உலகக்காற்பந்து இறுதி வாய்ப்புக்குள் நுழைந்துவிட்ட மெஸ்ஸியின் ஆர்ஜெண்டினா அணி! -Highlights

உலகக்காற்பந்து இறுதி வாய்ப்புக்குள் நுழைந்துவிட்ட மெஸ்ஸியின் ஆர்ஜெண்டினா அணி! -Highlights


நவம்பர் 20ம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வரும் 22வது உலகக் கிண்ண காற்பந்துப் போட்டித் தொடரில், லுசைஸ் ஐகானிக் அரங்கத்தில் நடந்து முடிந்த அரையிறுதி ஆட்டத்தின் முதற்போட்டியில் குரோஷியா அணியைத் தோற்கடித்து,  ஆர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது! 

ஆட்டத்தின் ஆரம்பமுதல் கோல் போடுவதற்கு ஆர்ஜெண்டினா வீரர்கள் தீவிரம் காட்டி வந்தபோதிலும், 34வது நிமிடத்திலேயே தனக்குக் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆர்ஜென்டினா அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி முதல் கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். 39வது நிமிடத்தில் அதே அணியின் வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் ஒன்றினை அடித்ததன் மூலம் முதல் பாதி முடிவில், ஆர்ஜெண்டினா 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் நின்றது. 


இரண்டாவது பாதியின் 69வது நிமிடத்தில் மெஸ்ஸி தந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அல்வொரஸ் மேலும் ஒரு கோலை அடித்து அர்ஜென்டினா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதிகப்படியாட்ட நேர முடிவுவரை குரோஷியா வீரர்களால் கோல் அடித்துக்கொள்ள முடியாமற் போய்விட்டதனால் 3:0 கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா அணி ஆறாவது முறையாகவும் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டியின் இறுதி வாய்ப்புக்குள் நுழைந்துள்ளது! 

இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்   Golden Boot  விருதைக் கைக்கெட்டிய தூரத்தில் வைத்திருக்கும் வீரராகத் தற்போதுவரை, பிரான்ஸைச் சேர்ந்த கிலியன்  எம்பாப்பே  5 கோல்களை  அடித்து முன்னிலை வகிக்கும் நிலையில், ஆர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸி அரையிறுதியில் அடித்த கோல் ஒன்றின் மூலம், பிரான்ஸின் கிலியன்  எம்பாப்பேயுடன் சமப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது! 


கத்தார்-2022 காற்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அணியுடன் மொரோக்கோவா அல்லது பிரான்ஸா மோதப்போகின்றது என்பதை அறிய  நாளை வரை பொறுத்திருப்போம்!



 


Post a Comment

Previous Post Next Post