Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-43


குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்

எதுக்கெடுத்தாலும் நான்.. நான் ன்னு சொல்லுதது. எந்த பொருள் னாலும், என்னோடது ன்னு சொல்லுதது. இதுல்லாம் கேடு கெட்ட குணம் மாப்ள.. இந்த ரெண்டு கொணத்தையும், ஒருத்தன் விட்டுத் தொலைச்சுட்டாம்னா, அவனுக்கு வானளவு புகழையுந் தாண்டி உயர் புகழ் கிடைக்கும் மாப்ள..

குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

மாப்ள.. இந்த கடவுள் இருக்கார.. அவரு எதுலியுமே பற்று இல்லாதவரு. அப்பிடிப்பட்ட கடவுள் மீது மட்டும் நாம பற்று வச்சமுன்னா, வேற எதுலியும் பற்று வைக்காம இருக்கலாம் மாப்ள. 

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

தம்பி.. ஒரு பொருளை பாத்தா, அதோட வெளித் தோற்றத்தை மட்டும் வச்சுக்கிட்டு அதைப் பத்தி எந்த முடிவுக்கும் வந்துறக் கூடாது. அதோட உண்மைத் தன்மையை தெரிஞ்சு கொள்றது தான் தம்பி சரியான புத்திசாலித் தனம். 

குறள் 356 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

தம்பி.. தெரிஞ்சுக்க வேண்டியதை நல்ல படிச்சு உண்மையான பொருளை உணர்ந்து தெரிஞ்சு கிட்டவொ இருக்காவொள்லா.. அவொள்லாம் இன்னொரு பிறவி எடுக்கணும்னு ஆசைப் பட  மாட்டாவொ தம்பி. 

குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

மாப்ள. நம்மளுக்கு எதுமேலயும் ஆசை இல்லன்னு வச்சுக்கோயேன். நமக்கு ஒரு தும்பமும் வராது. நல்ல நிம்மதியா இருக்கலாம். 

ஆனா.. எது மேலயாவது நம்ம ஆசை வச்சுட்டோம்னு வச்சுக்க..  தும்பம் நம்மளை விடாம தொரத்திக்கிட்டே இருக்கும் மாப்ள.

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

மாப்ள.. விதிங்கிறது லேசுப் பட்டது இல்ல. ரொம்ப வலியது. என்ன தான் தலை கீழ நின்னு நாம அதை சமாளிக்க நெனச்சாலும், நம்மால ஒண்ணும் பண்ண முடியாது. விதி தான் நமக்கு முன்னால வந்து நிய்க்கும் மாப்ள.
(தொடரும்)


Post a Comment

0 Comments