ஒரு சமுதாயம் தன் இறந்தகால வரலாற்றினை தெரிந்து வைத்திருக்கவில்லையோ அச்சமுதாயத்தினால் நிகழ்கால எதிர்கால வாழ்க்கைத்திட்டங்களை அமைக்கவோ, செயற்படுத்தவோ முடிவதில்லை. இறந்த காலத்தில் சமுதாயம் செய்துள்ள நல்லவைகளை பாதுகாப்பதும், விட்ட தவறுகளை உணர்ந்து அவைகளை அகற்றுவதற்கான எதிர்காலத்திட்டங்களை வகுப்பதும் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றிவரும் பணியாகும்.
பூகோள ரீதியாக முற்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் இணைந்தே இருந்திருந்தன. கடற்கோள், கடலரிப்பு, நிலநடுக்கம் போன்றவற்றால் இலங்கைத்தீவு பிரிகையுற்ற நிலையில், ஆதம் (அலை) அவர்கள் சுவனலோகத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது, அன்னார் இலங்கையின் உயர்ந்த மலைப்பிரதேசத்தில் தனது காலடியை வைத்துள்ளதாதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.
“பாவா ஆதாமலை” என்று குறிப்பிடப்படும் இம்மலை, இலங்கையில் வாழும் பல்சமூகத்தினரால் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது.
“அல் பிதாயா வன் நிஹாயா” எனும் கிரந்தத்தின் முதலாம் பாகத்தில் இந்நிகழ்வு பற்றி அறியப்படுவதாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். இம்மலைப்பகுதியின் முக்கியத்துவம் பெற்ற ஓரிடமாக “மஸ்கெலியா” அமைந்துள்ளது.
கி. பி. 1409ல் “சேனதிஸ்ஸ கிராமம்” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இது, 1798-1815 காலப்பகுதியில் கண்டியை ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்துள்ளனர். 1869ல் இப்பிரதேசத்தின் பிரதானியாக “மஸ் எலிஸ்னோ” இருந்தமையினால், இவ்விடம் “மஸ்கெலிய” என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
மலைவளம், விளைநிலம் தாங்கி நிற்கும் மஸ்கெலியாவின் நீரோட்டப்பகுதிக்கு அருகாமையில் சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பள்ளிவாயில் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. ஆங்கிலேயரின் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் இவ்விறையில்லத்தை 1875ல் அமைத்துள்ளனர்.
இலங்கைத்தீவின் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மஸ்கெலிய ஓயாத்திட்டத்தினால் மவுசாக்கலை நீர்த்தேக்கம் 1969ல் உருவாக்கப்பட்டதினால், மஸ்கெலியாவின் பழைய நகரமும் பள்ளிவாயிலும் நீரில் மூழ்கியது.
அரசினால் நஷ்டஈடாகக் கொடுக்கப்பட்ட நிதித்தொகையோடு புதிய பள்ளிவாயில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையிலேயே, எதிர்பாராத விதமாக இந்தோனேசியா ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்த Martin air DC8 விமானம் ஏழுகன்னி மலையில் மோதி வெடித்துச் சிதறி, விபத்துக்குள்ளானது.
1974 திஸம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற இத்துயர நிகழ்வு ஏற்பட்டு இற்றைக்கு 48 வருடங்கள் ஆகின்றன. இவ்விமானத்தில் பயணித்த 184 ஹஜ் யாத்ரீகர்களுடன், விமான ஊழியர்கள் ஏழு பேர்களுமாக 191 பேர்கள் மரணத்தைத் தழுவிக்கொண்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
இது உலகில் நிகழ்ந்த இரண்டாவது பாரிய விமான விபத்தாகக் கணிக்கப்படுகின்றது. இதன் நினைவாக நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டதுடன், ஞாபகார்த்தப்பள்ளிவாயில் ஒன்றும் அமைக்கப்பட்டு, கடந்த 15 வருடங்களுக்கு முன்னர், 2007.04.13ம் திகதி இப்பள்ளிவாயில் திறந்து வைக்கப்பட்டது.
இப்பள்ளிவாயில் இந்தோனேசிய அரசின் நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்டமையால், Indonesian Memorial Mosque என்று இது அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!
விபத்தின்போது உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்போமாக!
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments