133 ரன்ஸ்.. சவால் விட்ட வங்கதேசத்தை 5 தோல்விகளுடன் வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. பெரிய சாதனை வெற்றி

133 ரன்ஸ்.. சவால் விட்ட வங்கதேசத்தை 5 தோல்விகளுடன் வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. பெரிய சாதனை வெற்றி


வங்கதேசத்துக்கு எதிரான முதலிரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதைத்தொடர்ந்து 3வது போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் இரவு 7:00 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

ஆனால் மறுபுறம் சஞ்சு சாம்சன் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்காததால் விமர்சனங்களை சந்தித்த அவர் இப்போட்டியில் அதற்கெல்லாம் சேர்த்து வங்கதேசத்தை அடித்து நொறுக்கினார். குறிப்பாக ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் 0, 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 5 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 30 ரன்கள் குவித்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் தம்முடைய பங்கிற்கு வங்கதேசத்தை வெளுத்து வாங்கினார். அந்த வகையில் வங்கதேசத்துக்கு முரட்டுத்தனமாக அடித்த இந்த ஜோடியில் சஞ்சு சாம்சன் சதமடித்து 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 111 (47) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் அரை சதமடித்து 75 (35) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

அவர்களைத் தொடர்ந்து ரியன் பராக் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 34 (13), ஹர்திக் பாண்டியா தம்முடைய பங்கிற்கு 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (18) ரன்கள் குவித்தனர். இறுதியில் ரிங்கு சிங் 8* (4) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 297-3 ரன்கள் குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (முழு உறுப்பு நாடுகளில்) பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது.

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 298 என்ற மெகா இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு மயங் யாதவ் வீசிய முதல் பந்திலேயே பர்வேஸ் ஹொசைன் கோல்டன் டக் அவுட்டானார். அதே போல தன்ஜித் ஹசன் 15, கேப்டன் சாண்டோ 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் 59-3 என சரிந்த வங்கதேசத்திற்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் 42 (25), தவ்ஹித் ஹ்ரிடாய் 63* (42) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் வங்கதேசத்தை 164-7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனையும் படைத்தது.

அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, மயங் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 3 – 0 (3) கணக்கில் இத்தொடரை ஒயிட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றது. குறிப்பாக சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை டெஸ்ட் தொடரையும் சேர்த்து அடித்து நொறுக்கி இந்தியா ஒரு வெற்றியைக் கூட கொடுக்காமல் 5 தோல்விகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post