இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆரம்ப முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 12.5 ஓவரில் 133-3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக அதிரடியாக விளையாடி 79 (34) ரன்கள் குவித்தார்.
அவருடன் சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா 19 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்கள். அதனால் 1 – 0* (5) கணக்கில் இந்தியா இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை கட்டுப்படுத்தி முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதால் இங்குள்ள ஆடுகளத்திற்கு தகுந்தாற்போல் தாம் பழகி விட்டதாக வருண் கூறியுள்ளார். மேலும் பவுன்ஸ் வைத்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஆட்டநாயகன் விருது வென்றாலும் இன்னும் தாம் முன்னேற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது போன்ற பிட்ச்களில் ஐபிஎல் தொடரில் விளையாடி நான் பழகியுள்ளேன். இது போன்ற ஆடுகளங்களில் குறிப்பிட்ட லென்த் எனக்குத் உதவிகரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்”
“பந்தை பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பகுதிகளிலிருந்து நான் வெளியே வைக்க முயற்சிக்கிறேன். இந்த மைதானத்தில் ஒவ்வொரு ஓவரும் பந்து வீசுவதற்கு சவாலாக இருக்கும். கடைசி ஓவர் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் கடவுளின் அருளுடன் நான் வெற்றிகரமாக செயல்பட்டேன். பேட்ஸ்மேன்களை நான் சைடு ஸ்பின் வாயிலாக தோற்கடிக்க முடியாது. அவர்களை பவுன்ஸ் வைத்து தான் வீழ்த்த முடியும். இப்போதும் 10க்கு 7 அளவுக்கே நான் அசத்தியுள்ளதால் இன்னும் உழைக்க வேண்டியது உள்ளது” என்று கூறினார்.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments