Ticker

6/recent/ticker-posts

Ad Code



’சமய மரபுகளை அவமதிக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளோம்’


கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகையிலும் நியாயப்படுத்தப்படக்கூடிய ஒன்றல்ல. இது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மிகவும் கொடூரமான ஒரு தீர்மானம். ஒரு மரணத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்படும் சம்பிரதாயங்கள் மூலம் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தவும் துக்கத்தைக் குறைக்கவும் முடிகிறது. அதனால்தான் இதற்கு சமய ரீதியான பெறுமானம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இத்தகைய மரபுகள் மிகவும் முக்கியமானவை. இப்படியான சந்தர்ப்பத்தில் இத்தகையதொரு கொடூரமான தீர்மானத்தை மேற்கொண்டமையை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. அதற்கு அரசியல் அல்லது வேறு எந்த நியாயமும் செல்லுபடியாகாது. விஞ்ஞான அடிப்படையின்றி இதுபோன்றதொரு தீர்மானத்தை மேற்கொள்வது நியாயமற்றது. அதனால், எந்த ஒரு பிரிவினருக்கும் இதுபோன்ற துன்பத்தை ஏற்படுத்தும் அல்லது சமய மரபுகளை அவமதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எமது அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது.

ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அது அப்போதைய அரசியல் கலாசாரத்தின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் என்று நாம் நினைக்கிறோம். அந்த கலாசாரத்தை நாம் மாற்றுவோம். மீண்டும் மக்களைப் பாதிக்கும் இவ்வாறான தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க இடமளிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். 

tamilmirror



Post a Comment

0 Comments