நல்லெண்ணத்தில் அனுப்பப்படும் பணம் சோம்பேறிகளையும், போதைப் பிரியர்களையும் உருவாக்குகின்றதா?

நல்லெண்ணத்தில் அனுப்பப்படும் பணம் சோம்பேறிகளையும், போதைப் பிரியர்களையும் உருவாக்குகின்றதா?


புலம்பெயர்ந்து வாழ்வோர் நல்லெண்ணத்தினால் தமது ஊருக்கும், உறவினர், நண்பர்களுக்கும்  அனுப்பும் பணமே, சோம்பேறிகளையும், போதைப் பிரியர்களையும், தீவிரப் போக்குடையவர்களையும் உருவாக்கிவிடுவதாக, சமூக நலனை மையமாகக் கொண்டு சிந்திப்போர் மத்தியில் இப்போது சந்தேகம்   எழுந்துள்ளது!

இன்றைய இளைஞர்களுட் பெரும்பாலானோரின் நடவடிக்கைகளைக் காண்கின்றபோதும், கேள்விப்படுகின்றபோதும் இது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைச் சவாலுக்கு உட்படுத்திவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது!

அண்மைக்காலங்களில் மாணவர்கள் போதையுடன் சென்று ஆசிரியர், அதிபர் மற்றும் பிரதான அதிதிகளைத் தாக்கும் நிகழ்வுகளும், சின்னஞ் சிறுசுகளைத் துஷ்பிர யோகத்திற்குட்படுத்தி  உயிர்களைக் காவு கொள்ளும் சம்பவங்களும், பட்டப்பகலில் பாதையில் செல்லும்  பெண்களின் அணிகலன்களை  அறுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடந்தேறி வருவதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன!

கொவிட் 19க்குப் பின்னர் அதிகமான ஊர்களிலுள்ள வீடுகளில் எவருமே தொழில் செய்யாது, புலம் பெயர்ந்தோர்  அனுப்புகின்ற  பணத்தில்  வாழ்க்கையை நகர்த்தப் பழக்கப்பட்டு விட்டனர்!

அவ்வாறான வீடுகளிலுள்ள இளைஞர்களிடத்தில் முன்னெப்போதையும் விட  பணப்புழக்கம் அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக  உள்ளது!

இளைஞர்கள் ஆடம்பரக் கைத்தொலைபேசிகளை வங்கிக் கொண்டு, நண்பர்களோடு சேர்ந்து தகாதவற்றைப் பார்ப்பதும், ஆடம்பர வாகனங்களை  வங்கிக் கொண்டு  தகாத இடங்களுக்குச் செல்வதோடு, வீட்டாருக்கு  அடங்காத நிலையில் வாழ்வதும்,  இரகசியாமாகப் போதைப் பொருள் பாவனையில்  ஈடுபட்டு வருவதுமாக இருக்கின்றனர்.

இவ்வாறான சமூக சீரழிவிற்கு ஒருவகையில் முக்கிய முதற்காரணமாவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நல்லெண்ணம் கொண்டவர்களே!

இவ்வாறு பணம் அனுப்புகின்ற  நல்லவர்கள், தாம் அனுப்புகின்ற பணம் சரியான இடத்திற்போய்ச் சேர்கின்றதா, அது உரிய தேவைகளுக்குப் பயன்  படுத்தப்படுகின்றதா என்பதை இனங்கண்டு கொள்ள வேண்டும்.

தாம் நல்லெண்ணத்துடன்  அனுப்புகின்ற பணம், எதிர்காலத்தில் சோம்பேறிகளையும், நிகழ்காலத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களையும் உருவாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதில் புலம்பெயர்ந்து வாழ்வோரின் பங்கு அதிகமாகவே உள்ளது!

செம்மைத்துளியான்


 


Post a Comment

Previous Post Next Post