10 வருட சொதப்பல்.. 27 வருடம் கட்டிக்காத்த சாதனையை கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே காற்றில் விட்ட இந்தியா

10 வருட சொதப்பல்.. 27 வருடம் கட்டிக்காத்த சாதனையை கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே காற்றில் விட்ட இந்தியா


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நழுவ விட்ட  இந்தியா சமன் மட்டுமே செய்தது. ஆனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் குவித்து அசத்தியது. 

அதிகபட்சமாக பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, கமிண்டு மெண்டிஸ் 40, வெல்லலாகே 39 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் பட்டேல் 2விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய 68 (44) ரன்கள் விளாசி அற்புதமான துவக்கத்தை கொடுத்தார்.

ஆனால் அவரை அவுட்டாக்கிய ஜெஃப்ரி வண்டர்சே எதிர்புறம் திணறிய சுப்மன் கில்லை 35 ரன்களில் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் விராட் கோலி, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்து போராடியும் 42.2 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா பரிதாபமாக தோற்றது. 

இலங்கைக்கு அதிகபட்சமாக ஜெஃப்ரி 6 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால்  டி20 தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ள இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் இலங்கைக்கு எதிராக விளையாடிய கடைசி 12 போட்டிகளில் (11 வெற்றி 1 டை) தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியா முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

அதை விட 1997க்குப்பின் இலங்கைக்கு எதிராக கடந்த 27 வருடங்களில் விளையாடிய அனைத்து இருதரப்பு தொடர்களிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால் இப்போட்டியில் தோற்றதால் 3வது போட்டியில் வென்றாலும் இந்திய அணியால் இத்தொடரை சமன் மட்டுமே செய்ய முடியும். அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் தொடர்ச்சியாக வென்ற சாதனைப் பெருமையை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்தியா காற்றில் பறக்க விட்டுள்ளது.

ஏனெனில் இந்த தொடரில் 4, 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுலை களமிறக்காமல் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை மாற்றிக் களமிறக்க அவருடைய முடிவு வெற்றியை கொடுக்கவில்லை. அது போக இந்தத் தொடரின் முதல் போட்டியிலும் இந்தப் போட்டியிலும் அடுத்தடுத்து தலா 5 இந்திய பேட்ஸ்மேன்கள் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார்கள். கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தான் அதிகபட்சமாக இப்படி 5 இந்திய பேட்ஸ்மேன்கள் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகியிருந்தார்கள்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post