முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும். அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடர்ந்த தாபியீன்கள். நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். ஆகவே இதைப் படித்து ரமளான் மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும், பிழைப்பொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும், நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
அன்புடன்,
கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)

1. ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
1) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் து}தர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கவும்.
2. ரமளான் மாதத்தின் சிறப்புகள்
1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் "நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)
3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி(ஸல்)அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். "யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்" என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!
(தொடரும்)
கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)

0 Comments