Ticker

6/recent/ticker-posts

Ad Code



"அமாவாசைக்கு மட்டும்தான் திருடுவேன்!" - குமரியை அச்சுறுத்திய கொள்ளையன்..


பண்ணுவது முழுக்க திருட்டு வேலையாக இருந்தாலும், அதுக்கு முன்னாடி சாமியை துணைக்கு கூப்பிடுவது போல் வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பார். சேம்… இதே ஸ்டைலில் திருடுவதற்கு முன்னாடி முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு திருடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரபல அமாவாசை கொள்ளையன் சுந்தர்ராஜ். அம்மி கொத்தும் தொழிலாளியாக வாழ்க்கை தொடங்கியவர் திருடியே தொழிலதிபரான கதைதான் அது.

கடந்த ஜூலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அப்படியொரு சம்பவத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கதவை சத்தமில்லாமல் நெம்பி உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்து தப்பியோடியுள்ளார். அதன் விசாரணை முடிவதற்குள் கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியிலும் பூட்டிக் கிடந்த வீடுகளில் கொள்ளை நடந்தது. இந்த இரண்டும் அமாவாசை இருட்டு நேரத்தில் அரங்கேறியது.

நைட் பீட் போலீசாரின் கண்காணிப்பிற்கும் இடையே சுமார் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த மர்ம நபர் 40 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் என மெகா திருட்டில் ஈடுபட்டுள்ளார். லுங்கி, சட்டை அணிந்து கையில் கம்பி கட்டப்பையுடன் வரும் நபர் திருட்டில் ஈடுபட்டது சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. தொடர் விசாரணையில் திருட்டின் பின்னணி குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

குளச்சலில் இருந்து நித்திரவிளை சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய திருடன், அங்குள்ள முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு பின்னர் களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் ரயில் நிலையம் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து குளச்சல் தனிப்படை போலீசார் 5 மாதங்களாக கேரளாவில் முகாமிட்டு திருவனந்தபுரம் முதல் கொல்லம், எர்ணாகுளம் வரை 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கொள்ளையன் பேருந்தில் ஏறி கோயம்புத்தூர் சென்றது உறுதியானது. உடனே கோவை விரைந்த போலீசார் திருடனின் புகைப்படத்தை வைத்து வலைவீச வசமாக பிடிபட்டார். கொள்ளையன் மதுரையைச் சேர்ந்த 60 வயதான சுந்தர்ராஜ் என்பது தெரியவந்தது.

அம்மி கொத்தும் தொழில் செய்து வந்த சுந்தர்ராஜ் அதீத மிக்ஸி கிரைண்டர் வருகையால் தொழில் இழப்பு ஏற்பட்டு குடும்பத்தினருடன் வறுமையால் வாடியுள்ளார். வறுமையை போக்க 5 வருடங்களுக்கு முன் திருட்டு தொழிலில் இறங்கியவர் நைட் பீட் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அமாவாசை இரவு நேரத்தில் மட்டுமே திருட்டில் ஈடுபடுவார்.

தனி ஆளாக கொள்ளையில் ஈடுபடும் இவர், கதவை நேக்காக திருடுவதில் கைத்தேர்ந்தவர். திருடியதும் எல்லையை விட்டு வெளியே தப்பிக்க மாட்டார். கொள்ளையடிக்கும் பகுதியிலேயே புதர்களுக்கிடையே பதுங்கி தூங்கி விட்டு காலையில் எழும்பி கட்டை பையுடன் கூலி தொழிலாளி போல நடந்தும் பேருந்தில் ஏறி வேறு பகுதிக்கு சென்று விடுவார்.

அமாவாசை கொள்ளை முடிந்தவுடன் கேரளா வழியாக தப்பி கோவையில் உள்ள மகன் வீட்டில் பதுங்கிக் கொள்ளையடித்த நகைகளை விற்று பணமாக்கிய பின்னர், சொந்த ஊரான மதுரைக்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

வறுமையில் இருந்த தான் புதிதாக பங்களா வீடு கட்டி வருவதாகவும், கார், லாரி, குட்டியானை ஆட்டோ வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழிலுடன் கயிலான்கடை தொழிலும் செய்து, சொந்த ஊரில் தொழிலதிபர் போல வலம் வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து அமாவாசை கொள்ளையன் சுந்தர்ராஜை கைது செய்த குளச்சல் போலீசார் அவர் கொள்ளையடித்த 40 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டதோடு சுந்தர்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

news18



Post a Comment

0 Comments