
கேள்வி:
நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள, இன்றைய சூழலில் நோன்பு நோற்பது பயணிக்குச் சிரமத்தை ஏற்படுத்தாது என்ற நிலையில் பயணியின் நோன்பு குறித்த சட்டம் என்ன?
பதில்:
பயணிக்கு நோன்பு நோற்கவும் நோன்பை விடவும் அனுமதியுள்ளது.
‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. ‘ (2:185)
நபித்தோழர்கள் நபி(ச) அவர்களுடன் பயணம் செய்வார்கள். அவர்களில் நோன்பாளியும் இருப்பார்கள்; நோன்பை விட்டவர்களும் இருப்பார்கள். நோன்பை விட்டவரை நோன்பாளி குறை கூறியதுமில்லை. நோன்பாளியை நோன்பை விட்டவர் குறை கூறியதுமில்லை. நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். இது குறித்து அபூதர்(வ) அவர்கள் அறிவிக்கும் போது பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
‘சூடு அதிகமான ஒரு ரமழான் காலத்தில் நாம் நபி அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் நபி(ச) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (வ) அவர்களையும் தவிர மற்றைய எவரும் நோன்பாளியாக இருக்கவில்லை’ என அபூதர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’
(அஹ்மத்: 22039 — 21696)
பயணத்தில் நோன்பு நோற்பதா? இல்லையா? என்பதைப் பயணியே தீர்மானிப்பார். நோன்பு நோற்பது சிரமத்தை அளிக்காது என்றிருந்தால் பயணத்தில் நோன்பு நோற்பதே சிறந்ததாகும். அதில் மூன்று முக்கிய பயன்கள் உள்ளன.
1. நபி(ச) அவர்களைப் பின்பற்றுதல். (நபி(ச) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள்.)
2. இலகுவானது:
மக்களோடு மக்களாக ரமழானிலே நோன்பை நோற்றுவிடுவது இலகுவானதாகும்.
3. விரைவாகத் தனது கடமையை நிறைவேற்றிவிடுதல். (கடமை நீங்கி விடுகின்றது.)
பயணத்தில் நோன்பு நோற்பது அதிக சிரமத்தைக் கொடுக்குமென்றிருந்தால் அது போன்ற சந்தர்ப்பத்தில் நோன்பை விட்டுவிட வேண்டும்.
‘நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரைச் சூழ மக்கள் இருந்து கொண்டு அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவருக்கு என்ன என்று கேட்ட போது இவர் நோன்பாளி என்று கூறப்பட்டது. பயணத்தில் நோன்பு நோற்பதில் எந்த நன்மையும் இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினர்கள். (முஸ்லிம்)
நபி(ச) அவர்கள் இந்தப் பொதுவான வார்த்தையில் இவரைப் போல நோன்பு நோற்பதில் சிரமப்படுபவர்கள் கவனத்திற் கொள்ளப்படுவார்கள்.
இந்த அடிப்படையில் கேள்வி கேட்டவர் குறிப்பிடுவது போல் பயணம் என்பது இலகுவானதே! பெரும்பாலும் பயணத்தில் நோன்பு நோற்பது சிரமத்தைக் கொடுக்காது. பயணத்தில் நோன்பு சிரமத்தை அளிக்காது என்றிருந்தால் நோன்பு நோற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.
(ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்))
கேள்வி:
ரமழானில் நோன்பு நோற்பவர் ஒவ்வொரு நோன்புக்கும் நிய்யத்து வைக்க வேண்டுமா? அல்லது ரமழான் முழுவதுமாக நோன்பு நோற்பதாக எண்ணம் கொள்வதே போதுமானதா?
பதில்:
ரமழானில் முதல் நாளில் கொள்ளும் எண்ணமே ரமழான் முழுவதுக்கும் போதுமானதாகும். ஏனென்றால், நோன்பு நோற்பவர் ஒவ்வொரு நாளும் குறித்த நோன்புக்காகத் தனித்தனியாக இரவில் நிய்யத்து (எண்ணம்) கொள்ளாவிட்டாலும் கூட, ரமழானின் ஆரம்பத்திலே (எல்லா நாளும் நோன்பு பிடிக்க வேண்டும்) என்ற எண்ணம் அவரிடத்தில் இருந்தே உள்ளது.
இருப்பினும் ரமழானின் இடையில் பயணம், நோய், அல்லது வேறு காரணத்தால் நோன்பை விட்டு எண்ணத்தை முறித்துவிட்டால் மீண்டும் புதிதாக நிய்யத்து (எண்ணம்) கொள்வது கட்டாயமாகிவிடுகின்றது. ஏனெனில், அவர் பயணம், நோய் போன்ற காரணங்களால் நோன்பை விட்டு நிய்யத்தைத் துண்டித்து விட்டார்.
(அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்))
(தொடரும்)
தமிழாக்கம் (அபூ அப்னான்)


கட்டுரைகள் | Ai SONGS |

0 Comments