Ticker

6/recent/ticker-posts

கருத்து வேற்றுமைகள் கலையப்பட வேண்டும்!-AI கயல்விழி-video


முன்னோர்களின் வரலாறுகளை ஆழ்ந்து கவனித்தால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர்களது உயர்ந்த எண்ணங்களே!

 
ஓர் உன்னதமான இலட்சியத்தைச் சாதிப்பதற்காகவே இறைவன் தம்மை  உலகிற்கு அனுப்பியதாக அவர்கள் உணர்ந்தார்கள்.  அந்த நம்பிக்கையே அவர்களைப் பெரும் நற்செயல்களை ஆற்றுமாறு ஊக்குவித்துள்ளது!

மனிதப்பிறப்பு  வீணுக்கல்ல என்பதை உணர்ந்த அவர்கள், அதே உணர்வில் தங்களுக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் வாழ்ந்து மறைந்தார்கள்.

மனிதர்கள் அனைவரும் இறைவன் முன் சமமானவர்கள்.  அவன் உலக மாந்தர் அனைவரையும் அவர்கள் நல்லவர்களாயினும், பொல்லாதவர்களாயினும் சமமாகவே நோக்குகின்றான் என்பதை மனிதர்கள் முதற்கண் புரிந்துகொள்ள வேண்டும்!

மனிதர்கள் தம் உரிமைகள் கடமைகள், சுதந்திரம், தொழில் நடவடிக்கைகள், சமூக பொருளாதார செயற்பாடுகள், சமூக உறவுகள், கருத்துக்கூறும் உரிமைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானவையாக இருந்தாலேயே  உலகில் சாந்தியும் சமாதானமும் நிலைத்து நிற்கும். 
இன்று மக்கள் அனைவரும் அனுபவிக்கும் உரிமைகள், ஆராயும் திறன், எதிர்த்து வாதிடும் சலுகைகள் எல்லாம் வழி வழியாக வரலாற்றிலிருந்து வந்ததேயாம்.

மனிதர்கள்  உயர்வடைவதும், இழிவடைவதும் அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் பொறுத்தேயன்றி வேறில்லை.  எனவே உலகில் பிறந்த  ஒவ்வொருவரும் நற்சாதனைகள் புரிவதற்காக  உலகிற்கு அனுப்பப் பெற்றுள்ளனர் என்பதையும், எம்மைதப்படைத்த இறைவன் ஒருபோதும் எம்மைக் கைவிடமாட்டான் என்பதையும் மனிதன்  திடமாக  நம்பவேண்டும்.

மனிதர்கள் இவ்வுலகில் பிறந்தது உண்டு, உடுத்து, உறங்கி மடிவதற்கல்லவே! அல்லது தம் மனைவி மக்களுக்கு உணவூட்டி வாழ வைத்துவிட்டு மறைந்து விடுவதற்கல்லவே!

அவ்விதமாயின் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு இல்லாமற்போய்விடும்! 

பிராணிகளும்  இரை தேடுகின்றன,  குட்டிகள் போடுகின்றன. பின்னர் செத்து மடிகின்றன.

உலகில் பிறந்த மனிதன், தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர், இனிவரும் சந்ததியினர் தம் பெயர் கூற நற்செயல்கள் எதனையாவது மனித இனத்திற்கு விட்டுச் செல்ல வேண்டும்!

தன்னுடைய பிறப்பு கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஏற்பட வேண்டும்!

நடைமுறையில் மனிதர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவது, சமுதாயத்தில் பின் தங்கியவர்கள்  என்பதற்காக அவர்களைப் புறக்கணிப்பது என்பன நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.

கருத்து வேற்றுமை பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்கள் சமுதாயத்திலிருந்து முற்றாகக் கலையப்பட  முடியாவிடினும், அவற்றின் இடைவெளியைக் குறைக்கவாவது ஒவ்வொருவரும்  விட்டுக் கொடுப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்!

இன்றைய மனிதர்கள் உலகெங்கும் இனங்களால், மதங்களால், பிரதேசங்களால் பிரிவுண்டு வாழ்கின்றனர். உலகில் ஆயிரக்கணக்கான மதங்களினதும், இனங்களினதும் போதனைகள் இறுதியில் ஒரே நிலைப்பாட்டை நோக்கிச் செல்வதைத்தான் காணமுடிகின்றது.

மனிதர்களுக்கு மனிதர்கள் நன்மைகளைச் செய்துகொள்ள வேண்டுமே தவிர,  தீமைகள் செய்வதை ஒருபோதும் எந்த மதமும், எந்த சித்தாந்தமும் அனுமதிப்பதில்லை. ஒருவருக்கொருவர் பகைமைகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதனையே அவை காலாகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

காலத்துக்குக் காலம் ஏற்படும் தேவைகள், மாற்றங்கள் தொடர்பாக அடிப்படைக்கு முரணின்றி, நெகிழ்ந்து செல்லும் போக்கைக் கடைபிடிப்பதன் மூலம் உலகில்  சமூகங்களுக்கிடையே சமாதானத்தை  ஏற்படுத்தலாம் என்பதற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

ஐ. ஏ. ஸத்தார்


 



Post a Comment

0 Comments