மோகத்தின் விலை - 40

மோகத்தின் விலை - 40


பெயர் கூட அறியாமல் தன் தாயின் பேஷன்ட் என்று இலக்கத்தில் குறிப்பிடப் பட்டிருந்த இறப்புப் பதிவு பத்திரத்தின் நகலை  பெற்றுக் கொண்டு ஜோசபினுக்கு நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினர் இருவரும். 

வந்த நாள் முதல் சைலன்சில் வைத்திருந்த கைபேசியை கையில் எடுத்தான் கண்ணன். வெளியே வந்த நாள் தொட்டு கடைசி நிமிடம் வரை ஆயிரம் முறை தொடர்பு கொண்டிருந்தான் ஆறுமுகம்.  வெளியே சென்ற கண்ணனப் பற்றிய தகவல் ஏதும் இன்றி மிகுந்த கவலைக்கும், பயத்துக்கும் உள்ளாகி இருந்தான் ஆறுமுகம்.  அதுவும் யாரோ முகமறியா முதியவரை நம்பி கண்ணனை அனுப்பியது தவறோ என்றும் வருந்தினான்.

சிணுங்கிய போனை கையில் எடுத்த ஆறுமுகம், “எங்கே தம்பி போனீங்க?  இப்போ எங்கே இருக்கீங்க?” என்று பதறினான்.

“இதோ வந்து கொண்டிருக்கின்றேன் தாத்தா! கவலை படாதீர்கள்” என்றான் தழுதழுத்த குரலில் கண்ணன்.  குரலின் தன்மையிலேயே எதோ விபரீதம் நடந்திருக்குமோ என்ற பதட்டத்தில் பதறினான் ஆறுமுகம். 

“ஒன்றுமில்லை தாத்தா.  கொஞ்சம் ஜலதோஷம்.  இதோ வந்துக் கொண்டே இருக்கின்றேன்” என்று தொடர்பை துண்டித்தான் கண்ணன்.

வீடு வந்து சேரும் வரை கனத்த மனதுடன் இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை. வீட்டை நெருங்கும் போது பெரியவர் மௌனம் கலைத்தார்.

“தம்பி!  இங்கே நான் இறங்கிக் கொள்கின்றேன். நான் சொல்ல வேண்டிய தகவல் உங்களை வந்தடைந்து விட்டது.  இனி நான் செல்கின்றேன்” என்றார்.

“இல்லை ஐயா.  உங்களால் அப்படி செல்ல இயலாது.  வீட்டுக்கு வாருங்கள். அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு துணையாய் இருந்துவிட்டு செல்லுங்கள்” என்றான் கண்ணன் அழுகையுடன். மறுக்க இயலாமல் பெரியவரும் ‘சரி’ என்று தலையை ஆட்டினார்.

வீடு வந்து குளித்து உடைமாற்றியபின் தோட்டத்தில் மூவரும் அமர்ந்தனர்.  கண்ணன் தழுதழுத்த குரலில் தான் அறிந்த விடயங்களை கூற கண்கலங்க பெரியவருடன் செவிமடுத்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.

அடுத்தநாளே திதிக்கு ஏற்பாடு செய்திருந்தான் ஆறுமுகம்.  ஆற்றங்கரையில் நடந்தேறிய சடங்கில் எட்ட இருந்து கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர். எல்லாம் முடிய சிவராமன் புகைப்படத்தின் பக்கத்திலேயே தன்  தாயின் உருவப்படத்தையும் மாலையுடன் பார்த்து கண்கலங்கினான் கண்ணன்.

(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post