Ticker

6/recent/ticker-posts

குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றம்

எனது வயது 23. நான் குருநாகலையில் ஒரு பாடசாலையில் கடமை புரிகிறேன். எனது பிரச்சினை என்னவென்றால் நான் பதுளையில் இருந்து தொழிலுக்காக குருநாகலைக்கு சென்று ஒரு கிழமையில் எனது தொண்டை குரல் கரகரப்பாகி பேச்சு குரல் மாறி விடும். ஆனால் பதுளைக்கு வந்த விட்டால் குரல் சரியாகி விடும். பல வைத்தியர்களிடம் வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. சூழல் மாற்றமா அல்லது நீரின் தன்மையா அல்லது உஷ்ணமான கால நிலையா தயவு செய்து பரிகாரம் கூறவும்.
பாத்திமா நளீரா, பதுளை
பதில்;நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. அதில் முதலாவது உணவும் உணவுடன் சம் பந்தப்பட்ட விடயங்களும் ஆகும். இரண்டாவது காரணியாக சூழலும் சூழலுடன் சம்பந்தப்பட்ட விடயங் களும் ஆகும்.

இதேபோன்று மனிதனது உடம்பின் சுபாவமும் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமானதாகும். ஒவ்வொரு மனிதனும் உடற் கட்டமைப்பு தொழிற்பாடு மனநிலை நடத்தை போன்ற பல விடயங்களைக் கருத்திற்கொண்டு மனிதர்கள் நான்கு வகையான சுபாவ முடையவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவையாவன குருதி சுபாவமுடைய உடம்பு. கபச்சுபாவமுடைய உடம்பு. பித்த சுபாவமுடைய உடம்பு. கரும்பித்த சுபாவமுடைய உடம்பு ஆகியனவாகும். 

எனவே ஒருவரது சுபாவத்திற்கு ஏற்ப அவரின் செயல்கள் விருப்பு, வெறுப்புக்கள், நடத்தை குறிப்பிட்ட உணவுகளின் மீது விருப்பம் வாழ்வதற்கான உகந்த பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தல் போன்றவை தங்கியுள்ளன.

உதாரணமாக பித்த சுபாவத்தை உடையவர்கள் அதிக சுறுசுறுப்பாக இருப்பதோடு மெலிந்தவர்களாகவும் திடீரெனக் கோபம் ஏற்படுதல் பொறுமையின்மை போன்றவைகள் காணப்படுவதோடு இறைச்சி பொரித்த உணவு வகைகள் வினாகிரி உப்பு மற்றும் புளிப்புத் தன்மையுடைய உணவுகள் போன்றவற்றிக்கு அதிகம் விருப்பமுடையவர்களாகவும் இருப்பார்கள். 

அத்துடன் குளிர்த்தன்மையுடைய பிரதேசங்களே பித்த சுபாவம் உடையவர்களுக்கு வாழ்வதற்கு சாதகமான இடமாக இருக்கும். அத்துடன் இவர்கள் உலர் வலயங்களுக்குச் சென்றால் உடல் நலத்திற்கும் சில பாதிப்புக்கள் ஏற்படலாம். 

இதே போன்று கபச்சுபாவமுடையவர்கள் குளிர்த்தன்மையான உணவுகள் பால்வகைகள் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்ற உணவு வகையினை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இவர்கள் ஓரளவு உடற் பருமனுடையவர்களாகவும் சுறுசுறுப்பற்றவர்களாகவும் பொறுமையுடையவர்களாகவும் இருப்பார்கள். 

உலர் வலயங்களில் விரும்பி வாழ்வதோடு குளிர்ப்பிரதேசங்களுக்குச் சென்றால் சளி சம்பந்தமான நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. 

இதே போன்று தான் இவ்வாறு வித்தியாசமான சுபாவங்களையுடையவர்கள் காலநிலை வித்தியாசத்தினாலும் சில நோய்களுக்குள்ளாக்கப்படலாம். 

ஒரு சிலர் குளிர்காலத்தில் எவ்விதமான நோயுமின்றி சுகதேகியாக இருப்பதோடு கோடை காலம் வந்தால் பல நோய்களுக்குள்ளாகுவார்கள். அதேபோன்று வேறு சிலர் கோடை காலங்களில் சுகதேகிகளாகவும் குளிர் காலங்களில் நோயினால் பீடிக்கப்படு பவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே ஒருவரது சுபாவத்திற்கு ஏற்பகாலநிலை அல்லது சூழல் மாற்றத்தினாலும் அல்லது உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களின் தன்மையைப் பொறுத்தும் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இங்கு கேள்வி கேட்டிருப்பவரது உடம்பு பித்த சுபாவம் உடையது என நினைக்கின்றேன். எனவே தான் உலர் வலய சூழல் காரணமாகவும் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ளது போன்று அங்கு காணப்படும் நீரின் தன்மை காரணமாகவும் தொண்டையில் அரிப்பு ஏற்பட்டு குரல் மாற்றம் ஏற்படுகிறது என நினைக்கின்றேன். அத்துடன் இக்கேள்வியில் குறிப்பிட்டுள்ள குறிகுணங்களுக்கு மேலாக அதிக வியர்வை, தூக்கமின்மை, உடம்பில் ஊசியினால் குத்துவது போன்ற உணர்வு, சிலவேளை நெஞ்சு படப் டப்பு போன்ற குறிகுணங்களும் இருக்கலாம் என நினைக்கின்றேன். இந் நிலை தொடர்ந்து இருந்தால் மற்றும் பல சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே மேற்குறிப்பிட்டது போன்ற குறிகுணங்களுடைய பித்த சுபாவங்களையுடையவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உப்பு மற்றும் கொழுப்புக் கூடிய உணவு வகைகள் பொரித்த உணவுகள் வினா கிரி மற்றும் புளிப்புத் தன்மை கூடிய உணவு வகைகள் மிளகாய்த்தூள் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைத் தவிர்த்து பழ வகைகள் மரக்கறி வகைகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதோடு போத்தலில் அடைக்கப்பட்ட நீரைப் பாவித்து குணம் கிடைக்கின்றதா எனப் பார்க்கலாம் அத்துடன் நீங்கள் ஆசிரியர் தொழில் செய்வதால் Over use of voice ஐயும் முடியுமானளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். யுனானி வைத்திய முறையில் கால நிலை மாற்றத்தினால் ஏற்படுகிற நோய்களுக்கான சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனாலும் நீங்கள் அனுப்பியுள்ள தகவல்களைக் கொண்டு சரியான நோய் நிர்ணயத்திற்கு வர முடியாது. 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியை காலநிலை மற்றும் சில உணவு வகைகள் ஒவ்வாமையின் காரணமாக சுவாச நோய்கள், தோல் நோய்கள் போன்றவை சிகிச்சைக்குக் கூட கட்டுப்படாமல் தொடர்ந்தும் இருக்கலாம். எனவே இது போன்ற நோய்களுக்கு மாத்திரைகளை உட்கொள்ளாமல் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அவைகளிலிருந்து தவிர்ப்பதன் மூலம் நிரந்தர நிவாரணத்தைப் பெறலாம் என நினைக்கின்றேன்.



 


Post a Comment

0 Comments