Ticker

6/recent/ticker-posts

உடற் பருமனை அதிகரிக்க என்ன வழி?


எனது வயது 24. உடல் நிறை 39 kg ஆகவுள்ளது. எனது உடல் நிறையைக் கூட்டுவதற்கு தகுந்த ஆலோசனைகளையும் மருந்துகளையும் அறியத்தரவும்.
ரிஸ்மியா, கண்டி 
 

பொதுவாக அதிக உடற்பருமன் என்ற நிலையினால் பாதிக்கப்பட்டவர்களே உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். இதற்கு மாறாக மெல்லிய உடம்பைக் கொண்டவர்கள் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாவிட்டாலும் உளரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒருவர் இயற்கையாகவே மெல்லிய உடம்பைக் கொண்டவராக இருக்கலாம். இவர்கள் மருத்துவப் பிரச்சினைகள் ஏதும் இன்றி மெல்லிய உடம்பைக் கொண்டவராக இருந்தால் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்குள்ளாக வேண்டிய அவசியம் இல்லை.

மெல்லிய உடற்கட்டமைப்பு ஆண்களை விடவும் பெண்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனாலும் இருபாலாருமே தனது உடம்பு மெல்லியதாக இருக்கின்றதே என தினமும் நினைத்து மன உளைச்சலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அதிக உடற்பருமன் உடையவர்களுக்கு அதிக குருதி அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக இவர்கள் சமூக, பொருளாதார, குடும்பப் பிரச்சினை களுக்குக் கூட முகம் கொடுக்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சில நோய் நிலைகளிலும் தேக ஆரோக்கியத்திற்குத் தீங்கு ஏற்படும் வகையில் உடல் நிறை குறையலாம். மன உளைச்சலினால் பாதிப்புக் குள்ளானவர்கள் தைரோயிட் சுரப்பியின் தொழிற்பாடு கூடியுள்ள நிலை, ஒரு சில சமிபாட்டுத் தொகுதி நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய், நாட்பட்ட தொற்று நோயுடையவர்கள் போன்ற நிலைகளில் உடல் நிறை குறையலாம். இதன் விளைவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பல தொற்று நோய்கள் ஏற்படுவதோடு எலும்புத் தொகுதியும் நரம்புத் தொகுதியும் பலவீனமடையலாம்.

ஒருவரது உடம்பின் நிறை அண்மைக் காலத்திலிருந்து குறைய ஆரம்பிக்குமானால் தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து மேற்குறிப்பிட்ட நோய்கள் இருக்கின்றதா என ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.

மெல்லிய உடலுடையவர்கள் தனது உடம்பின் நிறையைக் கூட்டவேண்டுமானால் முதலில் இயற்கை உணவு வகைகளையே பாவிக்க வேண்டும். உடற்பருமன் ஓரளவு கூடும் வரைக்கும் அன்றாட உணவுத் தேவையை விடவும் கூடுதலாக உணவு உட்கொள்ள வேண்டும். முக்கியமாக அதிக புரோட்டீன் அடங்கிய உணவு வகைகளான மாமிச வகைகள் , மீன், முட்டை , தானிய வகைகள் போன்றவைகளையும் அதிகமாப்பொருள் அடங்கிய உணவுகளையும் கொழுப்புத் தன்மையுடைய உணவு வகைகளையும் உட்கொள்வது முக்கியம். வாசனைத் திரவியங்கள் கொண்டு உணவு வகைகளைச் சுவையூட்டுவதன் மூலம் அதிகளவு உணவை உட்கொள்ள முடியும்.

மேலும் பேரீச்சம்பழம், அத்தி, பாதாம், நிலக்கடலை, பால், யோகட், வற்றாளை, ஓட்ஸ், பழவகைகள் போன்றவைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். தேவையேற்படின் மூன்று பிரதான உணவுகளுக்கு மேலதிகமாகவும் சாப்பிடலாம்.

அத்துடன் சாப்பாட்டுக்கு முன் அல்லது சாப்பிடும் போதோ நீர் உட்கொள்வ.தையும் தவிர்க்க வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களின் அளவைப் போன்றே அதில் அடங்கியிருக்கும் போசாக்கின் அளவும் முக்கியமாகும். 

எனவே மேற்குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு மேலாக புரதம் இரும்புச் சத்து அடங்கிய விட்டமின்களையும் பாவிக்கலாம். அத்துடன் குடற்புண்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி ஏற்பட்டாலும் கூட அவர்களுக்கு வயிற்று நோவு காரணமாக சாப்பிட முடியாமல் இருக்கும். எனவே இவர்கள் குடற்புண்களுக்கான சிகிச்சையைப் பெற்று குணமடைந்த பின்பு உணவைக் கூடுதலாக உட்கொள்ள வேண்டும். அனேகமான நிபுணர்களின் கருத்துப்படி காலை உணவையே அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

ஒரு சிலரது உடம்பு இயற்கையிலேயே பித்தத்தன்மை கொண்டதாக இருப்பதோடு இவர்களின் உடம்பு எந்நேரமும் சூடாகவே இருக்கும். இந்நிலை இருப்பவர்கள் சில உணவு வகைகளைத் தவிர்ப் பதன் மூலமும் மற்றும் சில உணவு வகைகளைக் கூடுதலாக உட்கொள்வதன் மூலமும் சூட்டுத் தன்மையைக் குறைக்கலாம்.

நவீன வைத்தியத் துறையில் உடம்பின் நிறையைக் கூட்டுவதற்காக சில மாத்திரைகளும் ஊசி மருந்துகளும் உள்ளன. ஆனால் இம்மருந்துகள் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதன் காரணமாக அநேகமான வைத்தியர்கள் இம்மருந்துகளைச் சிபாரிசு செய்யாத போதிலும் கூட சில மனித நேயமற்ற, பணம் சம்பாதிப்பதையே இலக்காகக் கொண்டுள்ள சில வைத்தியர்கள் இவ்வகையான மாத்திரைகளைக் கொடுத்து உடற்பருமனைக் கூட்டுகிறார்கள். தனது உடற்பருமனை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற பேராசையில் இருப்பவர்கள் இவ்வாறான சிகிச்சைக்குச் சென்று பலவகையான நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

யுனானி வைத்தியத் துறையில் இயற்கையான பக்கவிளைவுகளற்ற பல மருந்துவகைகள் உடற்பருமனைக் கூட்டுவதற்கும் அதேபோல் அதிக உடற்பருமன் உடையவர்களது உடற் பருமனைக் குறைப்பதற்கும் இருக்கின்றன. நான் மேற்குறிப்பிட்டது போல் நோய்கள் எதுவுமின்றி இயற்கையிலேயே சூடான உடம்புச் சுபாவமுடையவர்கள் உணவைக் கொண்டும் யுனானி மருந்து களைக் கொண்டும் உடம்பின் சூட்டுத் தன்மையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடம்பின் நிறையைக் கூட்டலாம், சில ஆராய்ச்சிகளின்படி சிறிய பீங்கானுக்குப் பதிலாக பெரிய பீங்கான்களைப் பாவித்து உணவு உட்கொள்வதன் மூலம் கூடுதலாகச் சாப்பிடக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உணவு அதிகமாக உட்கொள்ளும் போது சில வேளைகளில் உடம்பில் கொழுப்புச் சத்து கூடலாம் என்ற காரணத்தினால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது செயற்கை மருந்து வகைகளைப் பாவித்து உங்கள் உடற்பருமனைக் கூட்ட முயற்சிக்காமல் இயற்கை உணவு வகைகளையும் இயற்கை மருந்து வகைகளையும் பாவித்து உடற்பருமனைக் கூட்ட முயற்சிக்கும் படி வேண்டுகிறேன்.

DR.NASEEM


 



Post a Comment

0 Comments