Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த ஒரே ஒரு 'தேசியப்பட்டியல்'!


இலங்கை, இரண்டு  கோடிக்கும் சற்று அதிகமான  மக்கள் தொகை கொண்ட  மிகச் சிறிய தீவாகும். 'கொவிட் -19' க்குப் பின்னர், இத்தீவில்  நாள்தோறும் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அதிரடி மாற்றங்களும் சர்வதேசமும் மூக்குமேல்  விரல்வைத்து நோக்கும் விதத்தில் அமைந்துள்ளன!

அவ்வாறான மாற்றங்களில் முக்கியமான ஒன்றாக அண்மையில் இந்நாட்டில்  அரங்கேறியுள்ள ஜனாதிபதி மாற்றத்தைக் குறிப்பிடலாம்.
ஒரு வாரமாக பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, தன்னுடைய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின்  'ஜனாதிபதி'யானார்!

கடந்த பொதுத்தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு 'தேசியப் பட்டியல்' ஆசனத்தை வைத்து நாடாளுமன்றத்திற்குள்  பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க,
போராட்டக்காரர்களின் உந்துதலினால் மஹிந்த ராஜபக்ச பதவி விலக, ஜனாதிபதி கோட்டாபையினால் ரணில் பிரதமராக்கப்பட்டார்.

சில நாட்கள்  பிரதமராக இருந்த ரணில் , ஜனாதிபதி   கோட்டாபே விரட்டப்பட்டதனால்  பதில் ஜனாதிபதியாகி, பின்னர்   நாடாளுமன்ற உறுப்பினர்கள் 134 பேரின் ஏகோபித்த வாக்குகளினால் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியானார்.

225 பேர் கொண்ட நாடாளுமன்ற அவையில் தனியொருவராக இருந்து, இலங்கை அரசியலில் உயர்நிலைக்கு வருவதற்கு
அவரது அதிர்ஷ்டமே சூழ்நிலைகளை உருவாக்கி, அவரை வெற்றிவாகை சூடவைத்ததெனலாம். இதன் மூலம்  அவரது நீண்டகால ஜனாதிலதிக் கனவு நிறைவேறியுள்ளது!

இலங்கை வரலாற்றில் மட்டுமல்லாது, உலக வரலாற்றிலேயே பொதுத்தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்து, 'தேசியப் பட்டியல்' மூலம் கிடைத்த ஒரே ஒரு ஆசனத்தை வைத்து ஜனாதிபதி  இலக்கினை அடைந்த தனிப்பெருமையை இவர் பெருகின்றார்!
சாணக்கியத்தனமான இவரது காய் நகர்த்தல்களே  இவர்  மிக இலகுவாக ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக்கொள்ளும்  அளவிற்கு அவருக்கு வாய்ப்ப்பினை  அள்ளித் தந்துள்ளதெனலாம்!

1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி எஸ்மண்ட் விக்ரமசிங்க , நளினி விக்ரமசிங்க தம்பதிகளின் இரண்டாவது புதல்வராகப் பிறந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர், பின்னர் சட்டக்கல்லூரியில் நுழைந்து சட்டத்தரணியானார்!

1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்க, 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் வெற்றியீட்டி முதற்தடவையாக நாடாளுமன்றம் பிரவேசித்தார்.
ஜனாதிபதி J. R. ஜயவர்தனவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த வயது குறைந்த அமைச்சராக இவர் திகழ்ந்த இவரது அரசியல் பங்களிப்பு இலங்கையில் முக்கியமான அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டது! 

கல்வி, இளைஞர் விவகாரம், தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சுப் பதவிகளை  வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவைகள், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளை ஸ்தாபிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

1980ம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற இவர், 1993ம் ஆண்டு இலங்கையின் பிரதமரானார்.

பின்னர் 1994ம் ஆண்டில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகிய இவர், இன்றுவரை உடும்புப்பிடியாக அதன் தலைமைப் பதவியிலேயே  நிலைத்து நின்றுவருகின்றார்!

ஐந்து தடவைகள் இலங்கையின் பிரதமராக செயற்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அண்மையில் ஆறாவது பிரதமராகப் பதவியேற்றார். அவ்வப்போது இவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், சபை முதல்வராகவும் செயற்பட்டுள்ளார்.

அண்மையில் எரிக்கப்பட்ட, கொழும்பிலுள்ள தனது பாரம்பரிய இல்லத்தைத் தனது மரணத்தின் பின்னர் தான் பயின்ற ரோயல் கல்லூரிக்கு  உயில் எழுதிக் கொடுத்திருந்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி விகாரை  அவரது தாயாரின் அன்பளிப்புகள் மூலமே உருவானதாகக் கூறப்படுகின்றது. அதன் நிர்வாக சபையில் கூட ரணில் விக்ரமசிங்க சிலகாலம்  பணியாற்றியுள்ளார்.

இந்த நாட்டில் தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர்களை அறிமுகம் செய்ததில் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தவறாவார்.

இவரது சகோதரர் நீண்டகாலமாகத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடாத்தி வருகின்றார். அந்தத் தொலைக்காட்சியையோ, அரச தொலைக்காட்சிகளையோ ரணில் விக்ரமசிங்க  ஒருபோதும் தனது அரசியல்  பிரசாரத்திற்காகப் பயன்படுத்தியதில்லை!

அதன் பின்னர், 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக்கொண்ட அவர்,
அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிக்கா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் இவர்  தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, இரண்டாவது முறையாக இவர் பிரதமரானார்.

எனினும், அவரது பதவிக் காலம் முடியும் முன்னதாகவே  ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் நடவடிக்கையால் ரணில் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு, அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில்  ரணில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

மீண்டும் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு, அதிலும்  தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன்,  மகிந்த ராஜபக்ச வெற்றி வாகை சூடி, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிக்கொண்டார்!

மகிந்த  அரசு,  மூன்று தசாப்த காலங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து,  அந்த யுத்த வெற்றியைத் தாரகமந்திரமாகக் கொண்டு, 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது!

இத்தேர்தலின்போது, மூன்று தசப்தங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த உள்நாட்டுப் போரை இறுதிப்போராக்கி, அதனை  வழிநடாத்திய இராணுவத்தளபதி  சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டு, அவர்  தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே இத்தேர்தலின்போதுதான்  முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

அவ்வப்போது ரணில் கண்ட தோல்விகள் அவரின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மிகப்பெரிய பலமாகவே இருந்தன எனலாம். அரசியல் வரலாற்றில் அவர்  பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், நிதானித்து காய் நகர்த்தல்களை மேற்கொல்வதில் அவர் வல்லவர்!

2015ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா  களமிறக்கபட்டு, அவர் ஜனாதிபதியானார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகாப் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு, மகிந்த ராஜபக்சாவின் அரசியல் வரலாற்றில்  பாரியதொரு சறுக்கலை ஏற்படுத்தியதுடன், ரணிலுக்கு இதுவொரு  மாபெரும்  வெற்றி வாய்ப்பாக  அமைந்ததெனாலாம்!

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலிலும் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். பதவிக்கு வந்தவுடன் அதிரடியான பல மாற்றங்களை ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தினார்.

அவற்றுள் முக்கியமான ஒன்றாக அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைக் குறிப்பிடலாம்.

18வது சீர்த்திருத்தத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்ததன் மூலம், 'ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம்' என்ற திருத்தமொன்றை 19வது அரசியலமைப்பின் மூலம் எற்படுத்தியமையாகும்.

அதே நேரம் ரணிலின் நிர்வாகத்திற்கும், மைத்திரியின் போக்குக்குமிடையில் ஒத்துவராததனால் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இக்காலப்குதியில் அதிகரிக்கலாயின. இதனால், திடீரென ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சாவைப் பிரதமராக அறிவித்தார் மைத்திரி!

இந்த அரசியல் மாற்றம் இலங்கையை ஸ்தம்பிதம் அடையச் செய்ததெனலாம்! இது ரணிலின் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட மற்றுமொரு பின்னடைவு எனவும் குறிப்பிடலாம்.

அதன் பின்னரான நீதிமன்ற நகர்வுகளையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐந்தாவது முறையாக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார்!

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற இலங்கையின்  ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறியாக இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததாலும், நாட்டு மக்கள் சஜித்தை விரும்பியதாலும்  மூன்றாவது முறையும் அவர் ஒரு தியாகத்தைச் செய்ய வேண்டிய நிலை எற்பட்டது.

2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவடைந்து, சஜித் பிரேமதாச தலைமையிலான 'ஐக்கிய மக்கள் சக்தி' உயதமானது!

அதனைத் தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. புதிதாக சஜித் தலைமையில்
உருவான  'ஐக்கிய மக்கள் சக்தி' 54 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், 'ஐக்கிய தேசியக் கட்சி' பாரிய வரலாற்றுத் தோல்வியைத் தழுவிக்கொண்டது!

இத்தேர்தலின் மூலம் ஒரு ஆசனத்தைக் கூடப் பெறமுடியாத துரதிஷ்ட நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தள்ளப்பட்டமைக்குக் காரணம் தமிழ்பேசும் மக்கள் வாக்களிப்பைப் பகிஷ்கரித்ததும், நாட்டில் ஏற்பட்ட கலவறங்கலின்பொது   ரணில் கடைப்பிடித்த  பாராமுகப்போக்குமேயாகும்!

இத்தேர்தலின்போது நாடுதழுவிய நிலையில் ஐ.தே.க. 2.15% வாக்குகளையே பெற்றது. இதன்போது கிடைத்த 'தேசியப்பட்டியல்' வாய்ப்பே ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதியாவதற்கான துரும்புச்சீட்டாக அமைந்ததெனலாம்!

தான் அரசியலுக்கு வந்தநாள்தொட்டு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் நாடாளுமன்றம் நுழைய முடியாத நிலையில் ஒருபோதும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனைபடைத்துவந்த அவர்,கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆதரவை இழந்த நிலையில்,  ஆறு மாதங்களின் பின்னர், அதுவும் தேசியப்பட்டியல் ஊடாக, நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தமை மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர் என்பதையே பரைசாற்றுகின்றது!

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது  பிரதமர் பதவி வகித்துவந்த போதிலும், 'ஜனாதிபதிப் பதவி' என்பது அவரைப் பொறுத்த மட்டில் கைக்கெட்டாத ஒன்றாகவே இருந்து வந்தது.

மக்கள் நிராகரித்துவிட்டபோதிலும், அதிஷ்டம் அவரைக் கைவிடவில்லை!

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட 'கொவிட்' தாக்கமும், அரச ஊழல்களும் இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் விழச்செய்தபோது,  மக்கள் போராட்டங்கள் நாட்டின் நாலாபுறங்களிலும் வெடித்து, நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் மக்களிடத்தில் கொண்டிருந்த 'பிம்பம்'  சிதறிப்போனமையும், கடந்த மே மாதம் 9ம் திகதி இலங்கை அரசியல் வரலாற்றில் "ராஜபக்சாக்கள்" என்னும் சாம்ராச்சியத்திற்கு பெரும் அடி விழுந்தது!

மக்கள் புரட்சியினால், ராஜபக்ச குடும்பத்தில் பிரதான இடத்தைவகித்த  அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்!

இந்தப் பின்னணியிலேயே, பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தாலும் கூட, அவரது இலக்கு ஜனாதிபதிப் பதவியாகவே இருந்தது என்பதற்குத் தான் பிரதமரானதும் 'போராட்டக்காரர்கள் போராடிக்கொண்டே இருக்கட்டும்' என்றவாராக போராட்டக்காரர்களைத் தட்டிக்கொடுத்தமை கூட அவரது நரித்தந்திரத்தை வெளிக்காட்டுகின்றது!

அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில் ரணில் விக்ரமசிங்க ஒரு தந்திர  நரியாகவே பலராலும் வர்ணிக்கப்பட்டுவருகின்றார்.

இருந்தபோதிலும் சிலர் அவர்மீது அதீத நம்பிக்கைக்கு  கொன்டிருந்தமைக்கு அவரது ஆளுமை பிரதான காரணமாக இருந்ததெனாலாம்.  பொறுமையாக இருந்து, அலட்டலில்லாது காய் நகர்த்தும் அவரது அரசியல் நாகரீகம்  அவரின் வெற்றிகளுக்கு வழி சமைத்துள்ளன.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்பதற்குப் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சஜித் மற்றும் அநுர போன்றோர், ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால் தாம் பதவியேற்கத் தயார் என்றனர்.
ஆனால், ரணில் ஒருவரே 'நான் பதவியேற்கின்றேன்.  ஆனாலும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கலைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது' என்ற உறுதியை கோட்டாபயவிடமிருந்து பெற்றுக் கொண்டே பதவிக்கு வந்தார்.

அவர் எந்த காரணத்திற்காக இவ்வாறான உறுதிமொழியைப் பெற்றார்  என்பது அவருக்கு மட்டுமே  தெரிந்த விடயம். ஆனால் அந்த உறுதி மொழியின் பின்னால் ஒரு 'ராஜதந்திரம்' இருந்ததை உணர முடிகின்றது!

குறிப்பாகச் சொல்லப்போனால், போராட்டக் காரர்களின் கோஷமாக இருந்தது கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பதுக்கான்! கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் கிடைக்கும் வரை  அதுவே அவர்களின் கோஷமாக இருந்தது. இவ்வாறு இருக்க போராட்டங்கள் நடக்க அனுமதிக்குமாறு ரணில் கேட்டுக் கொண்டது கோட்டாபயவின் பதவிக்கு அவர் வைத்திருந்த மறைமுக "இலக்கு" என்று கூடக்குறிப்பிடலாம்!

கடந்த ஜூலை  9ம் திகதி திரண்ட போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் கோட்டாபய புறமுதுகிட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். இதனால் ரணிலின் திட்டம் பலித்தது! அடுத்து இரு நாட்களிலேயே அவர் பதில் ஜனாதிபதியானார்!    

அதன் பின்னரான நாட்களில் நாடாளுமன்றில் அடுத்த ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய  வாக்கெடுப்பு நிகழ்ந்தவேளையில்,  ரணில் விக்ரமசிங்க 134  பெரும்பான்மை  வாக்குகளைப் பெற்று  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 

ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வரலாற்றில் பல தடவைகள் பிரதமராகப் பதவியேற்றிருந்த போதிலும்,  'ஜனாதிபதிப் பதவி' என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால்,  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டதை விடவும், பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, கிடைத்த ஒரேயொரு "போனஸ்" ஆசனத்தை வைத்துப் பிரதமராகி, இன்று இலங்கையின்  ஜனாதிபதியாக  வரலாற்றில் தடம் பதித்துவிட்டார்!

இருந்தபோதிலும், அவர் பதவிக்கு வந்த நாளன்றே அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கை சர்வதேசம் அவரை  விமர்சனத்துக்குள்ளாக்கிவிட்டது!

ஆளுமை மிகக் கொண்ட அவர் அதிகாரத்துக்கு வந்தால் சர்வதேசமும் அள்ளிக்கொட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், IMF கூட நழுவிச் செல்லும் பாணியில் நடந்துகொள்வது மக்களைவிசனத்துக்குள்ளாக்கியுள்ளது.
எல்லாவற்றிற்குமே  வரிசைகளில் நின்று சலித்துப்போய்விட்ட இலங்கை மக்கள், அதலபாதாளத்தில் விழுந்து, சிதைந்து சின்னாபின்னமாகிப்போன  இந்நாட்டை, சர்வதேச ஆளுமை கொண்டவராகக் கருத்தப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எப்படி மீட்டெடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!


Post a Comment

0 Comments