
அன்னியர் சிலரின் வருகை அன்று புரோகோனிஷ் கிராமத்தை அல்லோல கல்லோலப் பட வைத்துவிட்டது!
செரோக்கியும் ரெங்க்மாவும் இர்வினின் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது, விழாவில் பேச செரோக்கிக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவன் தனது சமூகத்தினரை கல்வித்துறையின்பால் இட்டுச் செல்ல வழிசெய்யும்படி ஒரு கோரிக்கையைக் கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் முன்வைத்திருந்தான்.
பட்டமளிப்பின்போது வனவாசி இளைஞன் ஒருவனால் விடுக்கப்பட்ட கோரிக்கை, அந்நாட்களில் அந்நாட்டுப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததோடு, பல்கலைக்கழகம் இதுபற்றிய சிபார்சினை எழுத்துமூலமாக அரச கல்வித்துறைக்கு விடுத்திருந்தது. கல்வித்துறையின் அங்கீகாரம் முறைப்படி கிடைக்கப் பெற்றதும், பல்கலைக்கழகம் இதற்கான செயற்குழுவொன்றை நியமித்து, செரோக்கியின் கோரிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.
அதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கிலேயே அன்று பல்கலைக் கழக மட்டத்திலான தூதுக்குழுவொன்று ‘புரோகோனிஷ்’ கிராமத்தை வந்தடைந்திருந்தது!
அன்னியரை நெருங்கவிடாமலிருந்த அந்த சமூகத்தின் மத்தியில் இது ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியபோதிலும், இர்வினும் செரோக்கியும் சேர்ந்து வனவாசிகளை சரிப்படுத்துவதில் எடுத்துக் கொண்ட பிராயச்சித்தம், அவர்களை அமைதியுறச் செய்தது. வந்தவர்கள் முறைப்படி வரவேற்கப் பட்டனர்!
தூதுக்குழுவின் செயற்திட்டத்தை இர்வின் - செரோக்கி மூலமாக வனவாசிகளிடத்தில் முன்வைத்தான்!
ஆர்வமுள்ள வனவாசிகள் கல்வி கற்பதற்கான கொட்டிலொன்றை நிர்மாணிப்பதற்காக அரசுடன் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு செயல் திட்டத்தை வரைந்துள்ளமை பற்றிய தகவல் அம்மக்களிடம் தெரிவிக்கப்பட்டது!
இதுபற்றி அவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்காக சில நாட்கள் அவர்களுக்குக் அவகாசமும் கொடுக்கப்பட்டது.
புரோகோனிஷ் கிராமத்திலிருந்து மரவேரடிக்குப் பிரிந்து செல்லும் சந்துப்பிரதேசத்தில் கொட்டில் நிர்மாணிப்பது உசிதமானது என்ற தனது அபிப்பிராயத்தை இர்வின் - செரோக்கியிடம் தெரிவித்துவித்தான்!
இதற்கான அங்கீகாரத்தை மூத்த வனவாசிகளிடமிருந்து பெருமாறு ஆலோசனை ஒன்றைக் கூறிவிட்டு, அவன் தூதுக்குழுவோடிணைந்து “மனாஸ்” நகர் நோக்கிச்சென்றான்.
செரோக்கிக்கு இதுவொரு புதுத்தொல்லையாக இருந்தபோதிலும், தனது சமூகத்தின் மேம்பாட்டை நினைத்து அவன் ஆறுதலடைந்து கொண்டான்!
(தொடரும்)


0 Comments