Ticker

6/recent/ticker-posts

பிரிக்ஸ் மாநாடு: 5 ஆண்டுகள் கழித்து மோதி - ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை - இரு தலைவர்களும் பேசியது என்ன?


மோதி மற்றும் ஷி ஜின்பிங்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இரு தலைவர்களும் 50 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோதி எக்ஸ் பக்கத்தில், “கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தேன். இந்தியா- சீனா உறவுகள் நமது நாட்டு மக்களுக்கும், இந்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்", என்று பதிவிட்டார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதி குறித்து உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதற்கு முன்பாக இவ்விரண்டு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடந்தது.

2022-ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நடந்த ஜி20 கூட்டத்தின் போது இருவரும் சந்தித்துக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவில் 2023-ம் ஆண்டு நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது இருவரும் சந்தித்தனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்தை சந்திப்பு தற்போது நடந்துள்ளது.

இந்தியா கூறியதென்ன?

மோதி- ஷி ஜின்பிங் சந்திப்பிற்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் முழுமையான ராணுவ விலகல் மற்றும் 2020-ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான உடன்படிக்கையை இரு தலைவர்கள் வரவேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் எந்த சூழ்நிலையிலும் அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மோதி தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இருநாடுகளின் சார்பாக சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து எல்லைப்பகுதிகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும் அங்குள்ள பிரச்னைகளுக்கு பரஸ்பர மற்றும் நியாயமான முறையில் தீர்வு காண்பதற்கான வழிகளை கண்டறிவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கூறியதென்ன?

இந்த பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் இந்தியா - சீனா இடையே நிலையான மற்றும் நட்புரீதியான உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியில் தங்கள் பிராந்தியத்தின் பங்கு குறித்து பேசினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு சீனாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "இருநாட்டு உறவை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்னைகளை புரிந்துணர்வுடன் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் இரு நாடுகளும் வலியுறுத்தின. இரு நாடுகளின் முன்னேற்றத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர் ", என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யுக்ரேன் போர் குறித்து மோதி கூறியது என்ன?

ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் முதல் நாள், பிரதமர் நரேந்திர மோதிக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தவிர, இரான் அதிபரையும் பிரதமர் மோதி சந்தித்தார்.

ரஷ்யாவின் தலைமையில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், பொருளாதார ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், அனைவருக்கும் டிஜிட்டல் வசதி உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்படும். மேலும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதும் பரிசீலிக்கப்படும்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

புதினுடனான சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யா-யுக்ரேன் போர் குறித்து பேசினார். அமைதிக்கு தேவையான எந்த உதவியையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார். "ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயான மோதல் குறித்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். வரும் காலங்களில் சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்றார்.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வரும் திட்டங்கள் குறித்து விவாதித்தார். கசானில் இந்தியாவின் துணைத் தூதரகம் திறக்கப்பட்டதை வரவேற்றார்.

அதிபர் புதின் கூறுகையில், "எங்கள் முக்கிய திட்டங்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கசானில் இந்திய துணைத் தூதரகத்தைத் திறக்கும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவின் தூதரக இருப்பு இருநாடுகளின் ஒத்துழைப்புக்கு பயனளிக்கும்" என்று கூறினார்.

"இந்தியாவும் ரஷ்யாவும் பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர்கள் ஆவர். இரு நாடுகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இரு நாட்டின் மக்கள் பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தங்களுக்குள் நிலையான தொடர்பைப் பேணி வருகின்றனர், வர்த்தகத்திலும் வளர்ச்சி உள்ளது.” என்றார்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வேகமாக வளர்ந்துள்ளன என்றும், இந்தியா உடனான உறவுக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் புதின் வலியுறுத்தினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோதியின் ஏழாவது ரஷ்ய பயணம் மற்றும் இந்த ஆண்டின் இரண்டாவது பயணமாகும்.

யுக்ரேன் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, மேற்கு அல்லாத நாடுகளின் வலிமையைக் காட்டுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய பிரதமருக்கும் ரஷ்ய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போது பாதுகாப்பு, எரிபொருள்,அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் கூடங்குளம் அணு உலை திட்டத்தில் மீதமுள்ள மூன்று முதல் ஆறு அலகுகள் அமைப்பது குறித்தும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

சபஹார் துறைமுகத் திட்டம் குறித்து இரானுடன் ஆலோசனை


இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடனான சந்திப்பில் சபஹார் துறைமுகம் குறித்தும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதை குறித்தும் பிரதமர் மோதி பேசியதாக இந்திய வெளியுறத்துறை செயலாளர் கூறினார்.

மேலும் மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது, இது குறித்து பிரதமர் மோதி கவலை தெரிவித்தார்.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செயலாளர், பிரிக்ஸ் விரிவாக்கத்தை இந்தியா எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்று கூறினார். கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த புதிய நாடுகள், அவர்களை இணைத்ததில் இந்தியாவின் பங்கைப் பாராட்டியதாக அவர் கூறினார்.

2006-ஆம் ஆண்டு பிரிக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிக் (BRIC) என்பது பிரேசில் (B) ரஷ்யா ( R ) இந்தியா (I) , சீனா (C ) ஆகிய நாடுகளை உறுப்பினராக கொண்டது. 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணந்த பிறகு, பிரிக் என்பது பிரிக்ஸ் (BRICS)என்றானது.

இதன் நோக்கம் உலகின் முக்கியமான வளர்ந்து வரும் நாடுகளை ஒன்றிணைப்பதாகும். இதன் மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசியல் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்பப்பட்டது.

எகிப்து, எத்தியோப்பியா, இரான், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிக்ஸ் வலிமை பெறுமா?


பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, அதன் பெயர் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு 'பிரிக்ஸ் ப்ளஸ்' என்று அழைக்கப்படலாம்.

இந்த குழுவில் உள்ள நாடுகளின் மொத்த மக்கள் தொகை 3.5 பில்லியன், இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதமாகும்.

இந்த உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்களின் மதிப்பு 28.5 டிரில்லியன் டாலர் ஆகும். இது உலகப் பொருளாதாரத்தில் சுமார் 28 சதவீதமாகும்.

இரான், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் உலகின் மொத்த கச்சா எண்ணெயில் 44 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு பணம் வழங்கும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருப்பதாக பிரிக்ஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் முக்கிய குரலாகவும், பிரதிநிதியாகவும் பிரிக்ஸ் இருக்க விரும்புகிறது.

2014-ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கியைத் தொடங்கின. 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள், புதிய சாலைகள், பாலங்கள், ரயில் மற்றும் நீர் வழங்கல் திட்டங்களுக்காக வளர்ந்து வரும் நாடுகளுக்கு கிட்டத்தட்ட 32 பில்லியன் டாலரை வழங்கியுள்ளது.

இதுதான் பிரிக்ஸ் அமைப்பில் சீனாவின் முக்கிய இலக்கு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரிக்ஸ் நாடுகளுக்கான தனி நாணயம் தேவையா?

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க, பிரேசில் மற்றும் ரஷ்யாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பிரிக்ஸ் நாடுகளுக்கு தனியாக ஒரு நாணயம் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இது 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை.

பிரிக்ஸ் நாடுகளுக்கு தனியாக நாணயம் உருவாக்கிக் கொள்வது எளிதானது அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும் எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகத்துக்கு என தனியாக நாணயம் அல்லது கிரிப்டோகரன்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

டாலர் அல்லாமல் உள்ளூர் நாணயத்தை வர்த்தக்கத்துக்கு பயன்படுத்தினால் புவிஅரசியல் காரணமாக எழும் ஆபத்துகளை குறைக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவுக்கும் அதன் முக்கிய வர்த்தக நாடான சீனாவுக்கும் இடையில் 95% பரிமாற்றங்கள் ரூபிள்ஸ் மற்றும் யுவானில் நடைபெறுகிறது என்று கடந்த ஆகஸ்ட் மாதம், ரஷ்ய பிரதமர் கூறியிருந்தார்.

யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கு நாடுகள் பலவிதமான தடைகளை விதித்திருந்தனர்.

2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு பிறகு, ரஷ்யாவின் 325 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது.

இவை ஒவ்வொரு ஆண்டும் மூன்று பில்லியன் டாலர் வட்டி ஈட்டக்கூடியவை ஆகும்.

bbctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments