Ticker

6/recent/ticker-posts

Ad Code



ChatGPT உருவாக வழிவகுத்த கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு


இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) அன்று அறிவித்தது.

“இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அரச அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையை இவர்கள் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

ChatGPT-க்கு வழிவகுத்த கண்டுபிடிப்பு

செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களில் ஜாஃப்ரி ஹின்டனின் முன்னோடி ஆராய்ச்சி ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உருவாக்கப்பட வழிவகுத்தது.

செயற்கை நுண்ணறிவில், நரம்பியல் வலைப்பின்னல்கள் என்பவை மனித மூளையைப் போலவே தகவல்களைக் கற்றுக்கொள்வது மற்றும் செயலாக்குவது போன்ற அமைப்புகளாகும்.

ஒரு மனிதரைப் போலவே, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இந்த நரம்பியல் வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு உதவுகின்றன. இது ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) என்று அழைக்கப்படுகிறது.

செயற்கை நினைவுக் கட்டமைப்பு

தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவறைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார்.

ஜாஃப்ரி ஹின்டன், இந்தத் தரவுகள், படங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காணும் முறையைக் கண்டுபிடித்தார்.

ஜாஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார்.

“இந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவர்கள் இயற்பியலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன,” என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸின் உறுப்பினர் ஆண்டர்ஸ் இர்பாக் தெரிவித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் அணு இயற்பியல், விண்ணியல், காலநிலை மாற்றம், சோலார் செல்கள், மருத்துவ ஸ்கேன்கள் எனப் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

பரிசு வென்ற ஜாஃப்ரி ஹின்டன், தொழில் புரட்சி எப்படி மனிதர்களின் உடல் வலிமையை மீறிச் சென்றதோ, அதேபோல் தங்கள் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் அறிவு வலிமையை மீறிச் செல்ல உதவின என்றார்.

ஆனால் இந்தக் கட்டமைப்புகள் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயமும் உள்ளது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தொலைபேசி மூலமாகக் கூறினார்.

"நான் கணிப்பது என்னவென்றால் 5 முதல் 20 ஆண்டுகளுக்குள், AI முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்ற சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்", என்று ஜாஃப்ரி ஹின்டன் கூறினார்.

கடந்த ஆண்டின் இயற்பியல் பரிசு

கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.

அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து நாம் புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்தது. பியர் அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன் லூயே ஆகிய 3 விஞ்ஞானிகள் அந்தப் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பதிவு செய்யவும், புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

bbctamil



 



Post a Comment

0 Comments