சூரியனின் மையப்பகுதி எவ்வளவு சூடாக இருக்கும்? எவ்வளவு தூரம் வரை நெருங்க முடியும்?

சூரியனின் மையப்பகுதி எவ்வளவு சூடாக இருக்கும்? எவ்வளவு தூரம் வரை நெருங்க முடியும்?


செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்ச்சி செய்யும் தனது முதல் விண்வெளித் திட்டமான ஆதித்யா-எல்1 திட்டத்தை விண்ணில் செலுத்தவிருகிறது.

 
இது, சூரியனின் வெளிமட்டப் பகுதியான ‘சோலார் கொரோனா’ எனப்படும் சூரியனைச் சுற்றியுள்ள மண்டலத்தில் நிகழும் இயற்பியல் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும்.

இந்த விண்கலம ஏழு கருவிகளைச் சுமந்து செல்லும். அவை சூரியனின் சுற்றுப்புறத்தில் இருக்கும் மின்காந்த மற்றும் அணுத்துகள் புலங்களை ஆய்வு செய்யும்.

இந்நிலையில் சூரியனைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

சூரியனைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சூரியனின் வயது என்ன? சூரியன் எவ்வளவு பெரியது?
சூரியனின் வயது என்ன?

சூரியன் அடிப்படையில் ஒரு நட்சத்திரம். நமது சூரிய குடும்பத்தின் மத்தியில் இருக்கும் இந்த நட்சத்திரத்திற்கு சுமார் 450 கோடி ஆண்டுகள் வயதாகிறது.

சூரியன் எவ்வளவு பெரியது?

சூரியனின் சராசரி விட்டம் சுமார் 14 லட்சம் கிலோமீட்டர். இது பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு பெரியது. சூரியனின் முழு கொள்ளளவை நிரப்புவதற்கு 13 லட்சம் பூமிகள் பிடிக்கும்.

சூரியன் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?

சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சூரியனின் மையப்பகுதி எவ்வளவு வெப்பமானது?
சூரியன் எவ்வளவு வெப்பமானது?

சூரியனின் மேற்பரப்பு 10,000 டிகிரி ஃபாரன்ஹைட் அளவுக்கு வெப்பமானது.

ஆனால் சூரியனின் மிகவும் வெப்பமான பகுதி அதன் மையக்கரு தான். அது 2.7 கோடி சிகிரிக்கும் மேல் வெப்பம் கொண்டது. இந்த வெப்பம் நியூக்ளியர் ஃப்யூஷன் எனப்படும் அணுக்கரு இணைவு செயல்பாடு நடக்க ஏதுவான சூழ்நிலையை சூரியனில் ஏற்படுத்தியுள்ளது.

சூரியன் எதனால் ஆனது?

சூரியன் முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.

சூரியனின் சுழற்சி எத்தகையது?

சூரியனின் சுழற்சியைக் கணக்கிடுவது பூமியின் சுழற்சியைப் போல எளிதான காரியமல்ல. காரணம் சூரியன் திடமான ஒரு பந்து போலச் சுழல்வதில்லை.

வாயுக்களால் ஆன இதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேகத்தில் சுழல்கின்றன. சூரியனின் மத்தியப் பகுதி 25 நாட்களில் ஒரு சுழற்சியை முடிக்கிறது. அதுவே சூரியனின் இரு துருவங்களும் ஒரு சுழற்சியை முடிக்க 36 நாட்கள் பிடிக்கும்.

இதுவரை சூரியனை ஆய்வு செய்யச் சென்ற விண்கலன்கள் என்னென்ன?
இதுவரை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழகம் ஆகிய நிறுவனங்கள் விண்ணில் செலுத்தியிருக்கும் விண்கலன்கள் ஏற்கெனவே சூரியனை ஆய்வு செய்து வருகின்றன.

நாசாவின் Parker Solar Probe, Solar Dynamics Observatory, மற்றும் STEREO போன்றவை சூரியனை ஆய்வு செய்து வருகின்றன.

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் Solar Orbiter, Solar and Heliospheric Observatory ஆகிய விண்கலன்கள் சூரியனை நெருக்கமாக ஆய்வு செய்து வருகின்றன.

இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் எது?

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசா விண்ணில் செலுத்திய ‘Parker Solar Probe’ என்ற விண்கலம்தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்றது. இது சூரியனை 62 லட்சம் கி.மீ தூரத்தில் இருந்து ஆய்வு செய்தது.

சூரியனின் அதீத வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த விண்கலம் 11.4 சென்டிமீட்டர் தடுப்புக் கவசத்தால் மூடப்பட்டிருந்தது. இது 2,500 டிகிரி ஃபாரன்ஹைட் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும்.

இந்தியா அனுப்பவிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் எல்1 என்ற புள்ளியில் இருந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

எல்1 புள்ளி என்றால் என்ன?

L என்பது ‘லக்ராஞ்ஜ்’ என்பதைக் குறிக்கும்.

இரண்டு கோள்களுக்கு இடையிலுள்ள ஈர்ப்பு விசை, அவற்றின் மைய விலக்கு விசைக்குச் சமமாக இருக்கும் புள்ளிகளே லக்ராஞ்ஜ் புள்ளிகள் எனப்படும்.

இந்தப் புள்ளிகளில் விண்கலங்கள் குறைந்த எரிவாயுவைச் செலவிட்டு, ஸ்திரமான நிலையில் இருக்க முடியும்.

எந்த இரண்டு கோள்களுக்கும் ஐந்து லக்ராஞ்ஜ் புள்ளிகள் இருக்கும். இதில் ஒரு புள்ளி அவ்விரண்டு கோள்களுக்கும் இடையில் இருக்கும்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் எல்1 என்ற புள்ளி சூரியனை ஆய்வு செய்வதற்கு எந்தத் தடைகளுமற்ற சிறந்த புள்ளியாகக் கருதப்படுகிறது.

இந்த எல்1 புள்ளி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கிறது. ஆனால், இந்த L1, L2 புள்ளிகளின் கச்சிதமான அமைவிடம் ஸ்திரமற்றவை.

அவை 23 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். இதனால் இந்த இடத்தில் இருந்து இயங்கும் விண்கலன்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

Source:bbctamil


 



Post a Comment

Previous Post Next Post