ஆப்கானிஸ்தான் வறுமை: பசியில் துடிக்கும் குழந்தைகளை மாத்திரை கொடுத்து தூங்க வைக்கும் மக்கள்

ஆப்கானிஸ்தான் வறுமை: பசியில் துடிக்கும் குழந்தைகளை மாத்திரை கொடுத்து தூங்க வைக்கும் மக்கள்


தனது ஆறு குழந்தைகளுக்குமே மயக்கத்தை உண்டாக்கும் மாத்திரையைக் கொடுத்து தூங்க வைப்பதாக குலாம்(நடுவில்) கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மயக்க உணர்வை ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுக்கிறார்கள். சிலர் தங்கள் மகள்களை, உடல் உறுப்புகளை விற்று வறுமையைச் சமாளிக்கின்றனர். தாலிபன், ஆட்சியைக் கைப்பற்றி, வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டுள்ள இரண்டாவது குளிர்காலத்தில், லட்சக்கணக்கானவர்கள் பஞ்ச காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.

“எங்களுக்கு உணவு இல்லை. எங்கள் குழந்தைகள் தூங்கவில்லை, அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் மருந்தகத்திற்குச் சென்று, மயக்கமாக உணர வைக்கும் மாத்திரைகளை வாங்கி எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் தூங்குகிறார்கள்,” என்று கூறுகிறார் அப்துல் வஹாப்.

அவர் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராட்டுக்கு சற்று வெளியே, போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இடம் பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களால் நிரம்பிய, ஆயிரக்கணக்கான சிறிய மண் வீடுகளைக் கொண்ட குடியிருப்பில் வசிக்கிறார்.

எங்களைச் சுற்றித் திரண்டிருந்த கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆண்களில் அப்துலும் இருந்தார். “எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுக்கிறார்கள்?” என்று நாங்கள் கேட்டோம்.

“நிறைய பேர், அனைவரும் கொடுக்கிறோம்,” என்று அவர்கள் பதிலளித்தனர்.

குலாம் ஹஸ்ரத் தனது அங்கியின் பாக்கெட்டில் மாத்திரை இருப்பதை உணர்ந்து அதை வெளியே எடுத்தார். அது பொதுவாக மனப்பதற்றக் கோளாறுகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் அல்பிரஸோலம் என்ற மாத்திரை அது.

குலாமுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அதில் இளையவனுக்கு ஒரு வயது. “நான் அவனுக்கும் கொடுக்கிறேன்,” என்று கூறினார்.

மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதாகக் கூறிய எஸ்சிலாடோபாம், செர்ட்ராலைன் மாத்திரைகளை எங்களிடம் காட்டினார்கள். அவை பொதுவாக மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.

போதிய ஊட்டச்சத்து கிடைக்காத சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் கொடுக்கப்படும்போது, நாள்பட்ட சோர்வு, தூக்கம், நடத்தை சீர்குலைவு போன்ற பல பிரச்னைகளுடன் கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஓர் உள்ளூர் மருந்தகத்தில் 10 ஆப்கனிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 9.22 ரூபாய்) அல்லது ஒரு துண்டு ரொட்டியின் விலையில் ஐந்து மாத்திரைகளை வாங்க முடியும் என்பதைக் கண்டறிந்தோம்.

ஒரு துண்டு ரொட்டியின் விலைக்கு நிகராக ஐந்து அல்பிரஸோலம் மாத்திரைகளுக்குச் செலவாகிறது.

நாங்கள் சந்தித்த பெரும்பாலான குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சில ரொட்டித் துண்டுகளை அவர்களிடையே பகிர்ந்து கொள்கின்றன.

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான ரீதியிலான ஒரு “பேரழிவு” இப்போது நிகழ்வதாக ஐநா கூறியுள்ளது.

ஹெராட்டுக்கு வெளியே உள்ள பெரும்பாலான ஆண்கள் தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக கடினமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் பொறுப்பேற்றது. அந்தப் புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாத காரணத்தால், ஆப்கானிஸ்தானுக்குள் வந்துகொண்டிருந்த வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இது பொருளாதாரச் சரிவைத் தொடக்கி வைத்ததால், மக்கள் பெரும்பாலான நாட்களில் வேலையில்லாமல் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வேலை கிடைக்கும் அரிதான நாட்களிலும்கூட, அவர்கள் சுமார் 100 ஆப்கனிஸ் அல்லது ஒரு டாலர் அளவுக்குத்தான் சம்பாதிக்கிறார்கள்.

நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் தங்கள் குடும்பங்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைக் கண்டோம்.
ஹெராட்டுக்கு சற்று அருகேயுள்ள குடியிருப்பில் வசிக்கும் ஆண்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

அம்மார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறினார். எங்களிடம், அவரது உடலின் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக, வயிற்றின் குறுக்கே சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் ஒன்பது அங்குலத்திற்கு இருந்த தையல் போட்ட தழும்பைக் காட்டினார்.

அவரைப் பாதுகாப்பதற்காக அவரின் அடையாளத்தை மறைத்துள்ளோம். தனது இருபதுகளில் இருக்கும் அவர், வாழ்வின் முதன்மையான ஆரோக்கியத்தோடு இருந்திருக்க வேண்டும்.

ஆனால், “எந்த வழியும் இல்லை. உள்ளூர் மருத்துவமனையில் சிறுநீரகத்தை விற்கலாம் என்று கேள்விப்பட்டேன். அங்கு சென்று அவர்களிடம் நான் விற்க விரும்புவதாகத் தெரிவித்தேன். சில வாரங்களுக்குப் பிறகு என்னை மருத்துவமனைக்கு வருமாறு குறிப்பிட்டு தொலைபேசி அழைப்பு வந்தது,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் சில பரிசோதனைகளைச் செய்தார்கள். பிறகு மயக்கமடையச் செய்யும் ஊசி ஒன்றை எனக்குப் போட்டார்கள். நான் பயந்தேன், ஆனால் எனக்கு வேறு வழியில்லை.”

அதற்காக அம்மாருக்கு சுமார் 270,000 ஆப்கனிஸ் விலையாக வழங்கப்பட்டது. அதில் பெரும்பான்மை தொகை தனது குடும்பத்திற்கு உணவு வாங்குவதற்காகக் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் செலவானது.

“ஒரு நாள் இரவு சாப்பிட்டால் அடுத்த நாள் சாப்பிட முடியாது. என் சிறுநீரகத்தை விற்ற பிறகு நான் பாதி ஆளாக உணர்கிறேன். எனக்கிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. வாழ்க்கை இப்படியே தொடர்ந்தால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது,” என்கிறார் அம்மார்.

மூன்று மாதங்களுக்கு முன்பாக தனது சிறுநீரகத்தை அகற்றியதாக அம்மார் கூறுகிறார்.

பணத்திற்காக உடல் உறுப்புகளை விற்பது ஆப்கானிஸ்தானில் கேள்விப்படாத விஷயமில்லை. தாலிபன்கள் ஆப்கனை கையகப்படுத்துவதற்கு முன்பே இது நடந்தது. ஆனால், இப்போது இவ்வளவு வேதனைக்குரிய முடிவை எடுத்த பிறகும்கூட, இன்னும் உயிர் வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க மக்கள் போராடுகின்றனர்.

ஒரு வெறுமையான, குளிர்ந்த வீட்டில் நாங்கள் ஓர் இளம் தாயைச் சந்தித்தோம். அவர் ஏழு மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை விற்றதாகக் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் உயிரிழந்ததால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதனால் அவர்கள் ஆட்டு மந்தையை வாங்குவதற்காகக் கடன் வாங்கிய பணத்தையும் சிறுநீரகம் விற்ற பணத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.

சிறுநீரகத்திற்காக அவர் பெற்ற 240,000 ஆப்கனிஸ் அவருக்குப் போதாது.

“இப்போது நாங்கள் எங்கள் இரண்டு வயது மகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் மகளை அவர்களிடம் கொடுக்குமறு கேட்டு தினமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள்.”

“எங்கள் நிலைமையை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் இப்படி வாழ்வதைவிட இறப்பதே மேல் எனத் தோன்றுகிறது,” என்று அவரது கணவர் கூறினார்.

மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்பதை மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டோம்.

“நான் என்னுடைய ஐந்து வயது மகளை 100,000 ஆப்கனிஸ்க்கு விற்றேன்,” என்று நிஜாமுதீன் கூறினார். நாங்கள் அங்கு களத்தில் பார்த்ததை வைத்துப் பார்த்தால், சிறுநீரகத்தை விற்றால் கிடைக்கக்கூடிய தொகையில் பாதிகூட பெண் குழந்தையை விற்பதற்கு இல்லை. அவர் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது. அழாமல் இருப்பதற்காக உதட்டைக் கடித்துக் கொண்டார்.

அங்குள்ள மக்களின் கண்ணியமான வாழ்க்கையைப் பசி உடைத்துவிட்டது.

“இது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்கள் குழந்தைகளை அபாயத்தில் தள்ளுகிறோம். ஆனால் வேறு வழியில்லை,” என்று சமூகத் தலைவர்களில் ஒருவரான அப்துல் கஃபார் கூறினார்.

ஒரு வீட்டில் நாங்கள் நான்கு வயது நாஜியாவை சந்தித்தோம். அவர் தனது ஒன்றரை வயது சகோதரன் ஷம்ஷுல்லாவோடு விளையாடிக் கொண்டிருந்த ஒரு மகிழ்ச்சியான சிறுமி.

“உணவு வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஆகையால் எனது மகளை விற்க விரும்புகிறேன் என்று உள்ளூர் மசூதியில் அறிவித்தேன்,” என்று அவருடைய தந்தை ஹஸ்ரத்துல்லா கூறினார்.

தெற்கு மாகாணமான காந்தஹாரில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பையனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக நாஜியா விற்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வயதானதும் அனுப்பப்படுவார். இதுவரை ஹஸ்ரத்துல்லா தன் மகளுக்காக இரண்டு தவணை பணம் பெற்றுள்ளார்.

நாஜியா தனது குடும்பத்தோடு தான் இப்போது வசித்து வருகிறார். ஆனால், அவருக்கு 14 வயது ஆனதும் திருமணம் செய்துகொள்வதற்காக விற்கப்பட்டுள்ளார்.

அதில் பெரும்பகுதியை நான் சாப்பாடு வாங்கவும் சிலவற்றை என் இளைய மகனுக்கு மருந்து வாங்கவும் பயன்படுத்தினேன். இவனைப் பாருங்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருக்கிறான்,” என்று ஹஸ்ரத்துல்லா, ஷம்ஷுல்லாவின் சட்டையை மேலே இழுத்து, வீங்கிய வயிற்றை எங்களுக்குக் காட்டினார்.

ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பசி ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்குச் சான்றாக, ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பது விளங்குகிறது.

மெடிசின் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (MSF) நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கும் இடங்களில், சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டில் 47% அதிகரித்துள்ளது.

ஹெராட்டில் உள்ள எம்எஸ்எஃபின் உணவளிக்கும் மையம், ஹெராட்டுக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதம் கடந்த ஆண்டைவிட 55% அதிகரித்திருக்கும் அண்டை மாகாணங்களான கோர், பட்கிஸ் ஆகிய பகுதிகளுக்கும் உணவளிக்கிறது.

கடந்த ஆண்டு முதல், அவர்கள் அனுமதிக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர். இருப்பினும், இட வசதி எப்போதுமே நிரம்பி வழியும். அங்கு வரும் குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது.

ஓமிட், ஊட்டச்சத்துக் குறைபாடு, குடல் இறக்கம், செப்சிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு வயது 2 மாதத்தில் அவர் வெறும் 4 கிலோ எடையுடன் இருக்கிறார். அந்த வயதில் சராசரியாக ஒரு குழந்தை குறைந்தபட்சம் 6.6 கிலோ எடை இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள். அவர் அதிகமாக வாந்தியெடுக்கத் தொடங்கியபோது, அவருடைய தாய் ஆம்னா மருத்துவமனைக்குச் செல்ல பணம் கடன் வாங்க வேண்டியிருந்தது.

பிறந்து 14 மாதங்களான ஓமிட், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நிகரான எடையோடு தான் இருக்கிறார்.

ஹெராட்டில் உள்ள தாலிபன் மாகாண அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா மோடவாக்கிலிடம், "பட்டினி சிக்கலை சமாளிக்க என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டோம்.

“ஆப்கானிஸ்தான் மீதான சர்வதேச தடைகள், ஆப்கானிஸ்தான் நாட்டின் சொத்துகள் முடக்கப்பட்டதன் விளைவாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கள் அரசாங்கம் எவ்வளவு பேருக்குத் தேவைகள் இருக்கின்றன என்பதை அடையாளம் காண முயல்கிறது. உதவி பெறலாம் என்று நினைப்பில் பலரும் அவர்களுடைய நிலைமைகளைப் பற்றிப் பொய் சொல்கிறார்கள்,” என்று அவர் கூறினார். நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கான மிகப்பெரும் சான்றுகளை நாங்கள் பார்த்துள்ளோம் எனக் கூறியபோதிலும் அவர் இந்த நிலைப்பாட்டையே தொடர்ந்தார்.

தாலிபன்கள் வேலைவாய்ப்பை உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறினார். “நாங்கள் இரும்புத் தாது சுரங்கங்கள், எரிவாயு குழாய்த் திட்டத்தைத் தொடங்க முயல்கிறோம்,” என்றார்.

அது விரைவில் நடக்க வாய்ப்பில்லை.

தாலிபன் அரசாங்கத்தாலும் சர்வதேச சமூகத்தாலும் தாங்கள் கைவிடப்பட்டதாக மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

பட்டினி ஓர் அமைதியான கொலையாளி. அதன் விளைவுகள் எப்போதும் உடனடியாகத் தெரிவதில்லை.

உலகின் கவனத்திலிருந்து விலகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உண்மையான அளவு வெளிச்சத்திற்கு வராமலே கூடப் போகலாம். ஏனென்றால், யாரும் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
source;bbctamil


 


Post a Comment

Previous Post Next Post