Ticker

6/recent/ticker-posts

நுவரலியா பள்ளிவாசலில் வைத்து எட்டு இந்தோனேசியர்கள் கைது விவகாரம் நடந்தது என்ன ?


கடந்த 02 ஆம் திகதி பிற்பகல் நுவரலியா பள்ளிவாசல் ஒன்றில் தங்கி இருந்த எட்டு   இந்தோனேசியர்களை சந்தேகத்தின் பெயரில் நுவரலியா போலீசார் கைது செய்துள்ளனர்.

நுவரலியா போலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சென்று குறித்த பிரஜைகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களும் நுவரெலியா வருவதற்கு முன்னர்  ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் இவர்களுடன் 191 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் ஏனையவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் இந்த நாட்டில் உள்ள  இந்தோனேசிய தூதரக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்   சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதாவான் உத்தரவின்படி எதிர் வரும் 16 ஆம் திகதி வரை சிறைப்படுத்தப்பட்டதாகவும்,  மேலும் இவர்களுடன் இலங்கைக்கு வந்த ஏனைய 191 பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

உல்லாச பயண வீசாவில் இலங்கைக்கு வந்து மார்க்க விவகாரங்களில் ஈடுபட்ட பலர் இதற்கு முன்னர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த குண்டுவெடிப்பின் பின்னர், வெளிநாட்டவர்கள் இலங்கையில் வந்து மார்க்க விவகாரங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மீடியாக்களில் பல்வேறு விதமாக வெளிவந்துள்ள போதிலும், தப்லீக் இயக்கம்  என்பது ஒரு பரந்த வளையமைப்பில் இயங்கும் அமைப்பாகும்.

இவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு தஃவா பணிக்காக செல்லும்போது குறிப்பிட்ட நாட்டில் இருந்து அவர்கள் செல்லும் நாட்டில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில், நமது நாட்டில் இவ்வாறான பிரச்சனைகள் இருக்கும்போது, இவர்களை சுற்றுலா  வீஸாவில் நமது நாட்டிற்குள் தஃவா பணிக்காக அனுமதித்தவர் யார் ?

தவறு நம் பக்கம் இருக்கும் போது, சட்டத்தை மீறி பிழையை நாம் செய்து விட்டு, கைது ஒரு இனவாதச் செயல் என்றும், சிலர் காட்டிக் கொடுத்தார்கள் என சாடுவதும் தவறாகும்.

கடந்த அசம்பாவிதங்களின் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மீது ஏனைய சமூக மக்கள் மிக அவதானிப்பாக இருக்கும் நிலையில், நம்மை அவதானிக்கும் ஏனைய மதத்தவர்களில், சட்டம் தெரிந்தவர்களும், சிந்தனையுள்ளவர்களும் நாலுபேர் இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஒரு செயலை செய்வது முழு முஸ்லிம் சமூகத்தையும் இக்கட்டான நிலைக்குத் தள்ளும் ஒரு செயலாகும்.

 வேட்டை நிருபர் 



Ai SONGS

 



Post a Comment

0 Comments