா வேற ஒண்ணும் வேண்டாம்  மாப்ள. 

குறள் 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

இந்த உலகம் இருக்கவரை, உலகத்தில் நிலைத்து இருக்கும்படியான பெரும் புகழ் பெற்றவர்கள் இருக்காங்கள்லா மாப்ள.. வானுலகம் கூட இவங்களைத் தான் போற்றும். அங்குள்ள தேவர்களை போற்றாது. 

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

மாப்ள.. சொத்து சுகம் மாதிரி இருக்க பொருட் செல்வம்லாம் இளிந்தவங்க கிட்டயும் குமிஞ்சு கெடக்கும். ஆனா இந்த  அருட் செல்வம் இருக்கே அது தான் இருக்க செல்வங்கள்லேயே ஒசத்தி. அதுக்கு வேற எந்த செல்வமும் ஈடாகாது மாப்ள. 

குறள் 247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
மாப்ள... கைல துட்டு இல்லாதவொளுக்கு இந்த ஒலகத்து வாழ்க்கைல ஒரு மகிழ்ச்சியும் கெடைய்க்காது.

அதுமாதிரி தான்.. இரக்க குணம் இல்லாதவொளுக்கு, வேற ஒலகத்துலியும் இன்பம் கெடைய்க்காது.(தொடரும்)

Post a Comment

0 Comments