ஜனாதிபதித் தேர்தலின் மும்முனைப் போட்டி; தமிழ் வேட்பாளரின் வருகை- ஸஜித், அநுர வாக்கு வங்கிகளைப் பாதிக்குமா?

ஜனாதிபதித் தேர்தலின் மும்முனைப் போட்டி; தமிழ் வேட்பாளரின் வருகை- ஸஜித், அநுர வாக்கு வங்கிகளைப் பாதிக்குமா?


இலங்கை ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியான பத்து இலட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில்,  இத்தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப் பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி அல்லது தொழில்நுட்பத் தடை எதுவுமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அறிவித்ததாக PAFFREL அமைப்பின் ஊடகச் செய்தி குறிப்பிடுகின்றது.

இத்தேர்தல் தொடர்பில் சுமார் 50,000 போலீஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 18 வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப் படும்நிலையில் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,* திரு சரத் கீர்த்திரத்ன, திரு ஓஸல ஹேரத், திரு ஏ. எஸ். பீ. லியனகே, திரு சஜித் பிரேமதாச*, திரு பீ.டபிள்யு.எஸ்.கே. பண்டாரநாயக்க, திரு விஜயதாச ராஜபக்ஷ, திரு கே. கே. பியதாச, திரு சிரிதுங்க ஜயசூரிய, திரு அஜந்த டி சொய்சா, திரு கே. ஆனந்த குலரத்ன, திரு சரத் மனமேந்திர, வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரர், வண. அக்மீமன தயாரத்ன தேரர் என்போர் மட்டுமே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அநுரகுமார* மற்றும் தமிழ் மக்களின் சார்பாக ஒருவரும் கட்டுப்பணம் செலுத்தவுள்ள நிலையில், தொழிலதிபர் தம்மிக பெரேரா தேர்தலில் களமிறக்கப்படுவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் அறிய முடிகின்றது. மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இம்மறை ஜனாதிபதிப் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முடிவுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் வந்திருக்கின்றது. இதுவரை சுமார் ஐம்பது பேர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் இன்னும் சில தினங்களில்  இனங்காணப்பட்டு விடுவார்.

சிலவேளை இந்தச் செய்தி தெற்கு அரசியலில் கலக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், 2024 ஜனாதிபதித் தேர்தல் ஓர் இறுக்கமான தேர்தலாகத்தான் இருக்கப் போகின்றது! இவ்விடயத்தில் தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஐக்கியமாகச் செயலாற்றுகின்றார்களோ அந்தளவுக்கு இந்த தேர்தல் தெற்கின்  அரசியல் மாற்றத்திற்கு ஒரு சவாலாக அமையப் போகின்றது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர் களமிறக்கப் பட்டால், ரணிலின் வாக்கு வங்கிக்கு பாரிய பாதிப்பு ஏற்படாவிட்டாலும் கூட, ஸஜித் பிரேமதாச, அனுரகுமார ஆகியோரின் வாக்கு வங்கிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம்!


13வது சட்டத் திருத்தம் பற்றிய அநுரகுமாரவின் கட்சியின் கருத்தில் தமிழ் மக்கள் போதிய நல்லபிப்பிராயம் கொண்டில்லாத நிலையில், தேர்தல் மேடைகளில் அநுரகுமார இதுபற்றிய தெளிவொன்றினை  வெளிப்படுத்துவது உசிதமானது!

அண்மையில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தனக்கு ஆதரவு தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒரே அறிக்கையில் பல தடவைகள் நன்றி செலுத்தியிருப்பதோடு, மேலும் ஐந்து வருடங்கள் தான் ஆட்சியில் நிலைத்து இருப்பதற்காக,  ஏனைய உறுப்பினர்களின் ஆதரவையும் வேண்டியுள்ளார்.
எத்தனை பேர் களத்தில் குதித்தாலும், இம்முறைத் தேர்தலிலும் மும்முனைப் போட்டி ஒன்றுதான் நடக்கப் போகின்றது. 

வழமைபோல பெரும்பான்மை மக்களின் வாக்குகளே ரணில், சஜித், அநுர இம்மூவரில் ஒருவரை வெற்றிபெறச் செய்கின்ற முதற்தேர்வாக இருக்கப் போகின்றது. இந்த மூவரில் எவர் 50 சதவீதமான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் கூட,  அவருக்குக் கிடைக்கப் போகின்ற சிறுபான்மைச் சமூகங்களின் அதிக வாக்குகளே ஜனாதிபதிப் பதவியை நிர்ணயிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post