
“மருத்துவச்சி வந்துட்டா.... மருத்துவச்சி வந்துட்டா...."
"விலகி நில்லுங்கள்!”
பென்னம்பெரிய குரல் கொடுத்துக் கொண்டு ரெங்க்மாவின் தாயார் சூழ்ந்திருந்தவர்களை விலக்கியபடி, அவரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த அந்த வயதான மூதாட்டியை முன்னுக்கு அழைத்து ரெங்க்மா அமர்ந்திருந்த விரிப்பில் அமரவைத்தார்.
சற்றுப் பருமனான உடம்பைக் கொண்டிருந்த அந்தக் கானகத்துப் பழங்குடி மூதாட்டி, மிகவும் கரறுவலாகக் காணப்பட்டாள். தலைமையிர் முழுவதையும் ஒருசேர சுருட்டித் தலைமேல் வைத்து, அவற்றை மறைக்கும்படியாகக் கானகத்து மலர்கள் சிலவற்றை நெருக்கமாகச் சொருவியிருந்தாள். அவளது ஒவ்வொரு காதுகளிலும் காலாகாலமாகப் போடப்பட்டு வந்திருந்த துளைகள் இழுபட்டநிலையில், அவற்றில் அவற்றினுள் சொருவப்பட்டிருந்த, வர்ணந்தீட்டப்பட்ட சங்குத்தோடுகள் பல தொங்கியபடி ஆடி அசைந்துகொண்டிருந்தன. பலவர்ணங்களிலான சங்குகள் மாலைகள் அவளது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தன.
கால்களை நீட்டியபடி ஒய்யாரமாக விரிப்பில் அமர்ந்திருந்த ரெங்க்மாவின் இடது கரத்தைப் பலவந்தமாக இழுத்தெடுத்து, மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தபடி சிறிது நேரம் இருந்துவிட்டு, ரெங்க்மா தாயராகப் போகும் செய்தியை அவளது அங்கிருந்தவர்ளிடத்தில் வெளிப்படுத்தினாள்!
சுற்றி நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால், தமது விரல்களால் வாய்களை மறைத்தபடி மகிழ்ச்சிக் கூக்குரலிட்டனர்.
அதன் பின்னர் அவர்கள், ரெங்க்மாவையும் மருத்துவச்சியையும் சுற்றிவட்டமிட்டபடி, தமக்கேயுரிய நடனத்தை ஆடிக்கொண்டு கானகத்து மகிழ்ச்சிப் பிரவகத்துப் பாடல்களைப் பாடியவர்களாக வலம் வந்துகொண்டிருந்தனர்.
சிறிது நேரம் செல்ல அவர்களின் ஆடலும் பாடலும் அடங்கிப்போக, மருத்துவச்சி ரெங்க்மாவின் தாயாரின் காதுக்குள் இரகசியமாகக் ஏதோவொன்றை கூறியதும் அவர் அங்கிருந்து நகர்ந்து, வாழைமரப்பந்துருக்குள் சென்று இலை ஒன்றைப் பிடுங்கி எடுத்துவந்து மருத்துவச்சியிடத்தில் கொடுத்தாள்.
வரிவரியாகக் காணப்பட்ட இந்த இலையிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்த மருத்துவச்சி, அங்கிருந்த இரண்டு சிறுமிகளை இழுத்தெடுத்து அவர்களை நேருக்கு நேராக நிற்க வைத்தார்.
(தொடரும்)


0 Comments