#strengthenMMDA அமைப்பின் மீது சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அவர்கள் முன் வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கான பதில் அறிக்கை

#strengthenMMDA அமைப்பின் மீது சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அவர்கள் முன் வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கான பதில் அறிக்கை



நவம்பர் மாதம் 17ஆம் தேதி விடிவெள்ளி பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கின்ற, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்க்குத் திருத்தத்தை மேற்கொள்ள ஆலோசனை வழங்கவென முன்னாள் நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவினது தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அவர்கள் குறித்த குழுவினது அறிக்கையின் மீதான #strengthenMMDA அமைப்பின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்ற தலைப்பில் தனது  கருத்தைப் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் குறிப்பிடுகின்ற போது #strengthenMMDA அமைப்பானது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கின்றார்.



 #strengthenMMDA அமைப்பானது எந்த ஒரு அரசியல் கட்சிகளினதோ, சமயரீதியான இயக்கங்களினதோ, வேறு எந்த நிதியுதவி வழங்கும் நிறுவனங்களினதோ பின்னணிகள் எதுவுமின்றிச் சுதந்திரமாக இயங்குகின்ற, மேலும் தனது சொந்தப் பணத்தையும் நேரத்தையும் இறையச்சத்தோடு சமூகத்திற்காகச் செலவு செய்கின்ற புத்திஜீவிகளை அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்பு. (கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் அல்ல) எனவே #strengthenMMDA அமைப்பின் மீது குழுக்களின் தலைவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாகும். தங்களது முகத்திரைகள் கிழிக்கப்படுகின்ற போது அடுத்தவர் மீது அபாண்டங்களைச் சுமத்துவது அவர்களின் வங்குரோத்து நிலைமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

#strengthenMMDA அமைப்பானது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைத் திருத்த ஆலோசனை வழங்கவென அமைக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்பதற்கு மூன்று அடிப்படையான காரணங்களை முன்வைக்கின்றது. 

1. அந்த அறிக்கையிலே எமது மார்க்க விதிமுறைகளுக்கு முரணான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 

2. முஸ்லிம்களுடைய நீண்ட கால இருப்புக்கான அடையாளங்களுள் ஒன்றான காதி நீதிமன்ற முறைமை என்ற அடையாளம் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. 

3. செய்யப்பட்டிருக்கின்ற பரிந்துரைகளில் சில எமது சமூகத்தை மேலும் பல சிக்கல்களுக்குள் தள்ளிவிடக் கூடிய ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றது என்பனவாகும்.

மேலும் இந்தக் குழுவானது இனவாத அரசாங்கம் ஒன்றின் "ஒரே நாடு ஒரே சட்டம்"என்ற நிகழ்ச்சி நிரலின் கெடுபிடிகளுக்கு அமைவாக நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஜனநாயகத்துக்கு முரணாக நிர்ப்பத்தங்களின் பெயரில் தாயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் எனவே அது நிராகரிக்கபட வேண்டும் என்றும் #strengthenMMDA அமைப்பு கோரியிருக்கிறது. 

மேலே சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை எனக் கூறுகின்ற குழுக்களின் தலைவர், அமைச்சரவையின் தீர்மானத்தின் காரணமாக 'காதி நீதிமன்ற முறைமை, என்ற பெயருக்குப் பதிலாக ‘Marriage conciliator' என்ற தலைப்பு இடப்பட்டிருப்பதாகவும் அந்தத் தலைப்பின் கீழ் காதி நீதிமன்ற முறைமை உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். இதைத்தான் #strengthenMMDA அமைப்பு முஸ்லிம்களின் அடையாளங்களை அழிப்பதற்கான பரிந்துரை என்று கூறுகின்றது. இது அடிப்படை அற்ற வாதமா?

மட்டுமல்லாது ‘Marriage conciliator' என்ற ஏற்பாட்டில் காதி நீதிமன்றங்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழக்குகள் செல்லக்கூடியதான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

மேலும் அவர் கூறுகையில் திருமணப்பதிவில் மணப்பெண்ணின் கைய்யொப்பம் பெறப்பட வேண்டும் என்பது அமைச்சரவையின் தீர்மானம் என்கின்றார்.

ஆனால் மணப்பெண்ணின் கையொப்பம் பெறப்படும் காரணத்தினால் வலியின் கையொப்பம் கட்டாயமானதல்ல என்ற தீர்மானம் யாருடையது? இஸ்லாமியத்திருமணம் ஒன்றில் திருமண ஒப்பந்ததாரர்கள் மணமகனும் மணமகளின் வலியும் என மார்க்கம் வழிகாட்டியிருக்கின்ற போது 18 வயதான பெண் தனது திருமண ஒப்பந்தத்தைச் செய்ய முடியும் என்ற விதியை எமது தனியார் சட்டத்தில் நுழைப்பது எந்த அடிப்படையில்? இந்தக் கேள்வி அடிப்படை அற்ற வாதமா?

இன்னும், அமைச்சரவையினுடைய அழுத்தத்தின் பெயரில் பெண்களைக் காதிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தச் சட்டத்திருத்தத்திற்கான பரிந்துரைகளில் உள்வாங்கப்பட்டிருக்கின்றதா இல்லையா? 

18 வயதைத் திருமண வயதாக நிர்ணயிப்பதற்கான அமைச்சராவையின் தீர்மானத்தால், அதற்கு ஒரு விதிவிலக்கு வாசகம் கூட உள்ளடக்கப்படாமல் (விதிவிலக்கு வாசகம் அமையப்பெற முடியும் என ஐ. நா. சபையின் வழிகாட்டல் இருக்கின்ற போதும்) அவசியம் ஏற்படுகின்ற போது கூட 18 வயதுக்கு முன்னர் ஒரு திருமணத்தைச் செய்ய முடியாத நிர்ப்பந்தமான சூழ்நிலைக்குச் சமூகத்தைத் தள்ளுகின்ற பரிந்துரை இருக்கின்றதா இல்லையா? 

இவைகள் எல்லாம் அந்தச் சட்ட திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற போது #strengthenMMDA அமைப்பினது குற்றச்சாட்டுகள் எவ்வாறு அடிப்படை அற்ற வாதமாக அமையும்? 

எனவே 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதைபோல் குழுத்தலைவரின் கருத்துரையிலேயே இந்தச் சட்டத் திருத்தத்திற்கான பரிந்துரைகள் மீதான #strengthenMMDA அமைப்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என அவரே சான்று பகர்கின்றார்.

சடடத்தரணி சப்ரி ஹலீம்தீன் அவர்களின் தலைமையிலான குழுவானது கடந்த இனவாத அரசாங்கம் ஒன்றிலே அமைக்கப்பட்ட ஒரு குழுவாக இருப்பதையும், அந்த இனவாத அரசினுடைய அமைச்சரவையின் அழுத்தங்கள் இந்தக் குழுவின் மீது திணிக்கப்பட்டிருப்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு,  அக்குழுவினுடைய பரிந்துரைகள் சுதந்திரமாக சமூக அக்கறையை மாத்திரம் கருத்தில் கொண்டு மார்க்க வழிகாட்டல்களைப் பூரணமாகப் பின்பற்றிச் செய்யப்படவில்லை என்பதையும் பகிரங்கமாக ஒரு ஊடகத்தில் அறியத் தந்தமைக்கு குழுக்களின் தலைவருக்கு #strengthenMMDA அமைப்பு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் குழுவினது தலைவருடைய இந்த அறிக்கையினை ஆதாரமாகக் கொண்டு, ஜனநாயக விழுமியங்கள் பின்பற்றப்படாமல் அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானங்கள் எட்டப்பட்டு முன்மொழியப்பட்டுள்ள இக்குழுவின் பரிந்துரைகளை ரத்துச் செய்யுமாறும் இந்தக் குழுவினை உடனடியாகக் கலைக்குமாறும் நீதி அமைச்சரையும் அரசாங்கத்தையும் #strengthenMMDA அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.



 


Post a Comment

Previous Post Next Post