Ticker

6/recent/ticker-posts

மேற்குலகம் மூன்றாம் உலகப் போரில் சிக்கிவிட்டதா?

யுத்தம் முடிவுக்குவர உலக நாடுகளின் ஒத்துழைப்பே காலத்தின் தேவையாகும்!


ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமான  உக்ரேன்,579,320 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும்.

யுத்தத்துக்கு முன்னர் 4.6 கோடி மக்கள் வாழ்ந்துவந்த இந்நாட்டிலிருந்து, யுத்தம் தொடங்கியது முதல் கனிசமான மக்கள் தொகையினர் நாட்டைவிட்டும் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

தனது பாதுகாப்புக்காக நட்பு நாடுகளைச் சுயமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாடொன்றிற்கு இருக்கின்றது என்பதால், மேற்கு நாடுகளின்இராணுவக் கூட்டணியான நேட்டோவில் இணையத் துடித்துக்  கொண்டிருந்தது இந்நாடு.   இந்தத்துடிப்பே இந்நாட்டிற்கு வினையாக வந்து, இப்பொழுது நாடு சின்னாபின்னமாகியுள்ளது!

'நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது' என்று 1990ல் தமக்கு அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக ரஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டிய  நிலையில், 'உக்ரேன் ஊடாக மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்தலாம்' என அஞ்சிய அவர், கிழக்கு ஐரோப்பாவில் 'நேட்டோ' தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று நீண்டகாலமாகக் கூறிவந்தார்.

அத்தோடு 'உக்ரேன் ஒருபோதும் நேட்டோவில் அங்கத்துவம் பெறமாட்டாது' என்ற உத்தரவாதத்தை, மேற்குலக நாடுகள் தமக்குத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உக்ரேனின் சில பகுதிகளில் ரஷ்யாவுடன் நெருங்கிய சமூக, கலசாார தொடர்புகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான
மக்கள் தொகை உள்ளமையைச்  சாதகமாகக் கொண்டு, கேந்திர ரீதியாக அந்நாட்டுக்குள்  நுழைவதை வாய்ப்பாக்கிக் கொள்ள முற்படும் நோக்கில், கடந்த பெப்ரவரி 24ம் திகதி உக்ரேனைத் தாக்கத் தனது படைகளுக்கு உத்தரவிட்டார்!

2014ம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியிலிருந்து

அகற்றியபோது, உக்ரேனின் தெற்கு கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதுடன்,  கிழக்கு உக்ரேனின் டோநேக்ஸ், லுஹான் பகுதிகளிலிருந்த பிரிவினைவாதிகளையும் ஆதரித்து வந்த நிலையில், ரஷ்ய இனமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது உக்ரேன்  தாக்குதல்களை  நடாத்தி, சுமார் 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் 'நேட்டோ' நேரடியாகத் தலையிடாதபோதிலும்,  பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 'நேட்டோ' தனது படைகளை  நிலைநிறுத்தி உக்ரேனுக்கு உதவிக்கரம் தந்தது! அதுவுமல்லாமல்,  தமது பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், நிலைமையைச் செயலிழக்கச் செய்யும் நோக்கில்  பன்னாட்டுப் போர்த்தளபாடங்களுடன், நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா,  போலாந்து ஆகிய இடங்களில் நிலை நிறுத்தியது.

உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையிலும் வான் கண்காணிப்புக்களை கிழக்கு ஐரோப்பாவில் 'நேட்டோ' விரிவுபடுத்தியது.

இந்தப் படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை ரஷ்யா விரும்பியது!

2015ல் உக்ரேன் அரசுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடாத்தி ஜெர்மனி, பிரான்ஸ் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில் ரஷ்ய இனமக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவதுடன்,  அம்மக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை ஏற்று உக்ரேனுடன் இணைந்த பகுதியாக பாதுகாப்புடன் ரஷ்ய இனமக்கள் வாழும் வகையில் எல்லைப்புறக்கொள்கையை உருவாக்கவேண்டுமென்று ரஷ்யா விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ,இதனை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட OSCE அமைப்பு  மேற் பார்வையிடுவதற்கான  பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையிலும் கூட, கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதை உக்ரேன் தடுத்து வந்தது.

OSCE குழுவின் தான்தோன்றித்தனமே  இந்நிலைக்கு காரணம் என்பதால் இதற்குப் பொறுப்புவகித்த ஜெர்மன், பிரான்ஸ் நாடுகள் அமைதி காத்துக்கொண்டன.

ஒப்பந்தம் செயற்படுத்தப்படாமைக்கு  நேட்டோ அமைப்பும், அமெரிக்க-இங்கிலாந்து போன்ற நாடுகளின் பக்கபலத்துடன், ரஷ்ய இனமக்கள் வாழும் பகுதிகளில் பெருமளவு  ராணுவத்தை உக்ரேன் குவித்தது.

ரஷ்ய இனமக்கள் வசிக்கும் இப்பகுதிக்குப் போதிய பாதுகாப்பு வேண்டுமெனத் தொடர்ந்து ரஷ்யா வலியுறுத்தியபோதிலும் உக்ரேன் அதனை அலட்சியம் செய்து வந்தது.

டான்பாஸ் பகுதி மக்கள் 1990களிலிருந்தே தமக்கு ஆட்சி அதிகாரப்பகிர்வு கோரிவந்ததுடன், தங்கள் மொழி ஆட்சிமொழியாகவேண்டுமென்றும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.  இதற்கான பொதுவாக்கெடுப்பில் 90% மக்கள் ஆதரவாக வாக்களித்த போதிலும்  உக்ரேனின் தேசியவாத, பெரும்பான்மையின ஆதிக்க நிலை காரணமாக இவை புறக்கணிக்கப்பட்டு, அப்பகுதி பொருளாதார வளர்ச்சி மந்த நிலையாக்கப்பட்டது. இதனால் வளமான இப்பகுதி கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது.
இச்சூழலை மையப்படுத்தியே  ரஷ்யா தனது படையை உக்ரைன்  எல்லையில்  குவிக்க ஆரம்பித்தது!

உக்ரேன் படையினரின் மனித உரிமை மீறல்  மறைக்கப்பட்டு, ரஷ்யாவின் படைக்குவிப்பு மட்டுமே போருக்கான காரணமாக  சித்தரிக்கப்பட்டது!

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து எட்டு மாதங்கள்  தாண்டிவிட்ட நிலையில்,  ரஷ்யா உக்ரேனின் லூகான்ஸ்க், டோனெட்ஸ்க், கேசர்சன், ஸபொரிட்சியா ஆகிய நான்கு மானிலங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக கடந்த வெள்ளியன்று அறிவித்தது!

2022 பெப்ரவரி 24ம் திகதி ஆரம்பமான யுத்தம், முடியாமற்றொடர்கின்ற நிலையில், 'தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை' எனவும் ரஷ்யா எச்சரித்து, மிரட்டல் விடுத்துள்ளது.

தொடராக ரஷ்ய பாதுகாப்பு படையினர்    தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைனின் தலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும்  குண்டுமழை பொழிந்து தாக்கி வந்தனர்.

அதனால், இந்தப் போரில் உக்ரேனின்
உட்கட்டமைப்பில் 30 சதவீதம் தரைமட்டமாக்கப்பட்டு, நாடு
நிர்மூலமாக்கப் பட்டிருக்கின்றது!

8,000 கிலோ மீற்றர் அளவிலான போக்குவரத்துச் சாலைகள்  தகர்க்கப் பட்டுள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள், 4,430 குடியிருப்புகள், 92 தொழிற்சாலைகள், 378 பாடசாலைகள், 138 மருத்துவமனைகள், 12 விமான நிலையங்கள், 7 அனல்மின் நிலையங்கள் தகர்க்கப் பட்டிருக்கின்றன.

உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரேன் முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில், இந்தப் போர்  காரணமாக இரு நாடுகளினதும் ஏற்றுமதிகள் தடைபட்டுள்ளன.

பொதுவாக இந்த யுத்தம் காரணமாக உக்ரேன், ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமன்றி, இவ்விரு நாடுகளிலிருந்தும்  இறக்குமதியை நம்பியிருக்கும் உலகின் பல  நாடுகள்  சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசிகளும், பணவீக்கமும்  அதிகரித்துள்ள நிலையில், இடர்களை  எதிர்கொண்டுள்ளன.

ரஷ்யா உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது.

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பெற்றோலியத் தேவையில் ரஷ்யாவை பெருமளவில் சார்ந்துள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் எரிசக்திக்கு விதிக்கப்பட்ட தடையால்  மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் படையெடுப்பின் பின்புலம் உணரப்படாமல்,   உக்ரேன் ஆதரவுக் குரல்  எழுந்த நிலையில், 'மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கிவிட்டது' என்பதாக, விளாடிமிர் புட்டின் காலத்து ரஷ்யா தொடர்பிலான ஆய்வுகளை   மேற்கொண்டுவரும்  வெள்ளை மாளிகையின்  முன்னாள் ஆலோசகர் 'பியோனா ஹில்' அண்மையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதை சர்வதேச ஊடகங்கள்  செய்தியாக வெளியிட்டுள்ளன.

கொவிட் 19 ன்  கொடூரத் தாக்கத்திலிருந்து மீண்டு, உலக நாடுகள் தமது பொருளாதாரத்தை சீர்படுத்திக் கொள்ள பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்திலேயே இந்த யுத்தம் தொடங்கி வைக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்திற்குமே  இதன் தக்கம் பொருளாதாரத்திலும் அரசியல் மட்டத்திலும் சீர்குலைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த கொடூர யுத்தம் காரணமாக உலக நாடுகளில் ஏற்பட்ட பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, அரசியல் மாற்றங்கள், எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை ஏற்றம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றன.

அதனால் உலக நாடுகள் அனைத்துமே ஒன்றிணைந்து பக்கசார்பில்லாமல், சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்குமிடையே சமரசத்தை எற்படுத்தி, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவையாகும்!

ஐ.ஏ.ஸத்தார்


Post a Comment

0 Comments