
நல்லோர் வாக்கு பொய்க்காது
இறைவனைக் காண புறத்தில் நீ எதையும் தேடாதே !... காரணம் இயற்கை ஏற்கனவே வாரி வழங்கிவிட்டது. ஆகவே இறைவனைக் காண நீ அகத்தில் தேடு!....
.
உலக மக்களின் உயர்வுக்கு வழிகாட்டும் உலக மக்களின் சிந்தனை சிறந்து சீர்பெற்று வாழ ஒரு சிந்தனைப் பதிவு.
ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு . (குறள் -190)
இதன் நேரடிப் பொருள் ; மற்றவர்களிடம் தேடித் தேடிக் குற்றம் காண்பவன் தான் செய்வது குற்றம் என்று உணர்வானானால் அந்த உணர்வால் அவன் ஒரு தீமையும் அடையாமல் பிழைத்துக் கொள்வான். அவ்வாறு உணரும் உயிர்க்கு எவ்விதத் தீங்கும் நேர முடியாது. அதுவே இயற்கை என்பதாகும்.
இது சிந்தனைக்குரிய செய்தி அல்லவா? தனிமனிதனுக்கு அல்லாமல் உலகில் வாழும் யாராயினும் அவர்களுக்கும் இது பொருந்துமல்லவா?
எண்ணம் போல் வாழ்வு, நல்லதே நினை!, ஆமை புகுந்த வீடு உருப்படாது, உள் ஒன்று வைத்து புறமொன்று பேசாதே ! இப்படி ஏராளமான சான்றோர் சிந்தனை... அன்று சொன்னவை ! அர்த்தம் உள்ளவை! |
மனிதன் இவைகளைப் போற்றி, பேணி, அவ்வழியில் வாழ்கின்றானா? இல்லையே ! முரண்பட்டல்லவா வாழ்கின்றான் ! எண்ணம் முழுவதும் சேறாக உள்ளது!
சிந்தனையில் வறட்சி நிறைந்துள்ளது. உள்ளத்தில் மாசு, குற்றம், குறை, தன்னலம், பொறாமை, பேராசை, சினம் இப்படி ஏகப்பட்ட குப்பைகளைத் துர்வாடை வீசும் நிலையில் அல்லவா? நாம் மனங்களை வைத்து உள்ளோம்.
உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்... ஆம் அந்த உடல் என்னும் ஆலயத்தில் தான் இறைவன் வாழ்கின்றான்... இறைவன் வாழும் வீடு உள்ளம் ஆகும். இந்த உள்ளம் அதாவது மனத்தை எத்துணை தூய்மையாக நாம் வைத்திருக்கவேண்டும். நம்மை நாமே வினவிக் கொண்டாலே அதன் அர்த்தம் விளங்கும்.
எச்செயலிலும் அது குடும்ப உறவுகளாயினும், நட்பு வட்டமாயினும், சமூகத் தொடர்பாயினும், தொழில் சார்ந்த உறவுகளாயினும், நாம் எத்துணை சீக்கிரம் அடுத்தவர்களைக் குறை கூறிவிடுகிறோம். நாம் கூறும் குறைகள் நம்மிடமே கூட இருக்கலாமே ! இதை உணர மட்டும் மறுக்கின்றோம்! காரணம் நமக்குள் இருக்கும் “ஈகோ”, நானே பெரியவன் என்ற எண்ணம் !
எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை ! விட்டுக் கொடுக்கும் மனமின்மை ... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்...
குப்பையாக மண்டிக்கிடக்கும் இந்த எண்ணங்களை நம் உடலாகிய கோயிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது நாம் உணரலாம் நம் உடலில் குடியிருக்கும் உயிராகிய ஜீவன் ஒளிபெற்று மிளிர்வதை.
ஆமை புகுந்த வீடு... சிந்தித்துப் பாருங்கள் வீடு என்பது உடலைக் குறிக்கும். இந்த உடலுக்குள் புகுந்த ஆமையால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும். ஆகவே ஆமையை புகவிடாதீர்கள் என்பது ஆன்றோர் எச்சரிக்கை .
2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவப் பேராசான் தம் திருக்குறளில் ஒன்றல்ல, இரண்டல்ல பதினேழு ஆமைகளுக்கு நம்
மனத்தில் இடம் கொடுக்காதீர்கள். அதனை உள்ளே வர அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதோ அதைப் பட்டியலிடுகின்றேன்.
1. பிறனில் விழையாமை- பிறன்மனைவியை விரும்புதல் கூடாது.
2. அழுக்காறாமை-பொறாமைபடக்கூடாது.
3. வெஃகாமை- பிறர்பொருளைக் கவர விரும்புதல் கூடாது.
4. புறங்கூறாமை- பிறர் பற்றி அவரில்லாதபோது பழித்துப் பேசக்கூடாது.
5. பயனில சொல்லாமை- பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது.
6.கள்ளாமை- திருடக்கூடாது. 7.வெகுளாமை-கோபம்கொள்ளக்கூடாது.
8. இன்னா செய்யாமை-பிறர்க்குத்துன்பம்செய்யக்கூடாது.
9. கொல்லாமை-பிற உயிர்களைக் கொல்லக் கூடாது.
10. கல்லாமை- கல்வி கற்காமல் இருக்கக்கூடாது.
11. சிற்றினம் சேராமை- கீழ்க்குணம் உள்ளோரிடம் சேரக்கூடாது
12. பொச்சாவாமை- மறதி இருக்கக்கூடாது.
13. வெருவந்தசெய்யாமை- பிறர்மனம் நோக வாழக்கூடாது.
14. இடுக்கண் அழியாமை- துன்பம் கண்டு அஞ்சக்கூடாது.
15. அவையஞ்சாமை - சபையைக் கண்டு அஞ்சக்கூடாது.
16. பெரியாரைப் பிழையாமை - பெரியோர் மனம் புண்படச் செயல்படக் கூடாது.
17.கள்ளுண்ணாமை-மதுவருந்தக்கூடாது.
ஒரு ஆமை மனம் என்னும் வீட்டில் நுழைந்தாலே உருப்படாதே.. இத்துணை ஆமைகளை நாம் நுழைய விடலாமா? நம் மனம் என்னும் கோயிலில் இறையாற்றல் நிலைபெற்றிட, மனம் நிறைந்திட, ஒளி வீசிட நாம் மனத்தூய்மை பெறுவோம் !
பிறர் குற்றம் காண்பதை விடுத்து நம் குறைகளை முதலில் களைவோம் !
இயற்கைப் பேராற்றலைக் கண்டு மகிழ்வோம். நலம் பெற்று நீடு வாழ்வோம்!
(தொடரும்)


0 Comments