சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-6

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-6


நம்மை நாமே செதுக்குவோம்

நலம் தருமே!வளம் தருமே! ஆற்றல் தருமே! நன்மைகள் எல்லாம் தருமே! உண்மை இருப்பின் உள்ளொளி மிகுந்து மிளிருமே! நம் உயிர் பலம் பெறுமே!... அனைத்தும் உழைப்பு தருமே...என்ன ஏகப்பட்ட மே வருகிறதே! என்று பார்க்கின்றீர்களா?

உழைப்பே உன்னை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு நாள். உழைப்பும், உறுதியும், உண்மையும், முயற்சியும், பயிற்சியும் உன்னிடம் இருந்தால்... உலகில் உன்னை வெல்வது கடினம்! என்பது நிஜமாகும்.

உழைப்பு என்று சொன்னாலே நமக்கு உழைப்பாளர் தினம் நினைவிற்கு வரும். பத்தாண்டுகள், பன்னிரு ஆண்டுகள் அரும்பாடு பட்டு உழைத்த மாணவச் செல்வங்களுக்கு உழைப்பின் அறுவடை, தேர்வின் முடிவுகள்தான். வெற்றிக்கனிகளைப் பறிக்க உழைப்பு எனும் விதையை விதைக்க வேண்டும். முயற்சி எனும் உரம் போட வேண்டும்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பார் பட்டினத்தடிகள். இதையே நம் வள்ளுவப் பேராசான் அவர்களோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.- (குறள் 620) என்று உரைக்கிறார். அதாவது இயற்கை விதிவசத்தால் ஒரு செயல் தடைபட்டு, நடவாது இருப்பினும், ஒருவர் விடாமுயற்சியுடன், அயராது உழைப்பை நல்கி தவநிலையில் இயற்கையுடன் ஒன்றி உறுதி குலையாது செயலாற்றினால் அவர் இயற்கை விதியைக் கூட மாற்றி வெற்றி காண்பார் என்பது ஆகும். இக்குறளின் ஆழம்... தாத்பரியம்... எத்துணை பேருக்குப் புரியும்? வாழ்வின் உன்னத நிலையை அடையும் மந்திரம் இக்குறளில் புதைந்துள்ளது.

இறைவனின் உழைப்பால் இந்த பிரபஞ்சம், பூமி பிற கிரகங்கள், சூரிய சந்திரன்கள், பஞ்ச பூதங்கள், மனிதன், விலங்கு, பறவை பிற உயிரினங்கள் எனப்படைத்தளிக்கப்பட்டது.

இறைவன் தான் படைத்த உயிரினங்களுக்கும் படைக்கும் ஆற்றலை, உருவாக்கும் சக்தியைக் கொடுத்திருக்கின்றான்.

ஆதிகால மனிதன் தொட்டு, இன்றுவரை... மனித குல வளர்ச்சி, மாற்றங்கள், ஏற்றங்கள், தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மனித குலம், நம்மை நாமே செதுக்கிக் கொண்டதன் விளைவு உழைப்பின் பரிசு. உண்மை தான். இயற்கையை, படைப்பினங்களை உற்றுப்பாருங்கள். பல உண்மைகள் நமக்கு விளங்கும்.

எறும்புக்கு யார் புற்று அமைத்துக்கொள்ள சொல்லிக் கொடுத்தார்கள்? தேனீக்கு யார் மலர்களை ஆராய்ந்து தேனெடுத்து வந்து தேன்கூட்டைக் கட்டுவதற்குக் கற்றுக்கொடுத்தார்கள்? அதன் அழகை, ஒழுங்கை, அதன் உழைப்பை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியுமா?

சிலந்திக்கு வலை பின்னப்பழக்கியது யார்? தூக்கணாங்குருவியின் கூட்டைப் பாருங்கள். மிகச்சிறிய அலகினால் எப்படி அது சாத்தியம் ஆயிற்று? சொல்லிக்கொண்டே போகலாம்.

மனித ஆற்றல்.. அப்பப்பா... பிரமிக்க வைக்கிறது. மலைமுகடுகள் சமவெளிகளாகவும், பாலைவனங்கள் சோலை வனங்களாகவும், காடுகள் நாடுகளாகவும், மண்மேடுகள் மாட மாளிகைகளாகவும் உருவான அற்புதங்கள் அனைத்தும் உழைப்பினால் விளைந்ததல்லவா?

ஆம், உழைப்பின்றி உயர்வில்லை. முன்னேற்றம் இல்லை, வளம் இல்லை, வளர்ச்சி இல்லை, விருப்பம், ஆசை, குறிக்கோள், நம்பிக்கை, தன்னம்பிக்கை, சிறப்பறிவு, திட்டங்கள் அனைத்தும் உழைப்பு என்னும் உளியைக் கையில் எடுக்காதவரை பயனற்றுப் போகும்.

உளியை எடுத்து சுத்தியால் தட்டி கல்லைச் செதுக்கியும், தட்டியும், கொட்டியும் உழைக்காவிட்டால் கல் கல்லாகவே இருக்குமே அன்றிச் சிற்பமாகாது. உழைப்பைப் போற்றுவோம், வரலாறு படைப்போம். நலம் பெற்றுநீடுவாழ்வோம்.

(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post