அண்ணா பல்கலைக்கழக மாணவி தவிர, பாலியல் பாதிப்புக்கு உள்ளான மேலும் 3 பேர் யார்? என ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) வெளியானது குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் ஞானசேகரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரனால் மேலும் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அந்த 3 பெண்கள் யார்? என்று ஞானசேகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இன்னொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அந்த சார் யார்? என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதுதொடர்பாகவும் ஞானசேகரனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் வெளியானது எப்படி? என அபிராமபுரம் மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் தலைமைக் காவலரிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதோடு, ஞானசேகனின் செல்போனில் பதிவான ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்கள் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தி வரும் விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
hindutamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments