
தெரிந்து செயல்வகை--47
செய்வதை சிந்தித்து செய்
நன்மை தீமையை எடைபோட்டே
செயலைச் செய்தல் முறையாகும்!
செய்வதைத் திருந்தச் செய்பவரின்
துணையோ இங்கே இருந்துவிட்டால்
முடியாச் செயலென ஒன்றில்லை!
மலைபோல் லாபம் வருமென்றே
முதலை இழக்கும் செயல்தன்னை
அறிவுடை யோர்கள் செய்யமாட்டார்!
களங்கம் தன்னை ஏற்படுத்தும்
செயலில் எவரும் இறங்கமாட்டார்!
பகைவர் நிலையை கணிக்காமல்
செய்யும் செயல்கள் பகைவருக்கே
சாதக மாக மாறிவிடும்!
தவிர்க்கும் செயலைச் செய்வதாலும்
செய்யும் செயலைத் தவிர்ப்பதாலும்
கேடுகள் தோன்றி துன்புறுத்தும்!
சிந்தித்துச் செய்தல் அறிவுடைமை!
செய்தபின் சிந்தித்தல் அறிவின்மை!
செய்யும் முறையை அறியாமல்
செயலைச் செய்தால் எத்தனைபேர்
துணயாய் இருந்தும் வீணாகும்!
பண்பை அறிந்து நல்லதைச்செய்!
அறியாமல் செய்தால் நம்மையே
திருப்பித் தாக்கும் கணையாகும்!
தகுதிக்கு மீறிய செயல்களையோ
செய்தல் இகழ்ச்சிக் காளாக்கும்!
இகழா வண்ணம் உகந்ததையே
செய்யும் பண்பே உயர்வாகும்!
வலியறிதல்---48
வலிமையைத் தெரிந்து செயலில் இறங்கு
செயலின்வலிமை, தன்வலிமை
பகைவர், துணைக்கரம்வலிமைகளை
அறிந்தேசெயல்படு! நன்றாகும்!
முடியக் கூடிய செயலெடுத்தால்
முடியாத செயலென் றெதுவுமில்லை!
தனதுவலி மையை அறியாமல்
செயலில் இறங்கித் தத்தளித்துப்
பாதியில் தோற்றோர் பலருள்ளார்!
ஆற்றல் உள்ள மாந்தருடன்
ஒத்துப் போகு ம்மனமின்றி
தன்னைப் பெரிதாய் நினைப்பவனோ
விரைவில் அழிவான் தன்னாலே!
மயிலின் இறகே ஆனாலும்
அளவுக் கதிதமாய் வண்டியிலே
ஏற்றினால் முறியும் அச்சாணி!
தன்னை உயர்வாய் நினைப்பவர்கள்
கொம்பின் நுனிக்குச் சென்றபின்பும்
மேலே ஏறி விழுகின்ற
நிலையைக் காண்பார் வாழ்வினிலே!
வரவுக் குள்ளே உதவுதலே
பொருளைக் காக்கும் முறையாகும்!
வரவின் வழியோ சிறிதெனினும்
செலவின் வழியோ பெரிதாக
இல்லா விட்டால் தீங்கில்லை!
பொருளின் அளவை அறியாமல்
வாரி வழங்கும் நிலையெடுத்தால்
விரைவில் வாழ்க்கை அழிந்துவிடும்!
காலம்அறிதல் --49
காலமறிந்து செயலாற்று வெற்றி உறுதி
பகற்பொழுதில் கோட்டானை வென்றுவிடும் காகம்!
பகைப்புலத்தை வெல்வதற்குப் பார்க்கவேண்டும் நேரம்!
காலத்திற் கேற்றபடி செயல்புரியும் ஆற்றல்
செல்வத்தை நிலையாகக் கட்டுகின்ற கயிறாம்!
செயல்முடிக்கத் தந்திரமும் ஆற்றலுடன் நேரம்
ஒருங்கிணைந்தால் முடியாத செயலிங்கே உண்டோ?
இடம்பொருள் ஏவலையே அறிந்துசெயல் முடித்தால்
உலகத்தை எளிதாக வசமாக்கமுடியும்!
ஊக்கத்தைக் கொண்டவர்கள் காத்திருக்கும் கோலம்
பாய்வதற்குப் பின்வாங்கும் கிடாநிலைஆகும்!
பகைவரிங்கே சீறிவந்தால் பதறாமல் நின்றே
இடங்காலம் பார்த்தேதான் தாக்குவார்கள் வென்று!
காலநேரம் பார்த்தேதான் காத்திருக்கும் கொக்கு!
இரையங்கே துள்ளிவரும் பிடித்துவிடும் கவ்வி!
நம்முடைய செயல்களையும் இப்படித்தான் நாமும்
காத்திருந்து உரியநேரம் செய்யவேண்டும் இங்கு.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments