Life is what happens when you're busy making other plans.
‘வாழ்க்கை பற்றிய முக்கியமான திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்போது நேர்கிறதே, அதுதான் உங்களின் வாழ்க்கை’ என மொழிபெயர்க்கலாம்.
இன்றையச் சூழலில் அந்த மேற்கோளில் சிறு திருத்தத்தைச் செய்ய வேண்டியிருக்கும்.
‘வாழ்க்கை பற்றிய முக்கியமான திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்போது நேர்கிறதே, அதுதான் உங்களின் அழிவு’
நமக்கு நேரும் வாழ்க்கையை நாம் கவனிக்காதது போலவே, நமக்கு நேரும் அழிவையும் நாம் கவனிக்காமல் இருக்கிறோம். வாழ்வதற்கென நாம் பல கனவுகளை கொண்டு திட்டங்கள் தீட்டும் அதே சமயத்தில் பெருவேகத்தில் அழிவு நேர்ந்து கொண்டிருக்கிறது.
காரணம், காலநிலை மாற்றம்!
2015ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தை ‘காலநிலை மாற்றம்’.
பூமிக்குள்ளிருந்து எடுக்கப்படும் புதைபடிம எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவை, பயன்படுத்தப்படும்போது கார்பன் வாயுவை வெளியிடுகின்றன. கார்பன் வாயு, பூமியின் வெப்பத்தைக் கூட்டுகிறது. வெப்பம் பனிப்பாறைகளை உருக்குகிறது. உருகும் பனி, கடல் மட்டத்தை உயர்த்துகிறது. உயரும் கடல்மட்டம், நீரோட்டத்தை மாற்றுகிறது. மாறும் நீரோட்டம் இதுவரை இருந்த காலநிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு பாணியிலான காலநிலைக்கு பழக்கப்பட்டுதான் மனித இனம் கடந்த 10,000 வருடங்களில் வாழ்ந்து தழைத்து வந்தது. அந்த காலநிலை மாறுகையில் மனித இனம் உள்ளிட்ட எல்லா உயிர்களின் வாழ்க்கைகளும் கேள்விக்குறி ஆகி விடுகிறது.
பெட்ரோல், டீசல், நிலக்கரி ஆகியவற்றை சார்ந்துதான் நிறுவனங்கள் இயங்குகின்றன. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவை எல்லாவற்றையும் இயக்கும் அரசும் இயங்குகிறது. புதைபடிம எரிபொருட்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டால், இதுவரையிலான உலகப் பொருளாதாரத்தையே மாற்ற வேண்டியிருக்கும். அதை செய்யத் தயங்கிக் கொண்டுதான் உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் முன்னெடுப்புகளை தொடங்காமல் காரணங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன.
2015ம் ஆண்டில் உலக நாட்டு விஞ்ஞானிகள் ஐநா சபையில் கூடி உலக நாட்டுத் தலைவர்களை சந்தித்து முக்கியமான காலக்கெடு விதித்தனர். 2030ம் ஆண்டுக்குள் உலக வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் நிறுத்த வேண்டும். அப்போதுதான் மனித இனம் அழிவதை தடுக்க முடியும். அந்த 1.5 டிகிரி செல்சியஸ்ஸே பல வகை பாதிப்புகளை காலநிலை வழியிலும் சமூகப் பிரச்சினைகள் வழியிலும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டில் இப்போது உலகம் இருக்கும் சூழலில் புவிவெப்பம் 1.1 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயர்ந்து விட்டது. அதாவது காலக்கெடு விதித்த 7 வருடங்களில் 1.1 டிகிரி அதிகரிப்பு. இன்னும் 8 வருடங்கள் இருக்கின்றன. சாத்தியம்தானா?
ஐநா சபையின் யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பு நம்பிக்கைக் கொடுப்பதாக இல்லை.
இன்னும் முப்பது வருடங்களில் உலகிலுள்ள பனிப்பாறைகளின் மூன்றில் ஒரு பங்கு உருகி விடுமென கூறியிருக்கிறது கணக்கெடுப்பு.
1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் புவிவெப்பம் நிறுத்தப்பட்டால், மூன்றின் மீதமுள்ள இரண்டு பங்கு பனிப்பாறைகளையேனும் காக்க முடியும் எனக் குறிப்பிடுகிறது அறிக்கை.
பனிப்பாறைகள், பனி ஆறுகள் போன்றவற்றை உள்ளடக்கும் அரசு கொள்கைகளை அரசுகள் வகுக்க வேண்டுமெனவும் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
உலக நாடுகளின் பாசாங்குகளால் காலநிலை மாற்றம் சரியாகப் போவதில்லை. மெய்யான தீர்வுகளும் அமைப்பு மாற்றமுமே மானுட நீட்சிக்கான வழிகள்.
அல்லவெனின் வாழ்க்கை நேரும் முன்னமே அழிவு நேரும்!
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை